22/04/2012

மனுதர்மம்-2


முந்தைய பாகத்தில் மனு ஸ்மிருதி என்பது என்ன என்பதைப் பற்றியும், அதிலிருந்து சில விளக்கங்களையும் பார்த்தோம். இப்பாகத்தில் மனு ஸ்மிருதி பற்றி மேலும் அலசுவோம்.
பின்வரும் ஸ்லோகங்கள் மனுஸ்மிருதியில் இடம் பெற்றுள்ளன.
‘சூத்ரோ ப்ராமணதாமேதி ப்ராமணஸ்சைதி சூத்ரதாம்
க்ஷத்ரியாஜ்ஜாதவேதம் து வித்யாத்வைச்யாத்ததைவ ச’
அதாவது – ‘சூத்திரன் பிராமணனாகி விடலாம்; பிராமணனும் சூத்திரனாகலாம்; அதே போல், க்ஷத்ரிய மற்றும் வைசிய வர்ணங்களைச் சார்ந்தவர்களின் மகன்களும், மகள்களும் வேறு வர்ணத்தை அடையலாம்’. ஆக, சூத்திரர்கள் வேதம் கற்கக் கூடாது என்று சொல்லும் அதே மனு தர்மம்தான் அவர்கள் வேதம் ஓதும் பிராமணர்கள் ஆகலாம் என்று சொல்கிறது. இதை மற்றோர் விதமாய் சொல்ல வேண்டுமானால், வேதம் ஓத விருப்பம் தெரிவிப்பவன் பிராமணனாக மாறியே அவ்வாறு செய்ய இயலுமேயன்றி சூத்திரனாகவே இருந்து செய்ய இயலாது.  இதில் யாரும் எந்த வகையிலும் தடுக்கப்படவோ ஒடுக்கப்படவோ இல்லை.
அப்ராம்ணாத் அத்யயனம் ஆபத்காலே விதியதே
அனுவ்ரஜா ச சுச்ரூஷா யாவத் அத்யயனம் குரோ:
அதாவது, தவிர்க்க முடியாத காலங்களில் ஒரு பிராமண மாணவன் பிராமணன் அல்லாத குருவிடமிருந்து கல்வி கற்கலாம். அவ்வாறு செய்கையில் அம்மாணவன் அக்குருவிற்கு பணிவிடை செய்ய வேண்டும்.
பிற்போக்கு கண்ணோட்டத்துடன் மனுஸ்ம்ருதியை  அணுகும் முற்போக்குவாதிகளின் கண்களில் முன்னுக்குப்பின் முரணாக தென்படும் இந்த தர்மங்களுக்கு பின்னால் ஆதவனென பிரகாசிக்கும் உண்மை – மனுஸ்ம்ருதி ஜாதி அடிப்படையில் அமைக்கப்பட்டது அல்ல என்பதே.  ஒரு சமூகத்தின் அனைத்து அங்கங்களும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்பட்டால் மட்டுமே சமூக நலன் காக்க முடியும் என்ற கருத்தே இந்த தர்ம நூலின் அடிப்படை. அனைவருமே வேதம் கற்க வந்தாலோ அனைவருமே விவசாயம் செய்யத்தொடங்கினாலோ சமூகத்தில் சீரமைப்பு இருக்க வழியில்லை. வழி வழியாக ஒரு தொழிலை ஒரு குடும்பத்தினர் செய்கையில் அவர்கள் ரத்தத்தில் அது ஊறி விடுமென்று மனுஸ்ம்ருதி கூறுவது முட்டாள்த்தனம். ஆனால் ‘ஜீன்’ எனப்படும் மரபணுக்கள் நம் முன்னோர்களிடம் இருந்து வருகிறது. அதன் மூலமாகவே பல குணங்களை நாம் பெறுகிறோம் என்று ஆங்கிலேயன் கூறினால் அது விஞ்ஞானம்!
எந்த ஒரு தர்ம சாத்திரத்தையும் அதன் உண்மையன பொருளுணரமல் வார்த்தைக்கு வார்த்தை அமல்படுத்துவது நடைமுறைக்கு ஒவ்வாத ஒரு விஷயம்!  அது மனு தர்மத்திற்கும் முற்றிலும் பொருந்தும். மனுவின் நீதிகள் அனைத்தையும் ஒரு அரசன் அமல்படுத்த வேண்டியதில்லை. அந்த ராஜ்ஜியத்திற்கு, மக்களின் வாழ்க்கை முறைக்கு எது தேவையோ அவற்றை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். அவ்வாறே மனுவின் நீதிகளும் கூட வகுக்கப்பட்டுள்ளன.]
நான் முந்தைய பதிவில் சொன்னதுபோல் மனு பிராமணர்களுக்கு சில சலுகைகளை வழங்கினாலும், மிகக் கடுமையான விதிகளை விதிக்கிறான். வேதம் ஓதி, சாஸ்திர முறைப்படி வாழாத பிராமணனை மனு தர்மம் மிகக் கடுமையாக அணுகுகிறது.
‘மற்றவர் பொருளில் விருப்பம் வைத்து, பொய்யைப் பரப்பி, கர்வம் கொண்டு, பொறாமை உடைய பிராமணன் பூனையின் குணம் கொண்டவன். இப்படிப்பட்ட குணமுடைய பிராமணன் நரகத்தில் வீழ்கிறான். பூனை குணம் கொண்ட பிராமணனுக்கோ, விரதமுடையவன் போன்ற வேடம் போடுகிற பிராமணனுக்கோ, வேதங்களை முறையாகப் பயிலாத பிராமணனுக்கோ, நன்னடத்தை கொண்ட எவனோருவனும் ஒரு சிறிய தானத்தைக் கூட செய்து விடுதல் கூடாது. அவ்வாறு செய்தால் தானம் வாங்கியவனோடு சேர்ந்து தானம் கொடுத்தவனும் துன்பத்தையே அனுபவிப்பான்.’
அனைத்திற்கும் மேல் நான்கு வர்ணங்களைத் தவிர ஐந்தாவது பிரிவு என்றொன்று கிடையாது என்பதை மனு தர்மம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது.
அஜ்யேஷ்டாஸோ அகனிஷ்டாஸ ஏதே
ஸம் ப்ராதரோ வாவ்ருது: ஸௌபகாய
(ரிக்)
பொருள்:  உங்க‌ளில் உய‌ர்ந்த‌வ‌ர் தாழ்ந்தவ‌ர் என்று யாரும் கிடையாது. நீங்க‌ள் அனைவ‌ரும் ச‌கோத‌ர‌ர்க‌ளே! என‌வே ஒன்றுப‌ட்டு வாழ்வீர்க‌ளாக‌, மேன்மைய‌டைவீர்க‌ளாக‌!
நன்றி:நேர் கொண்டபார்வையிலிருந்து எடுத்து திருத்தி வெளியிட்டது

No comments:

Post a Comment