22/04/2012

ஆயுதபூசையும்,தமிழரும்-கருத்தும் விமரிசனமும்


ஆயுத பூசை இந்த ஆண்டும் வந்தது. வழக்கம்போல அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். வழக்கத்துக்கு மாறாக கருணாநிதி, சென்ற ஆண்டைப் போல, ஆரியர் திருவிழா என்று சொல்லவில்லை. திகார் திகிலில் சிக்கி இருப்பதால், சென்ற ஆண்டைப் போல திராவிட பல்கலைக்கழகத்தில் பாடம் படிக்க வேண்டும் என்று யாருக்கும் அறிவுரை வழங்கவில்லை.
இவரின் கலைஞர் தொலைக்காட்சி விடுமுறை தின நிகழ்ச்சி என்று தன் சிறப்பு மசாலாக்களை ஒளிபரப்பியது.
கருணாநிதி குடும்பத்தைப் பொறுத்தவரை திராவிட- ஆரியப் பித்தலாட்டம் எப்பவும் அரசியலுக்குத்தானே தவிர, குடும்ப நிறுவனங்களின் வியாபார ஆதாயத்துக்கு ஒரு நாளும் குறுக்கே நின்றது கிடையாது.
தொன்மையான தமிழ் நூல் தொல்காப்பியம். ஒரு மன்னனையும் அவன் அரசாட்சியையும் எப்படி புகழ்ந்து பாட வேண்டும் என்று இலக்கணம் வடித்துள்ளது. “”உளியின் ஓசை பாடல் அரங்கேற்றம், 50-ம் திரைப்பட கதை-வசனம், பெண் சிங்கம் வெற்றி விழா” போன்றவற்றை எல்லாம் புகழ்ந்து பாடுவதை பிழைப்பாகக் கொள்ளக்கூடாது என்பதற்காக எழுதப்பட்ட இலக்கணம் தொல்காப்பியம். ஆனால், “”பூங்கா கண்ட நவீன தொல்காப்பியர் கருணாநிதி”யின் கண்ணில் படாத, தொன் பெரும் தொல்காப்பியத் திணைக்கு பாடான் திணை என்று பெயர். இதில், “”மானார்ச் சுட்டிய வாண்மங்கலமும்” (பொருள் அதிகாரம் – 91) என்று ஆயுத பூசை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மானார் என்ற சொல்லுக்கு மாண்புடையவர், போர் பயிற்சி பெரும் மாணவர், வெற்றி பெற்றவர் என்றெல்லாம் உரையாசிரியர்கள் பொருள் படுத்துகிறார்கள். ஆனால் அனைவரும் ஒப்புக்கொள்வது, இவர்கள் போர்க் கலங்களை நீராட்டிப் பூசை செய்கிறார்கள் என்பதுதான். இதன் மூலம் ஆயுத பூசை போற்றிப் பாடப்பட வேண்டிய ஒன்று என்று முதல் தமிழ் நூல் குறிப்பிடுகிறது. இப்படி ஆயுத பூசை போற்றிப் பாடப்பட வேண்டும் என்று அறிவுறுத்துகிறது தொல்காப்பியம்.
எதிரியின் கோட்டையை சுற்றி வளைத்து பிடிப்பதைப் பற்றிய விவரத்தைச் சொல்வது உழிஞை திணை. இதில், “”வென்ற வாளின் மண்ணோ டொன்ற” (பொருள் அதிகாரம் – 68) என்று வெற்றி பெற்ற வாளை அபிஷேகம் செய்யும் குறிப்பு உணர்த்தப்படுகிறது. “”உடன் படு மெய்” என்பதற்கு ஆசிரியரும் மாணவியும் இணைவதை உதாரணம் காட்டிய தொல்காப்பியப் பூங்கா எழுதி வக்கிரப் பார்வை பார்க்கும் கருணாநிதிக்கு ஆயுத பூசை எப்படிக் கண்ணில் படும்?
சென்ற ஆண்டு (2010) ஜெயலலிதா ஆயுத பூசை வாழ்த்து தெரிவித்தவுடன், ஜெயலலிதாவை ஆரியர் என்றார் கருணாநிதி. அப்படி என்றால் ஆயுத பூசை கொண்டாடுபவர்களும் ஆரியர்கள்தானே? சங்க இலக்கியமான பதிற்றுப் பத்து, மள்ளர்கள் ஆயுத பூசை கொண்டாடியதை விவரிக்கிறது. ஆயுத பூசையைக் கொண்டாடிய மள்ளர்கள்  ஆரியர்கள்தானே?
“”றொன்மிசைந் தெழுதரும் விரிந்திலங் கெஃகிற்
றார்புரிந் தன்ன வாளுடை விழவிற்
போர்படு மள்ளர் போந்தோடு தொடுத்த
கடவுள் வாகைத் துய்வீ யேய்ப்ப”
என்கிறது பதிற்றுப் பத்து (பாட்டு-66).
மள்ளர்கள் கேடயத்தையும் பூ மாலைபோல் பல வாள்களைக் கட்டி தொங்க விட்டும், அவற்றை பனை நாரினால் தொடுத்த வாகைப் பூ மாலை இட்டும் வணங்கினர் என்ற செய்தியை இந்த பாடல் தெரிவிக்கிறது. இந்தக் குறிப்பின்படி, இந்த விழவு மழைக்காலத்தில் நடந்திருக்க வேண்டும். வாகை மரம் மழைக்காலங்களிலும் பூக்கும் என்று இந்திய தாவரங்களைப் பற்றிய நூலான Flora Indica or Descriptions of Indian plnts,Vol 1 By William Roxburgh,Nathaniel wallich குறிப்பிடுகிறது.
வாகை மலருக்கு வட மொழியில் “சீர்ஷா’ என்று பெயர். அளகாபுரி நகரில், பெண்கள் கடம்ப மலரை தலையிலும் செந்தாமரையைக் கைகளிலும் “சீர்ஷா’ என்ற வாகையைக் காதுகளிலும் அணிந்து கார் காலத்தில் அழகு பார்த்ததாக காளிதாசரின் “மேகதூதம்’ குறிப்பிடுகிறது.
Flora Indica or Descriptions of Indian plants, Vol 1 By William Roxburgh, Nathaniel Wallich தமிழகத்தில், “வள்ளல்’ என்ற சொல்லைக் கேட்டவுடன் நம் நினைவுக்கு வருபவர் அதியமான். இந்த அதியமானுக்கும், தொண்டைமான் என்ற மன்னனுக்கும் போர் மூளும் தறுவாயில், அப்போரைத் தடுக்க தமிழ் மூதாட்டி ஔவையார் அதியமான் அரண்மனைக்குச் சென்றார். தொண்டைமானின் ஆயுதக் கொட்டிலில் போர்க் கலங்கள் நெய் பூசி, அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்ததைப் பார்த்து, தொண்டைமானிடம் அதியமான் அரண்மனையில் உள்ள ஆயுதங்கள் எல்லாம் கொல்லன் பட்டறையில் இருக்கிறது. ஆனால் இங்கோ பூசையில் வைக்கப்பட்டு இருக்கிறதே என்ற கேட்டதாக செய்தி ஒன்று காணப்படுகிறது. அரண்மனைக் கொட்டிலில் ஆயுதங்களுக்கு பூசை செய்யும் பழக்கம் புறநானூற்றுக் காலத்தில் இருந்த விவரம், முழுமையாகவும் முறையாகவும் சங்க இலக்கியம் படித்தவர்களுக்குத் தெரியும். பலருடைய உரைகளை ஒருங்கிணைத்து “சங்கத் தமிழ்’ என்று தனது பெயரில் வெளியிட்டு மகிழ்ந்தவர்களுக்கு எப்படித் தெரியும்?
5-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் கருவூர் புகழ் சோழநாயனார். இந்த சோழ மன்னனின் பட்டத்து யானை, கோயிலுக்கு மலர் கொண்டு சென்ற பக்தன் சிவகாமி ஆண்டாரின் பூக்கூடையைத் தூக்கி எறிந்தது. இதைப் பார்த்த எரிபத்த நாயனார், பட்டத்து யானையையும் அதன் பாகனையும் வெட்டிச் சாய்த்தார் என்கிறது பெரிய புராணம்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அந்த பட்டத்து யானை புரட்டாசி நவமியன்று அபிஷேகம் செய்யப்பட்டு, அழைத்து வரப்பட்டது என்பதுதான். வாகனங்களை ஆயுத பூசை காலங்களில் அபிஷேகித்து, மரியாதை செய்வது 5-ம் நூற்றாண்டுத் தமிழர் மரபு. கி.பி. 897-ம் ஆண்டு திருவக்கரை சந்திரமௌலீஸ்வரர் ஆலயக் கல்வெட்டு, சித்ரா பௌர்ணமி மற்றும் புரட்டாசி ஓணத் திருவிழாக்கள், அபிஷேகத்துடன் கொண்டாடப்பட்டதாக
“”சித்திரை திங்கள் சித்திரையும்
பிரட்டாதி ஓணமும்” என்று தெரிவிக்கிறது. (South Indian Inscriptions, Vol 13, No 317, Archeological Survey of India) புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரம், வளர்பிறை தசமி திதியில் வரும். அதுவே விஜய தசமியாகக் கொண்டாடப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இறையான் நறையூர் (இலவா நாசூர்) கோப்பெருஞ்சிங்கன் கல்வெட்டுகளில், புரட்டாசி ஓணத் திருவிழா ஒரு பிரசித்தி பெற்ற பெருவிழாவாகக் கொண்டாடப்பட்ட தகவல் காணப்படுகிறது. விஜய நகரப் பேரரசு கி.பி. 1336-ல் தோன்றியது என்பது ஓரளவு வரலாறு படித்தவர்களுக்குத் தெரியும். இப்படி இருக்க, நாயக்கர்கள் ஆயுத பூசையைப் புகுத்தினார்கள் என்று சொல்வது கருணாநிதியின் அறியாமையா அல்லது வாடிக்கையான விஷ(ம)த்தனமா?
தான் உய்யா விட்டாலும் கவலையில்லை. உலகத்தின் கடை நிலை மனிதன் உய்தால் போதும் என்று, சமூகத்தின் மிகவும் தாழ்த்தப்பட்டவனுக்கு இறை வழியைப் போதித்த இராமானுசரின் ஸ்ரீபெரும்புதூர் கோயில் கல்வெட்டில், நவராத்திரி கொலு கொண்டாடப்பட்டதற்கான குறிப்பு 16-ம் நூற்றாண்டிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இலக்கியக் குறிப்புகளிலும் கல்வெட்டுக் குறிப்புகளிலும் இடம்பெறும் மள்ளர்களும் (தேவேந்திர குலத்தோர்), மன்னர்களும், புலவர்களும், புரவலர்களும், நாயன்மார்களும், ஆழ்வார்களும் நம் மூதாதையர்களும் தமிழர்களில்லையா?
அறிவாலயத்தால் அங்கீகரிக்கப்படுபவன் மட்டுமே தமிழன், கோபாலபுரத்தாருக்கு எடுக்கப்படுவதே விழா என்று பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டுவிடும் என்று கருதுபவர்களுக்கு இதெல்லாம் எங்கே தெரியப்போகிறது?
நன்றி;பால. கௌதமன்,திணமனி-10/10/2011

No comments:

Post a Comment