22/04/2012

இராமன் எனும் திராவிடன் – சில குறிப்புகள்இராவணன் ஒரு பிராமணன் என்று சொல்லும் வடமொழி நூல் தரவுகளை பல நூல்களிலும் இணையத்தில் கிடைக்கும் கட்டுரைகளிலும் காணலாம். அதேபோல் அனைத்து நூல்களும் இணையக் கட்டுரைகளும் இராமனை ஆரியன் என்றே சொல்லும். ஆரியன், திராவிடன் என்ற சொற்கள் அக்காலத்தில் இனத்தைக் குறிக்கப் பயன்பட்டதா என்பது கேள்விக்குரியது; ஆரிய திராவிட இனவாதம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுந்த மேற்கத்திய இனவாதத்தின் அடிப்படையில் தோன்றிய வாதம் என்று நினைப்பதற்கும் வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. அதனைப் பற்றி வேறொரு நாள் பேசலாம். இந்தக் கட்டுரையில் அந்த வாதத்தை எடுக்கவில்லை.இராமனை ஆரியன் என்றே அனைத்து நூல்களும் சொல்ல, அப்படியே அனைத்து மக்களும் நினைத்துக் கொண்டிருக்க அவனுடைய முன்னோர்களில் ஒருவன் திராவிட அரசன் என்று கூறும் தரவுகளும் இருக்கின்றன என்று காட்ட எழுதப்படும் கட்டுரை இது.

அதற்குள் செல்வதற்கு முன்னர் ஒரு சிறிய முன்னுரை.இராமாயணத்தைப் பொறுத்தவரையில் மக்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

1. இராமாயணம் போன்ற புராண இதிகாசங்கள் முழுக்க முழுக்க கற்பனைக் கதைகள் என்று சொல்பவர்கள் முதல் வகை. இவர்களுக்கு இராமன், இராவணன் போன்றவர்கள் எல்லாம் கற்பனைக் கதையில் வரும் கதை மாந்தர்கள் மட்டுமே. இராமனை மட்டும் கற்பனை என்று கூறிவிட்டு இராவணன் உண்மையில் வாழ்ந்த திராவிட மன்னன் என்று இவர்கள் கூற மாட்டார்கள்;கூறவும் கூடாது.இந்த வகையினருக்காக இந்தக் கட்டுரை எழுதப்படவில்லை.

2. இராமாயணம் போன்ற புராண இதிகாசங்கள் முழுக்க முழுக்க உண்மையானவை என்று எண்ணுபவர்கள் இரண்டாம் வகை. இவர்களுக்காக இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.


3. இராமாயணம் போன்ற புராண இதிகாசங்கள் உண்மையில் நடந்தவற்றின் அடிப்படையில் எழுதப்பட்டவை; பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்தவை என்பதால் பல பகுதிகள் பொய்யோ என்று ஐயுறும் வகையில் திரிந்துவிட்டன; ஆனாலும் இவையெல்லாம் முழுக்க முழுக்க பொய் என்று கூற இயலாது என்று எண்ணுபவர்கள் மூன்றாவது வகையினர். இவ்வகையினருக்காக இக்கட்டுரை எழுதப்படுகிறது.

நீங்கள் எந்த வகை? 

இராமன் இக்ஷ்வாகு குலத்தில் பிறந்தவன் என்பது இராமாயணம் சொல்லும் செய்தி. அதாவதுஇக்ஷ்வாகுஎன்பவன் இராமனின் முன்னோர்களில் ஒருவன். இவன் ஒரு புகழ் பெற்ற அரசனாக இருந்ததால் இவனுடைய வம்சமே இக்ஷ்வாகு வம்சம் என்று புகழ் பெற்றது. இவனுடைய தந்தையின் பெயராக புராணங்கள் சொல்வதுவைவஸ்வத மனு. வைவஸ்வத மனுவின் இன்னொரு பெயர் சத்தியவிரதன். இவனை திராவிட அரசன் என்றே பாகவதம், விஷ்ணு புராணம் முதலிய பல புராண நூல்களும் கூறுகின்றன. தரவாக ஒரே ஒரு எடுத்துக்காட்டை இங்கே காணலாம்.


யசௌ சத்யவ்ரதோ நாம ராஜரிஷிர் த்ராவிடேஸ்வர:
ஞானம் யோதீத கல்பாந்தே லபே புருஷ சேவயா
ஸ வை விவஸ்வத: புத்ரோ மனுர் ஆஸீத் இதி ச்ருதம்
த்வத்தஸ் தஸ்ய சுதா: ப்ரோக்தா இக்ஷ்வாகு ப்ரமுகா ந்ருபா:

பாகவதம் 9.1.2 & 9.1.3


இதன் பொருள்: யார் சத்தியவிரதன் என்ற பெயருடையவனோ இராஜரிஷியான அந்த திராவிட அரசன், இறைவனைத் துதித்ததால் சென்ற கல்பத்தின் இறுதியில் ஞானத்தை அடைந்தான். அவன் விவஸ்வான் என்னும் பகலவனின் மகன் என்பதையும் அவனே வைவஸ்வத மனு என்பதையும் ஏற்கனவே கேட்டிருக்கிறோம். இக்ஷ்வாகு முதலிய அரசர்கள் அவனுடைய மகன்கள் என்பதையும் கேட்டிருக்கிறோம்.

ஆக திராவிட அரசனான சத்தியவிரதன் என்னும் வைவஸ்வத மனுவின் மகன் இக்ஷ்வாகு. அவனுடைய குலத்தில் பிறந்தவன் இராமன். அப்படியென்றால் இராமனும் ஒரு திராவிடன்என்று கூற என்ன தடை இருக்கிறது?இதனைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
அவ்வாரானால் ஆரிய,திராவிட இனக் கொள்கை தவறா?
இராமனை ஆரியஇனத்தான் என திட்டிய புத்திசாலிகளின் வசவு தவறா?

(கூடலிடம்சுட்டு திருத்தப்பட்டது)

No comments:

Post a Comment