22/04/2012

ஜாதி மற்றும் வர்ணாசிரமம்இந்தியாவையும்,இதன் தொன் மதத்தையும் குறைசொல்ல நீதிநூல்களில் காணப்படும் வர்ணாசிரமம் பற்றியகுறிப்புகளும்,சமுதாயத்தில் காணப்படும் ஜாதி முறையும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.ஆகவே அதைப்பற்றி இங்கு சற்று ஆராயலாம்

முதலவதாக,இந்த ஜாதி பிரிவுகள் எப்படி ஏற்பட்டன எனப்பார்ப்போம்

“ஜாதி” என்பது என்ன?

“ஜாதி” எனும் பதம் எங்கிருந்து வந்தது?

எப்பொழுது முதன்முறையாக “ஜாதி” அடிப்படையில் பாரத சமுதாயம் பிரிக்கப்பட்டது?

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆளத்துவங்கிய 1700 களில் ,அவர்களது நிர்வாக வசதிக்காக இம் மண்ணின் மதங்க்களான,வைஷ்ணவம்,சைவம், சாக்த்தம்,காணபத்யம்,கௌமாரம் மற்றும் சௌரம் ஆகிய மதங்களை (ஷண்மதம்) ஒரே பிரிவாகக் குறித்து “ஹிந்து” மதம் எனப்பெயரிட்டனர்.

இந்நிலையில் 1857 ஆம் ஆண்டு நிகழ்ந்த முதல் இந்திய விடுதலைப் போரும், அதற்கும் முன்பிருந்தே மக்கள் ஒன்றினைந்து ஆங்கிலேயருக்கு எதிராகப் பொராடத் தொடங்கி இருந்ததும்,இந்தியாவை அடக்க பல்வறு வழிகளைத்தேட ஆங்கிலேயரைத் தூண்டின.அதன் விளைவு “பிரித்தாளும் கொள்கை”.

இந்திய மக்களைப் பிரித்துவைக்க பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் 1871 ஆம் ஆண்டு முதல் ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தொடங்கி சமுதாயத்தில் குழப்பத்தையும் சச்சரவுகளையும் ஏற்படுத்தி வைத்தனர்.

இந்திய சமுதாயம் 4 வித ஜாதி பிரிவுகளின் அடிப்படையில் அமைந்துள்ளபோது நாம் ஆங்கிலேயரை குறைகூறுவது உங்களுக்கு வியப்பைத் தரலாம்.

இந்திய சமுதாயம் பல்லாயிரம் வருடங்களாக பன்முகத்தன்மை கொண்ட ஜாதி-வர்ண சமூக முறையைப் பின்பற்றி வருகிறது.

“ஜாதி” எனும் வார்த்தையை ஆராய்ந்து பர்த்தால் அதன் பொருள் பிறப்பை குறிக்கும் “ஜனனம்” என்பதைச் சுட்டும்.அதாவது “ஜாதி” என்பது ஒருவர் பிறந்த குடும்பத்தைக் குறிக்கும்,வம்சாவழியைக் குறிக்கும் சொல்லாகும்.

இப்பொழுது மாறுபாட்டுக்கு உரியதாகக் காணப்படும் வர்ணம் எனும் பதத்திற்கு வருவோம், வர்ணங்களில் 4 பிரிவுகள் உள்ளன. அவை, பிராமண,ஷத்ரிய,வைசிய மற்றும் சூத்ர.

“வர்ண” என்றால் பொதுவாக அது நிறங்களைக் குறிக்கும் வார்த்தை ஆகும். ஆகவே இது தோலின் நிறங்களின் அடிப்படையில் அமைந்த பாகுபாடு என புத்திசாலி வெள்ளைக்கார அறிஞர்கள் தவறாகப் புரிந்துகொண்டு (அல்லது வேண்டுமென்றே),அவ்வாறே அக்கருத்தைப் பரப்பிவிட்டனர்.

“வர்ண”  என்பதன் முதன்மைப் பொருள் “தேர்வு” என்பதாகும்,எடுத்துக்காட்டாக பெரியவர்கள் பார்த்து நடத்திவைக்கும் திருமணங்களில் பொருத்தமான பெண் அல்லது பிள்ளையை தேடும்பொழுது விருப்பத்தேர்வுநிலையில் உள்ள பெண் அல்லது பிள்ளையைக் குறிக்கப் பயன்படுவது “வர” எனும் வார்த்தையாகும். ஆகவே ”வர”  மற்றும் ”வர்ண”  ஆகிய்வற்றின் பொருள் விருப்பத்தேர்வு என்பதாகும்.இதிலிருந்து ”வர்ண”  என்பது ஒரு தனிமனிதனின் விருப்பத்தேர்வுக்கு உட்பட்டது என்பது புலனாகும்.

எந்த ஒரு தனிமனிதனும் தனது விருப்பத்தின்படி மேற்குறிப்பிட்ட 4 வர்ணங்களில் ஏதேனும்ஒன்றைத் தெரிவுசெய்து கொள்ளலாம் எனும் நிலையே பண்டைய இந்தியாவில் இருந்தது.

ஜாதி-வர்ண அமைப்பில், ஜாதி ஒருவருடைய குடும்பத்தை, பிறப்பை, வம்சத்தைக் குறிக்கக்கூடியது.ஆகவே ஒருவரது வாழ்க்கை முழுவதும் மாறாதது. வர்ணம் ஒருவர், தனது விருப்பத்தைப் பொருத்து தேர்வு செய்யக் கூடியது. இவ்வாறுதான் இந்த சமுதாயம் அமைக்கப்பட்டு கடந்த 5000 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்துள்ளது.

ஒரு குறிப்பிட்ட ஜாதியில் பிறந்த ஒருவர் தனது பெற்றோர் கடைபிடித்த வர்ணத்தை,தனது ஜாதியைச் சார்ந்த பலர் மேற்கொண்ட வர்ணத்தைக் கடைபிடிப்பது இயல்பு, அதனால் ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சார்ந்தபலர் ஒரு குறிப்பிட்ட வர்ணத்தைக் கடைபிடித்தனர் இதனாலும் ஜாதி-வர்ண அமைப்பு பற்றி குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஒருவர் எந்த ஜாதியில் பிறந்து எந்த வர்ணத்தை மேற்கொண்டாலும் அதிலிருந்து விருப்பப்பட்ட வர்ணத்திற்கு மாறிக்கொள்ளலாம் எனும் நிலை நமது சமுதாயத்தில் இருந்து வந்துள்ளது.


மேலும் வர்ணப்பிரிவு என்பது செய்யும் தொழிலின் அடிப்படையில் அமைந்த ஒன்றாகும். மேற்கண்ட நடைமுறை மூலம் சமுதாயத்திற்கு வேண்டிய தொழில் அறிவு இடையறாது பேணப்பட்டு வந்தது.


நமது வரலாற்றில் ஒரு வர்ணத்திலிருந்து வேறு வர்ணத்திற்கு மாறிய மாமனிதர்கள் பலர் உள்ளனர்- மாமன்னர்கள்,ரிஷிகள்,பெரும் வியாபாரிகள் பலர் இவ்வாறு வந்தவர்கள்தான்.இதையே தமிழ் புலவர் வள்ளுவரும

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ; சிறப்பு ஒவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் 

எனக் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு நெகிழ்வுதன்மை மற்றும் புரிந்துணர்வோடு கூடியதாக இருந்த சமுதாயத்தில் சாதி உணர்வை புகுத்தி குழப்பத்தை ஏற்படுத்தியது ஆங்கிலேயரின் “பிரித்தாளும்” சூழ்ச்சிதான் அதே முறையைப் பயன்படுத்தி தற்போது அரசியல்வா(வியா)திகள் மக்களுக்குள் பிரிவினையைத் தூண்டி வருகின்றனர்.இதனால் எந்த ஜாதிக்காரரும் பலனடைவது இல்லை,பலனடைவது என்னவோ பணம் குவிக்கும் ஊழல் அரசியல்வாதிதான்.

ஆகவே பொதுமக்களாகிய நாம்தான் இந்த சூழ்ச்சி வலைகளில் சிக்காமல் இருக்கவேண்டும்.

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்
பட்டாங்கில் உள்ள படி. _ நல்வழி,ஔவையார்


எனும் ஔவையாரின் வாக்கின்படியும்,திருக்குறள் காட்டிய நெறிபடியும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பது பிறப்பால் வருவதல்ல அது நாம் வாழும் வாழ்க்கைமுறையால் வருவது என்பதை உணர்ந்து நல்வாழ்வு வாழ்வோமாக.

No comments:

Post a Comment