22/04/2012

சைவமும்சமஸ்கிருதமும்-6

தமிழ் வெறி

தமிழர் தமிழைப் போற்றுக. அ·தவசியம். ஆனாபோற்றுவதென்பதென்னை? பழம் பேரிலக்கியங்களைக் கற்றல், சுவைத்தல், புத்திலக்கியங்களை யாக்கல் இவையே. தமிழ்ச் சைவரும் அது செய்யாமலிருக்க வில்லை. ஆனால் அவருக்கு அதன் மேலும் ஒரு கடனுண்டு. அது தான் சைவ சேவை. அவர் ஏனைத் தமிழரோடு சேர்ந்துகொண்டு அச்சமயத்தைப் புறக்கணியார். அவர் தமிழெல்லாம் அச்சமயத்தையே மகுடமாகக் கொள்ளும். அவருக்குத் தமிழ் மலர், சைவம் வாசனை; தமிழ் உடல் சைவம் உயிர்; தமிழ் மாது, சைவம் மாங்கல்யம், தமிழ் பெட்டகம், சைவம் அணிகலன்; தமிழ் கண், சைவம் ஒளி. அவ்விரட்டைகளை இணைத்துக் காண்க. இன்னும் சைவரே தமிழைக் கண்டார் தமிழரால் சைவத்தைக் காணவே முடியாது. அப்படிக்கொள்வர் அச்சைவர். ஆனால் அந்நவீனர் போக்கு வேறு. 


வெறி இருவகைப்படும். நேரிய அபிமானம் மீதூர்வது ஒன்று. நேர்மை திறம்பிய அபிமானம் மீதூர்வது மற்றொன்று. இப்பின்னதே அந்நவீனரிடமிருப்பது, அவருக்குஞ் சில தலைவரிருந்தனர். குருமாரும் அவரே. அவரெழுதிய சுவடிகள் சில. அவற்றில் சைவசித்தாந்த தத்துவங்கள் சிறிது விளக்கப்பட்டிருக்கும். அவை சைவநூல்களிலிருந்து எடுக்கப்பட்டன. ஆனால் அவர் அப்படி சொல்லார். அச்சமயம் தமிழ் நூல்களிலிருந்து எடுக்கப்பட்டதாம் ஆகலின் தமிழர் கண்டதாம். அவர் சொல்கிறார். அ·தாவ தென்னை? சைவம் தமிழரை அறிவுடையராக்கவில்லை. அச்சமயஞ்சார்தற்கு முந்தியும் அவர் அறிவுடையராய்த்தா னிருந்தனர். அவ்வறிவே அச்சமயத்தை பின்ன ருண்டாக்கியது என்பதே அது. இப்பகுதி தான் அந்நவீனருக்கு ருசித்தது. அதனால் அவர் தமிழைச் சைவத்தோடு, பிணைத்தே பேசுவர். சைவம் பரவு மிடங்களில் தமிழும் பரவுக, இன்றேல் சைவமும் சிறகொடிந்து தமிழகத்திலே கிடக்க என்கிறா ரவர். அதனால் தமிழுஞ் சைவமும் வாழ்க என முழங்குவர். ஆயினும் அம்முழக்கம் அதிகமில்லை. அவர் தமிழும் சமயமும் வாழ்க வெனவும் முழங்குவர். அதில் சைவம் போய் விடும். சைவம் சிறப்புச் சொல். சமயம் புகுந்து கொள்ளும், சமயம் பொது சொல். அம்முழக்கம் முன்னயதை விட அதிகம். தமிழ் வாழ்க என்பது அவரது மற்றொரு முழக்கம். அதில் சமயமும் போய்விடும். அம்முழக்கம் வானைப் பிளக்கும். ஆனால் சைவம் வாழ்க என அவர் தனித்தெடுத்து முழங்கார். ஏன்?


அவருக்கு நெஞ்சில் சைவம் நஞ்சு; தமிழ் தெய்வம்; ஈ-வே-ரா, வி-என்- ஏ முதல் எல்லாத் தமிழருந் தேவகணங்கள். அவ்வளவிலவர் மகிழுக. இன்னும் சைவம் தமிழர் கண்ட சமயமாகவே யிருக்கட்டும். அதற்காக அவரையும் அத்தமிழையும் பிறமொழிகளுக் குரியார் என்ன செய்ய வேண்டும்? தூக்கித் தலை மேல் வைத்துக் கொள்ள வேண்டுமா? அது செய்ய மாட்டார். அ·தவசியமுமில்லை. ஆனால் அச்சமயம் தமிழின்றித் தமிழரின்றி வியாபிக்கும். அதன் சக்தி அபாரம்.

தமிழ் வெறி வளர்ந்தது. தான் பேசுவது இன்ன தென அவருக்குத் தெரியவில்லை. தமிழரே சிவனைக் கண்டனராம்: அவர் சொல்கிறார். மனிதனே கடவுளை யாக்கினா னென்பர் நாத்திகர். அதில் மனித னென்னு மிடத்தில் தமிழரென்பதையும், கடவுளை யென்னுமிடத்தில் சிவனை என்பதையும், ஆக்கினானென்னுமிடத்தில் கண்டனரென்பதையும் வைத்தார் அந்நவீனர். அவ்வளவு தான். கருத்தில் வேற்றுமை சிறிது மில்லை. அவரும் ஏன் நாத்திகரல்லர்? அவர் சைவ வேடர். ஆனால் நாத்திகநெஞ்சரே.

சில சமயங்களை அச்சமயங்களின் கடவுளர் தந்திருப்பர். சிலவற்றை அவ்வவற்றால் மதிக்கப்பட்ட தனி மனிதர் தந்திருப்பர். அப்படித்தான் எல்லாச் சமயங்களும் சொல்லும். ஹிந்து வென்பது ஒரு சமயமன்று. அதை விடுக. ஆனால் ஓரினத்தால் ஒரு சமயத்தைத் தரவே முடியாது. தமிழரே சைவசமயத்தை உலகிற்குத் தந்தனராம்: போப் என்னும் ஆங்கிலப் பாதிரியார் சொன்னார். அது அவருடைய பாதிரிப்புத்தி. அதனை அப்படியே யெடுத்து அந்நவீனர் விழுங்கினார். இப்போது அதையே தமிழகமெங்கும் அவர் கக்கிவருகிறார். சைவத்தை ஆதியில் இன்ன தமிழ் மகன் தந்தானென அவர் ஒருவனைச் சுட்டிக் கூற வல்லரா/ அவன் பெயர் சொல்லத்தான் அவர் பிறக்கவில்லையே.

கோயில்கள், சிவலிங்க முதலிய திருவுருவங்கள், வழிபடுமுறைகள் முதலியன சாதனங்கள். அவற்றைப் பண்டைத் தமிழரே வகுத்துக் கொண்டனர் என்பர் அந்நவீனர். அவையே முத்தியை யெய்துவிப்பன. அதைக் கொடுப்பவர் பரமசிவனார். ஆகலின் அவரே அவற்றை வகுத்துத் தரவேண்டும். முத்தியை யெய்துதற்குரியரே அத்தமிழரும். அவரும் மலப் புழுக்கள் தான். அவரால் அவற்றை வகுத்துக்கொள்ள முடியாது. அவர் பெயரைச் சொல்லி கொண்டு அந்நவீனரும் புதுமுறையர்ச்சனையை வகுக்க முனைகின்றனர். அம்மலப்புழுக்களாலும் அது முடியாது. சைவம் சிவத்தோடு சம்பந்தம். ஆகலின் சைவருக்குப் பரமசிவனாரேயெல்லாம். அவரே முத்திசாதனங்களை வகுத்தருளியவர். அவற்றின் சமூகமே அவ்வேத சிவாகமங்கள். இசுலாமியருக்குக் குரான் எப்படி? சைவருக்கு அவை அப்படி.
வேதங்கள் ரிஷிகளின் வாக்கு, சிவாகமங்கள் கோயிலர்ச்சகரின் புனைவு, புராணங்கள் பார்ப்பனரின் புளுகு எனப் புலம்புவர் அந்நவீனர். ஆனால் தமிழிலுள்ள சங்க விலக்கியங்கள் முதற் சகல சைவ விலக்கியங்களும் அவ்வேத சிவாகமங்களைப் பரமசிவ வாக்கு, புராணங்கள் பதினெட்டையும் பங்க மில்லாதன என்றே கூறிப் போற்றுகின்றன. புராண சரிதங்கள் திருமுறைகளிலெங்குங் காணப்படும். திருக்குறளும் 'இந்திரனே சாலுங் கரி', 'திங்களைப் பாம்புகொண் டற்று', என்றது. ஆகவே பின் வந்த சைவப் பெரு நூல்கள், தொன்று தொட்டுள்ள சைவ மஹாஜன சமூகம், சைவகுரு பரம்பரை ஆகியவற்றுக்கு அம்முதல் நூல்களின் கெளரவம் அங்கீகாரமே. ஆனால் ' பலவேதமங்கமாறு மறை நான்கவையுமானார்', 'மறைகள் வேதம் விரித்து', 'மறையுடைய வேதம்', 'அருமறையோடாறங்க மாய்ந்து கொண்டு பாடினார் நால்வேதம்', 'வேதமாகி யருமறை....தானே யாகி', எனத் திருமுறையில் சில அடிகள் வருகின்றன. அவர் அவற்றைக்காட்டி வேதம் வேறு மறை வேறு. அவ்வேதம் சம்ஸ்கிருத வேத மாகுக, அம்மறை தமிழ் மறையே என்கிறார். முதலடியில் 'பல வேதம்' என்பது 'அநந்தாவை வேதா:' என்பதற்குத் தமிழ். 'மறை நான்கு' என்பது அவை நான்கான பிறகு பெற்ற பெயர். மற்றை நான்கடிகளிலுமுள்ள 'வேத' மாவது இருக்காதிகள். 'மறை' யாவது உபநிடதங்கள். 'வேதத்து மறை நீ' என்றது பரிபாடல். மறை - உப நிடதங்கள். அந்நூலூரை காண்க. தமிழ் மறையென்ப தொன்றுமில்லை. 
பிறகு அவர் சங்கவிலக்கியங்களைத் தொடுகிறார். அவை சொல்லுவதுதானென்னை? புறநானூறு 'நன்றாய்ந்த நீணிமிர் சடை - முதுமுதல்வன் வாய்போகா- தொன்று புரிந்த வீரிரண்டி-னாறுணர்ந்த வொருமுதுநூல்,' 'கேள்வி முற்றிய வேள்வி யந்தணர்','நாஅல் வேத நெறிதிரியினும்' என்றும், குறுந்தொகை 'எழுதாக் கற்பு' என்றும் திருமுருகாற்றுப்படை 'மந்திர விதி' என்றும், பரிபாடல் 'மாயா வாய்மொழி', 'வேத மாபூண் வையத்தே ரூர்ந்து', என்றுங் கூறின. வேதங்கள் பரமசிவ வாக்கு; அவையே குதிரைகளான சரிதத்தை யுடையன. இத்தனையும் அவ்வடிகளிற் பிரசித்தம். இன்ன பிரமாணங்கள் இவ்விலக்கியங்களில் இன்னும் பல. ஆகலின் அவ்விலக்கியங்களனைத்தும் அப்பேதங்களை அவலம்பித்தனவே. ஆனால் அந்நூல் வேதங்களும் சம்ஸ்கிருத வேதங்கள் தானா? அப்படி அவர் வினாவுவார். இருசுடர் சூரிய சந்திரரே. மூவேந்தர் சேர சோழ பாண்டியரே. நாற் பொருள் அறம் பொருள் இன்பம் வீடுகளே. ஐம்பூதம் பிருதிவி முதலியவே. அத் தொகைப் பெயர்கள் வேறு பெயர்களைக் குறியா. அப்படி நால்வேத மென்பதும் இருக்காதியவற்றையே குறிக்கும். நச்சினார்க்கினியர் கூறிய நால்வேதங்கள் அவற்றின் பூர்வரூபமே. ஆகவே சங்க விலக்கியங்களும் அந் நவீனரை நட்டாற்றில் விட்டது. எஞ்சியுள்ளன மிலேச்ச நூல்கள். அவைதான் அவர்க்குப் பிரமாணங்களாம். அவற்றைக்கொண்டு அவ்வேத சிவாகமங்களின் முதன்மையை அவர் சிதைக்க பார்க்கின்றனர். முடியுமா? அம்மிலேச்ச நூல்கள் மென்முளை. அம்முதல் நூல்கள் வன்மலை.

அவர் கொள்கைக்கு எந்த நூலாவது நூற்பகுதியாவது ஆதரவாயிருக்க வேண்டும். அல்லது அக்கொள்கையைப் புகுத்திக் காட்ட அவற்றில் சந்து பொந்துகளிருக்க வேண்டும். அவைதான் அவர்க்குப் பிரமாணம்.


திருமுறைகள் அதற்கிடமல்ல. ஆகலின் அவற்றுக்கும் அவர் குறை கண்டனர். என்னை? அறிவாராய்ச்சிக்குப் போதுமான சாதனங்க ளகப்படாத காலம் அது; அக்காலத்தவர் அத்திரு முறைகளின் ஆசிரியன்மார்; ஆகலின் அகப்பட்ட வற்றைக் கொண்டுதான் அவரால் பாட முடிந்தது; அ·தவர் குற்ற மாகாது; ஆனால் இப்போது அச்சாதனங்கள் பலவாய்க் கிடைக்கின்றன; புதுக்கருத்துக்கள் உருவாதற்கு அவையே ஏது; திருமுறைகளோடு அக்கருத்துக்கள் மாறுபடக்கூடும்; அதனால் அவற்றைத் தள்ளவேண்டாம் அத்திருமுறைகளை யொதுக்கிவிடலாம். இப்படி வாதிப்ப ரவர். உண்மையில் அவர் அவ்வாசிரியன்மாரின் காலத்தைக் குறை கூறவில்லை; அம்முகத்தால் அவ்வாசிரியன் மாரையும், அத்திருமுறைகளையுமே பழிக்கின்றனர். தம் காலத்தை மதிக்கு முகத்தால் அவர் தம்மையும் தம் சுவடிகளையுமே மதித்துக்கொள்கிறார். எந்த இசுலாமியராவது குரான் விஷயத்தில் இப்படிப் பேசுவரா? மேலும் அந்நவீனர் அம்மிலேச்ச நூல்களைப் பிரமாணமாக்கவேண்டும்; அதற்காகவும் அப்பழிப்பைப் பரப்புகின்றார். ஆனால் உண்மை யாது? அவ்வாசிரியன்மாரினறிவு காலவசமன்று, பிரகிருதி குணவச மன்று, பரமசிவனாரின் திருவருள் வசமானது. ஆகையால் அவரருளிய திருமுறையுபதேசங்கள் முக்காலத்துக்கும் பொருந்தக் கூடிய சத்திமேயாம்.

தமிழ் ஒரு மொழி. அதன் பெயருந் தமிழென்பதே. அம்மொழியும் பெயரும் ஒரு சேரத் தோன்றின. அப்படியே சைவம் ஒரு சமயம். அதன் பெயருஞ் சைவமென்பதே. அச்சமயமும் பெயரும் ஒருங்கு தோன்றின, முன்பின்னகத் தோன்ற வில்லை. அச்சமயம்போல் அப்பெயரும் சர்வகால சர்வஜன சர்வசாஸ்திரப் பிரசித்தம். அப்படியிருக்க அந்நவீனருக்கு மாத்திரம் அப்பெயரில் அசூயை ஏன்? அவர் ஊர்தொறுந் திருக்கூட்டம் ஸ்தாபிக்கின்றனர். அது சைவசமயத் திருக்கூட்டமன்று அதன் பெயர் வேறு. அப்பெயரைப் பார்த்தால் அத்திருக்கூட்டம் சைவசேவை செய்ய வந்ததாகச் சொல்லமுடியாது. அப்பெயர்சேற்றில் நட்ட கம்பம். இழுத்த பக்கமெல்லாம் அது சாயும். அதுவும் சைவ மென்பதன் பிரதிபதமே யென்பாராவார். பிரசித்தமான பெயரை அவர் ஏன் விட்டனர்? அக்கரவு என்றாவது வெளிப்படும். இன்னும் தமிழ்க் கழகத்தை இனிமைக் கழகம், நீர்மைக் கழகம் என வழங்கலாமா? அதற்கு மட்டில் அவ ரிசையார். வடநாட்டில் ஆரியசமாஜம், பிரமசமாஜம், ஸாயிசமாஜம் எனச்சில சமாஜங்களுள. அப்படி யொன்று தமிழகத்திலும் உண்டாக்க வேண்டும். அவராசையது. அதன் விளைவே அத்திருக்கூட்டம். சமாஜம் - கூட்டம். அத்திருக்கூட்டமும் அச்சமா ஜங்களோடு சேரத் தகுந்ததே. அவர் வடவரைவைவர். பிறகு அவர் கொடுக்கைப் பிடிப்பர். மேலும் அச்சமாஜங்கள் அகில பாரதா நோக்கமாவது உடையன. அத்திருக்கூட்டத்துக்கோ தெய்வ முதல் சகலமுந் தமிழ்மொழியே. சைவ மக்களுக்கு அங்கு என்ன வேலை?

அந்நவீனர்பால் இன்ன வெறிகள் இன்னும் பல. இங்கு இவ்வளவு போதும், பிற பின்.

அவருக்கு உபதேசித்தகுருமார் சிலர். அவருள் முக்கியமாவார் இரண்டொருவரே. அவர் போய்விட்டனர். அவர் சீடருள்ளும் பலர் போயினர். எங்கே? 'புத்திவித் தாரந் தன்னற்பொருகலி வசத்தாற் பூண்ட - வித்தையாற் பொருளிச் சிப்பால் வேதத்தின் வழியைவிட்டுக்-குத்திர மார்க்கங் காட்டுங் குரவனும் புதல்வன் றானும் - பத்திர நரகில்வீழ்வர் பன்னிரத் தியானஞ் சான்று' என்றது ஒரு தமிழ். அவரெல்லாம் போயிருக்கு. மிடத்தை அதனால் தெரிக. இப்போதுள்ள அந்நவீனரும் அங்கேதான் போக விரும்புகின்றனரா? அன்றியும் தமிழகத்திற் பெரும் பகுதி அன்றே கடலில் மூழ்கியது. காரணம்? அக்காலைத் தமிழர் செய்த தீவினையே. அத்தீவினை எது? சைவத் துரோகம். இன்றேல் அப்பெருங்கேடு சம்பவித்திராது. அந்நிலம் ஆழ்ந்தது. தமிழறிவு நூல்கள் பல மறைந்தன. தமிழர் பலர் செத்தனர். தமிழென்னுங் கற்பனைத் தெய்வத்தால் அக்கேட்டைத் தடுத்துக் கொள்ளமுடியவில்லை. அதன் தவிப்பு அந்தோ பரிதாபம்! இப்போது சிறுபகுதித் தமிழகமே எஞ்சியுள்ளது. அதுவாயினும் நிலைபெற வேண்டும். அந்நவீனர் செய்யுஞ் சைவத்துரோகம் அச்சந் தருகிறது. அவர் விரைவில் திருந்துக. தமிழை விட்டாலுஞ் சைவஞ் சீவிக்கும். சைவத்தை விட்டால் தமிழுக்குச் சீவனமில்லை.

No comments:

Post a Comment