22/04/2012

சைவமும்சமஸ்கிருதமும்-5



சம்ஸ்கிருத மந்திரங்கள்

சந்திராங்கத னென்பா னொருவன். அவன் இவ்வுலகத்தரசன். அவன் நாகலோகஞ் சென்றான். நாகரசனும் அவனும் சந்தித்தனர். அந்நாகராசன் அவனை நோக்கி 'நீங்கள் திறந்தெரித் தேத்துந் தேவன் யார்?' என்றான். அதற்கவன் 'கங்கையை முடியிற் சூட்டிக் கவுரியை பாகம் வைத்துப்- பொங்கர வங்கடம்மைப் புரிகுழை யணிந்து பாதச் - செங்க மலத்தை வேதச் சிரத்தினி லிருத்தித் தேவ - ரங்கைகள் கூப்ப நின்ற வவனெம்மை யளிக்குந் தேவே' என்று விடை கொடுத்தான். உடனே அந்நாகராசன் 'சிறியனீ யாயுமென்முன் சிவனது தகுதியெல்லா - மறிவுற மொழித லாலேயருங்களி யெய்து கின்றேன்' என்று கூறி மகிழ்ந்தான். சந்திராங்கதனுக்குப் பல வரிசைகளுங் கிடைத்தன. இச்செய்தியைச் சைவ சமய சிரோமணியாகிய வரதுங்கராமபாண்டிய மகாராசர் தெரிவிக்கிறார். இதனால் சைவசமயத்தின் வியாபகம் புலனாகும்.

பிரமனுலகம், விட்டுணுவுலகம், இந்திரனுலகம் முதலிய வுலகங்கள் பல. அவை சாத்திரப் பிரசித்தம். அங்கும் சீவ வர்க்க முண்டு. பாஷையிருக்கும். அப்பாஷை ஒன்றேயாகலாம், பலவு மாகலாம். அவ்வுலகங்களின் தலைவன் மாரும் ஏனைச் சீவரும் இப்பாரத தேசத்துக்கு வருவர். இங்குள்ள சைவாலயங்களில் பரமசிவனாரை ஏத்தித் தொழுவர். அ·தென்று முள்ள வழக்கம். 'முந்திய தேவர் கூடி முறைமுறை யிருக்குச் சொல்லி.....இமையவர் பரவி யேத்த', 'வேதங்கள் நான்குங் கொண்டு விண்ணவர் பரவியேத்த', 'இந்திரன் பிரமனங்கி யெண்வகை வசுக்களோடு மந்திர மறைய தோதி வானவர் வணங்கி வாழ்த்த', 'வானவரிருக்கொடும் பணிந் தேத்த விருந்தவன்', 'அருமறையால் நான்முகனும் மாலும் போற்றுஞ் சீரானை', 'புடை சூழ்ந்த பூதங்கள் வேதம் பாட', 'அண்டர்தமக் காகமநூன் மொழியும்' என்றது திருமுறை. அவ்வேதாகமங்கள் சம்ஸ்கிருதமே. அவ்வானவ ரனைவரும் அம்மந்திரங்களைச் சொல்லியே துதிக்கின்றனர். அவ்வடிகளிற் காண்க. அரக்கரும் இருக்கு மந்திரங் கொண்டே துதித்தார். 'முன்கைமாநரம்புவெட்டி முன்னிருக் கிசைகள் பாட', 'மந்திரத்த மறைபாட வாளவனுக்கீந்தான்' என்ற திருமுறை காண்க. அவ்வடிகலில் இராவணன் செய்தி கூறப்பட்டது. இவற்றால் சைவ சமயத்தின் வியாபகம் புல னாவதோடு வேத சிவாகமங்களின் வியாபகமும் புலனாகும்.' எண்டிசைகள் கீழுலக மேலுலக மெங்கு - மண்டுமறை யன்றியில் வழங்குவ....' எனப் புராணமும் அதை யாதரிக்கிறது.

சம்ஸ்கிருதம் விண்ணுலகத்துக்கும் பொது - நன்னூல் விருத்தி.

சம்ஸ்கிருதம் விண்ணுலகத்துக்கும் பொது என்றது நன்னூல் விருத்தி. அதற்கு மூலவசனங்கள் வேண்டுமே. மேற்காட்டிய 'முந்திய் தேவர்' என்றது முதல் 'அண்டர் தமக்கு' என்றது வரையுள்ள திருமுறை யடிகளே அவை. இன்னும் கலை விளங்கிய மக்களுக்கும் வானவ ராதியோரும் சந்திக்க நேரும். அப்போது அவர் அம்மொழியிற்றான் பேசிக்கொள்வர். தமயந்தி சுயம்வரம் நடந்தது. அதில் பல நாட்டரச குமாரரும் வானவருங்கூடினர். அவர் பேசிக்கொண்டது அம்மொழியே. அதை இரு மொழி நைடதத்திலுங் காண்க. இதனால் சம்ஸ்கிருதத்தின் வியாபகமும் புலனாகும். ஆகவே அகில புவனங்களுக்குமே உரியதாகிய சைவசமயத்தின் சர்வபிரமாண நூல்களாகிய் வேதசிவாகமங்களை அப்புவனங்களுக்கும் பொது மொழியாகிய சம்ஸ்கிருதத்தில் அச்சமய முழுமுதற் கடவுளாகிய பரமசிவனாரருளிச் செய்தார். இப்பேருண்மை அந்நவீனர் தலையில் ஏறுமா? அவர் தான் தமிழ் வெறி கொண்டலை கின்றனரே.

இனிக், காசுமீரச் சைவர் இராமேசுவரத்துக்கு யாத்திரை வருவர். இராமநாதாலயத்தில் மந்திரங்கள் ஓதப்படும். அவருக்கு அவற்றின் பொருள் தெரிந்திருக்க வேண்டும். தமிழகச் சைவர் காசிக்கு யாத்திரை போவர். விசுவநாதால்யத்திலும் அவை ஓதப்படும். அவருக்கு அவ்ற்றின் பொருள் தெரிந்திருக்க வேண்டும். அவ்விரண்டாலய மந்திரங்களும் பொதுவாயதொரு மொழியிலிருந்தாற்றான் அது சாத்தியமாகும். சைவாலயங்கள் எல்லா மாகாணங்களிலுமுள. அங்கெல்லாம் மந்திரங்கள் ஓதப்படும். அவற்றின் பொருளுந் தெரிந்திருக்க வேண்டும். அதற்காக அம்மொழி அம்மாகாணங்களுக்கும் பொதுவாயிருத்தல் நல்லது. சம்ஸ்கிருதமே அப்படியிருப்பது. ஆகலின் அம்மொழி மந்திரங்களே சகல சைவாலயங்களிலும் ஓதப்பட்டு வரலாயிற்று. திருப்பழுவூர் என்பது ஒரு தலம். அவ்வூர்ச் சிவாலயத்தில் 'அந்தணர்களானமலை யாளரவ ரேத்'துகின்றனர். அவர் சொந்த மொழி மலையாளம். ஆயினும் அம்மொழி மந்திரங்களை அவர் அங்கு ஓதவில்லை. 'வேதமொழி சொல்லி' (அம்) மறை யாளரிறைவன்றன் பாதாமவை யேத்'தியே அர்ச்சிக்கின்றனர். வேதமொழி - சம்ஸ்கிருத மந்திரம். திருச்செந்தூர் முதலிய சில ஆலயங்களுள. அங்கு அம்மலையாளர் வந்து அர்ச்சிக்கின்றனர். அ·தெப்படியோ நேர்ந்து விட்டது. ஆனால் அங்கும் அவர் ஓதுவன சம்ஸ்கிருத மந்திரங்களே. அதையுங் காண்க.

மாகாணந்தோறும் சைவாலயங்களுள, அவற்றை அவ்வம் மாகாணத்துச் சைவர்கள் தம்பொருட் செலவில் நிருமித்திருக்கலாம். ஆயினும் அவ்வெல்லா வாலயங்கலும் வேத சிவாகம விதிப்படிதான் நடந்துவரும். ஒன்றிரண்டில் அவ்விதி சிறிது திறம்பி யிருக்கலாம். அவற்றைத் திருத்திகொள்ள வேண்டும். அவ்வாலயங்களின் பொருட்செல்வம் அவ்வம் மாகாணத்துச் சைவமக்களுக்கே உரியதாகுக. ஆனால் ஒரு மாகாணத்துச் சைவமக்களுக்கு மற்ற மாகாணங்களிலுள்ள சைவாலயங்களும் சேவாயோக்கிமாயிருந்துவர வேண்டும்: இருந்தும் வருகின்றன. அவருக்கு அவற்றைச் சேவிக்கு முரிமை மறுக்கப்படவுங் கூடாது: மறுக்கப்படவில்லை. அவை வேதசிவாகம முறையில் நடந்துவருவதே அதற்கு அனுகூலமாம். அவ்வளவில் அவ்வெல்லா மக்களுக்கும் அவ்வெல்லா வாலயங்களும் பொதுவுடைமையே. அதில் தடையிருக்க முடியாது.



 



இன்னும் இராமன் வடநாட்டான். அவன் பிரதிட்டித்த் சிவலிங்கமே இராமநாதர். நளனும் வடநாட்டானே. அவனே திருநள்ளாற்றுச் சிவாலயத்தைக் கண்டான். இந்திர லோகத்தாரே திருவாரூர்த் தியாகராஜர். சம்ஸ்கிருத வேதம் பிரதிட்டித்ததே திருமறைக் காட்டுச் சிவலிங்கம். தமிழகத்துக்கு வெளியே ஈசான திக்கிலிருந்து வந்தவரே பாண்டியன் மகளை மணந்து சோமசுந்தர பாண்டியரென மகுடந் தரித்துத் தென்னாடுடைய சிவனாகித் திருவாலவாய்ச் சொக்கலிங் ரானார். விநாயகர் வடநாட்டுத் தெய்வமாம். அதனை மெய்யெனக் கொண்டால் அவரும் வடவரே. அவ ரியற்றியதே திருச்செங்காட்டங்குடிச் சிவாலயம். கந்தபுராணக் கந்தரும் வடநாட்டவராம். அதை யொத்துக்கொண்டால் அவ்வடவர் செய்தது திருச்சேய்ஞ்ஞலூர்ச் சிவாலயம். பிரமன், விட்டுணு, இந்திரன் முதலியோர் வேற்றுலகத்தவர். அவர் இத்தமிழகத்தி லாக்கிய சைவாலயங்களும் பல. அவ்விராமன் முதலியோர் தமிழ ரல்லர், தமிழு மறியார். ஆயினுமென்? அவரெல்லாம் சைவசமயத்தினர். பாரத தேச முழுவதும் சைவஸ்தான். ஆதலால் அவருக்கும் அச்சமயம் பற்றித் தமிழகமும் உரியதாயிற்று. இங்கும் அவ்வாலயங்களை அவர் ஆக்கினர். சில சைவாலயங்கள் விண்ணசி விமானங்கள். தமிழகத்துக்கும் அதிலுள்ள சைவாலயங்களுக்கும் உள்ள தொடர்பு இவ்வளவு தான். ஆனால் அவ்வாலயங்க ளனைத்தும் எல்லாச் சைவருக்கும் பொதுவுடைமை. அதனால் தமிழ்ச்சைவர் அவற்றை அவ்வப்போது புதுப்பிக்கின்றனர், எப்போதும் சேவிக்கின்றனர். அவ்வுரிமை அவருக்கு கிடைப்பதாயிற்று. அச்சைவர் தம்மைத் தமிழரென்று மாத்திரஞ் சொல்லிக் கொள்ளட்டும்: அப்போதே அவருக்கு அவ்வுரிமை போயிற்று. அவர் அவற்றுக்கு வெளியிற்றான் நிற்க வேண்டும். மீறுவது பலாத்காரமே. அவற்றின் பொருட் செல்வம் அவருடைய தன்று, சைவருடையதே. தமிழருடையதென வாதிப்பாரு மிருக்கலாம். ஆயினும் அது சைவ சமயத்துக் கெனவே கொடுக்கப்பட்டு விட்டது, பிறகு அவர் அதில் உரிமை பெற முடியாது. அவர் சைவ சமயத்தவராகுக. அவ்வுரிமை பெறலாம்.

மாகாண மொழி மந்திரக் கிளர்ச்சிக்கு மூலம் சமயாபிமான மன்று, மொழி வெறியே. அவ்வாலயங்கள் பொதுவுடைமையா யிருந்து வருவதை அம்மந்திரம் அடியோடு கெடுத்துவிடும் எப்படி? அம்மந்திரம் புகுத்தப்படட்டும்: தமிழகச் சைவருக்கு ஆந்திரச் சைவாலயங்கள் சேவாயோக்கிய மாகுமா? ஆகா. ஏன்? அங்குத் தெலுங்கு மந்திரம் புகுந்திருக்கும். அவருக்கு அம்மந்திரப் பொருள் விளங்காது. ஆந்திரச் சைவருக்குத் தமிழ் சைவால்யங்கள் சேவாயோக்கிய மாகுமா? ஆகா. ஏன்? அங்குத் தமிழ் மந்திரம் புகுந்திருக்கும். அவருக்கு அம்மந்திரப் பொருள் விளங்காது. இப்படியே பிறவும். அப்போதும் அவை பொதுவுடைமையாக வேண்டும்; என் செய்வது? ஒவ்வொரு மாகாண மொழிக்குரிய சைவரும் எல்லா மாகாணங்களின் மொழிகளையுங் கற்க வேண்டும். அது முடியுமா? மேலும் அது தேளுக்கஞ்சிப் பாம்பின் வாயிற்பட்டது போலாம். ஆகவே ஒரு மாகாணத்துச் சைவருக்குப் பிறமாகாணங்களிலுள்ள நூற்றுக்கணக்கான சைவாலயங்கள் சேவாயோக்கியமாகாதபடி அம்மந்திரங் குறுக்கிடுகிறது. அது சைவசமயத்துக்குப் பெருங்கேடு. அக்கேட்டுக்குப் பாமரரும் பண்டிதருமே யிரையாவார். பாமர சகாய நவீனர் அதை யோரார். ஆனால் சம்ஸ்கிருத மந்திரங்களை ஓதுக. அக்கேடில்லை. அவ்வோது கையில் சிவ சங்கர சம்பு ஹர உமா பார்வதி விநாயக சுப்ரமண்ய முதலிய சப்தங்களாவது எங்கும் ஒன்று போல் ஒலித்துக் கொண்டிருக்கும். பாமரர் அவற்றைக் கேட்டு மகிழ்வர். அதுவே அவருக்கிலாபம்.

தமிழ் மந்திரப்பித்து அந் நவீனரை அவ்வளவில் விடாது. அம்மந்திரத்துக் கியைந்த கிரியைகள் வேண்டும். இப்போதுள்ள கிரியைகள் இயையா. அவற்றையுந் தாறுமாறு செய்ய அப்பித்துத் தூண்டும். சைவாலயங்களில் திருவுருவங்கள் பல. அவர் அவற்றுட் சிலவற்றை அகற்றுவர். சிலவற்றை மாற்றுவர். புதிய சிலைகளையும் நடுவரவர். அவற்றுக் கெல்லாஞ் சிறப் பொடு பூசனை வேண்டுமே. அதற்கு விதியேது? முறையேது? அவர் வைத்ததே வரிசை. ஆகவே அச்சிறப்பும் பூசனையுஞ் சீர்குலையும், இனிப் பாவனையின் கதியென்ன? சிவோகம்பாவனை விடை பெற்றுக் கொள்ளும். அவர் தமிழோகம் பாவனையை செய்வார் அந் நவீனர். அப்பாவனைக்கு முத்தித்தானம் தமிழுலகம். அவருக்கு இலயமே யிராது. ஏன்? இலயித்தாலும் அவர் மீண்டும் இங்குதான் வருவார். அவருடைய போக்கு வரவுக்கு முடிவேயில்லை. மீளாப் போக்கிடம் அவருக்கேது? அவரதிர்ஷ்டமே அதிர்ஷ்டம். அவ்வதிர்ஷ்டம் பிறமொழிச் சைவருக்கும் வரவேண்டும்: அந்நவீனரின் கருணையுள்ளம் அது. வந்தால் அச்சைவருக்கும் அவர் மகாணங்களுக்குமுள்ள பந்தத்துக்கும் அந்தமில்லை. இப்படி அந்நவீனரால் வேதாகமோத்த மந்திரங் கிரியை பாவனைகளெல்லாம் நாசமாகும். அம்மட்டோ? தீர்த்த யாத்திரை, தலயாத்திரை முதலியவும் சிவபுண்ணியங்கள். அவற்றிலும் அவர் கொள்ளி வைப்பவரே.

சைவாலயங்களென்பது சமயம் பற்றிய பெயர். மாகாணமொழி மந்திர நுழைவால் அப்பெயர் மறையும். தமிழாலயங்கள் தெலுங்காலயங்கள் முதலிய பெயர்களே பெருவழக்காய் விடும். அவை மொழிபற்றிய பெயர்கள். அந்நவீனர் மொழிக்கே முதலிடங் கொடுப்பர். அச்சமய நிலயங்கள் அப்படிப் பாஷா நிலயங்களாக மாறாலாமா? அதற்கிடங்கொடுப்பது தான் சமய சேவையோ? அன்று அன்று. சமயத்தைப் பாஷையின் கால் மாட்டிற்கிடத்திப் படுகொலை செய்வதே அது. சம்ஸ்கிருதத்துக்கென ஒரு மாகாணமோ இனமோ குலமோ இல்லை. சமயம் பற்றியே அம்மொழி மந்திரங்கள் எங்கும் அங்கீகாரமாயின. ஆகலின் சம்ஸ்கிருதாலயங்களென்றே பெயர் வராது. நாளிதுவரை அப்பெயர் வழங்கவுமில்லை. சைவாலயங்களென்ற பிரசித்தமே எங்கு மாம்.

சைவாலயங்கள் வைணவாலயங்கள், மசூதிகள், மாதா கோவில்கள், பிற சமயங்களின் கோயில்கள் ஆகியவை சமய நிலயங்கள். அவற்றை மொழி நிலயங்களென்னலாமா? பெயரை மாற்றினாற் போதும். பொருளை யபகரிப்பது வெகுசுலபம். நாத்திகத் தமிழரும் அச்சமய நிலயங்களின் பொருட்செல்வத்தில் உரிமை பெற்றுவிடுகிறார். அன்றியும் ஒரு சமயத்தார் இன்னொரு சமயத்தின் நிலயங்களிற் போய் விழுந்து உரிமை கொண்டாடி உழக்குவர். ஏன் செய்யார்? அவரனைவருந் தமிழரே: அந்நிலயங்களெல்லாந் தமிழருடைமையே: அப்படி அவர் தம் செயலுக்கு அம்மொழியின் பொதுமையைப் புகலாகக் காட்டுவர். அம்மொழிப் பொதுமை சைவநிலயங்களையே அதிகம் பாதிக்கிறது. அவற்றின் தலைவர் அவற்றின் பொருளை அன்னிய சமயங்கள் பற்றிய பிரசாரங்கள், நூல் வெளியீடுகள், கட்டடங்கள் முதலியவற்றுக்கெல்லாங் கொட்டிக் கொடுக்கின்றனர். ஏன்? அவையெல்லாந் தமிழாம். அந்நவீனர் பேச்சைக்கேட்டு அப்படி மோசம் போவானேன்? 'தன்கையாயுத முந் தன்கையிற் பொருளும் பிறன் கையிற்கொடுக்கும் பேதையும் பதரே'. அது ராஜவாக்கியம். அத்தலைவர் அதை யோர்க. அந்நவீனர் செயல் இன்னும் பல கேடுகளைத் தர விருக்கின்றது. எதிர்காலத்தைச் சிந்திக்க. முட்டின பிறகு குனிய வேண்டாம். வேத சிவாகமங்களின் ஆட்சிக்கு எல்லையெது? அதுவரை சைவாலயங்கள் பொது. தமிழகத்துச் சைவாலயங்களுக்கு மாத்திரம் தமிழகத்தளவிலா எல்லை? அவ்வளவில் வகுக்க விரும்புகின்றனரவர். அது சைவத் துரோகம். அதைக் களைந்தாக வேண்டும்.

பாரத தேசத்தில் சுதந்திரப்போர் நடந்தது. அப்போது எங்குங் கிளம்பிய கோஷம் வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் என்பன. இப்போது ஜனகணமன, ஜெண்டா ஊஞ்சா என்பன தேசிய கீதங்கள். அவையெல்லாந் தமிழல்ல. அவற்றுக்குப் பொருள் தெரியாத தமிழர் பலராவார். அவர் அவற்றைத் தமிழிற் பெயர்த்தா முழங்கினர்? அந்நவீனராவது அப்படிச் செய்தனரா? அவரும் பிற மாகாணத்ரோடு சேர்ந்து கொண்டு அவ்வயல் மொழிகளையே மண்டை பிளக்கக் கத்தினர். அவ்விஷயத்தில் அவருக்கு அயல்மொழிப் பகைமையுந் தமிழ்மொழிப் பற்றும் மண்மூடிப் போயின. ஆனால் சமய விஷயத்தில் அவர் தமிழ் தமிழ் என்று துள்ளுகின்றனர். ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணம். அவர் நடுநிலை அது. ஆயினும் அவ்வந்தேமாதர ஜெய்ஹிந்த் கோஷங்கள் இத்தேசத்துக்குச் சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தன. அவரும் சுதந்திர புருஷராயினர். அவர் வாயிலும் அத்தேசீய கீதங்களே இப்போதுமுள்ளன. அப்படியே சம்ஸ்கிருத மந்திரங்களும் சைவமக்களுக்குப் பேரின்ப வாழ்வை யெய்துவிக்கவே செய்யும். ஆகலின் சைவாலயங்களில் அவையே ஓதப்படவேண்டும்.

No comments:

Post a Comment