22/04/2012

வடமொழியும்தென்மொழியும்


தமிழைத் தென்மொழியென்றும் சம்ஸ்கிருதத்தை வடமொழியென்றும் சொல்வது வழக்கம். சிவபெருமானின் உடுக்கை நாதத்தின் ஒருபுரத்திலிருந்து தமிழும் மறுபுரத்திலிருந்து வடமொழியும் தோன்றியதாக புராணங்கள் கூருகின்றன.தென்னாட்டில் இருக்கும் மொழிகளுக்கெல்லாம் அடிப்படை தமிழ் என்றும் வடநாட்டில் இருக்கும் மொழிகளுக்கெல்லாம் அடிப்படை சமஸ்கிருதம் என்றும் கூறப்படுகிறது.ஆனால் வடநாட்டில் வழங்கிவரும் மொழிகளைவிட அதிகஅளவு சமஸ்கிருத மொழிக் கலப்பு தென்னக மொழிகளிலேயே உள்ளது. அதில் குறைந்த அளவு சமஸ்கிருத கலப்பைக்கொண்டிருப்பது தமிழ்மொழி ஆகும்.
தற்பொழுது ஆன்மிக அன்பர்களிடையே வழிபாட்டிற்கும் ஆன்மிக உயர்விற்கும் சிறந்தது தமிழா? சமஸ்கிருதமா? எனும் சர்ச்சை நிகழ்ந்துவருவது வருந்தத் தக்கது. சமஸ்கிருதத்தைப் புறக்கணிக்கவேண்டும் என்று கூறுபவர்கள் அதற்கு ஆதரவாக தமிழ் சான்றோர்களை மேற்கோள் காட்டுவது வழக்கம், உண்மையில் அதை ஒதுக்கிவைக்கும் மனப்பான்மை அச்சான்றோர்களிடத்து ஒருபோதும் இருந்ததில்லை ஒதுக்கிவைக்கவும் முடியாது. வடமொழிச் சொற்களை எப்படி எடுத்துக் கையாளுதல் வேண்டும் என்பதற்கு திருவள்ளுவர்,கம்பர்,திருவாதவூரார் போன்றவர்கள் சிறந்த முன்மாதிரிகளாக உள்ளனர்.
பாரத தேசத்தில் உள்ள எல்லா மொழிகளுக்கும், எழுத்து அமைப்பு சமஸ்கிருத அக்ஷர அமைப்பை அனுசரித்து அமைந்துள்ளன.தமிழ் எழுத்து வரிசையும் இதற்கு விதி விலக்கல்ல. உயிர் எழுத்துக்களும் மெய் எழுத்துக்களும் சேர்ந்து தமிழில் முப்பது எழுத்துக்கள் உள்ளன.சமஸ்கிருதத்திலோ ஐம்பத்தொரு எழுத்துக்கள் உள்ளன. ஆகவே அனைத்துவிதமான ஒலிகளையும் சமஸ்கிருதம் மூலம் உச்சரிக்கமுடிக்கிறது. சமஸ்கிருதத்தின் ஐம்பத்தொரு அக்ஷரங்களைச் சிறப்பித்தே மாணிக்கவாசகர் திருவாசகத்தில் ஐம்பத்தொரு திருப்பதிகங்கள் அமைத்துள்ளார்.
தற்பொழுது தமிழ்மொழி பேச்சுவழக்கில் இருக்கிறது ஆனால் சமஸ்கிருதம் தனிமொழியாக பேச்சுவழக்கில் இல்லை, அதன்பொருட்டே அம்மொழி தாழ்ந்தது என்றுகூறமுனைவது தவறான அணுகுமுறை ஆகும். சமஸ்கிருதம் எந்தக்காலகட்டத்தில் பெருவாரியான மக்களின் பேச்சுமொழியாக இருந்தது என்பது தீர ஆராய்ந்து அறியப்படவேண்டிய விஷயமாக உள்ளது. பேச்சுவழக்கில் இருக்கக்கூடிய எந்த ஒருமொழியும் காலஓட்டத்தினால் மாறுபாடடைவது இயல்பு. ஆகவே உயர்ந்த அறிவியல் உண்மைகளும்,ஆன்மிக அனுபவங்களும் எவ்வித மாறுபாடுகளுக்கும் சிதைவுகளுக்கும் ஆளாகாமல் வழிவழியாக வழங்கப்படவேண்டும் எனும் நமது முன்னோர்களின் உயர்ந்த ஞானத்தினால் அதற்காகவே உருவாக்கப்பட்ட அறிவியல் ஆன்மிக உலக பொதுமொழிதான் சமஸ்கிருதம் என்பது பல அறிஞர்களின் கருத்து.
இவ்வுலகிலேயே மிகவும் பழயது ரிக்வேதம் அது சமஸ்கிருதத்திலேயே அமைந்துள்ளது இதிலிருந்து அதன் தொன்மை புலப்படும். சமஸ்கிருதம் எனும் சொல்லுக்கு தெளிவுறத் திருத்தி அமைக்கப்பட்டது என்பது பொருள்.
ஆறு சமயங்களுக்குண்டான சாஸ்திரங்களும் இன்னும் பல சாஸ்திரங்களும் அம்மொழியில் உள்ளன.
சிவா சகஸ்ரநாமம்
லலிதா சகஸ்ரநாமம்
விஷ்ணு சகஸ்ரநாமம்
ஆகியன அம்மொழியிலேயே உள்ளன , தத்துவங்களே இந்த நாமங்கள் ஒவ்வொன்றுமாக உள்ளன என்று பெரியோர் கூறுகின்றனர்.
“பேர் ஆயிரம் உடைப் பெம்மான் போற்றி”
என்று தமிழ் முனிவர்கள் கூறுவது இவற்றை அங்கீகரிப்பதே ஆகும்.
கல்லும் கரையும் திருவாசகம் தந்த மாணிக்கவாசகப்பெருமான் வடமொழியை வெறுக்கச் சொல்லவில்லை. அவர்தம் காலத்திலேயே தமிழகத்தில் திருக்கோவில்களில் சமஸ்கிருதத்தில் வேதம் பாடப்பட்டுள்ளது. அதை அவர் சிறப்பித்தே கூறியுள்ளார்.
“இன் இசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினார் ஒருபால்
துன்னிய பிணை மலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினார் ஒருபால்
திருப்பெருந்துறை உறை சிவபெருமானே
என்னையும் ஆண்டுகொண்டு இன் அருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.”
என்று எம்பெருமான் முன்னிலையில் ரிக் வேதம் ஓதப்பட்டதை “இருக்கொடு தோத்திரம்” எனப் பெருமைப்படுத்தி உள்ளார்.
மேலும்
“அரியொடு பிரமற் களவறி யொண்ணா” – ஹரி,பிரம்மன்,
“ஈண்டு கனகம் இசையப் பெறா” – கனகம்,
“தூண்டு சோதி தோயற்றிய தொன்மையும்” – ஜோதி
என்று பல இடங்களில் வடமொழி வார்த்தைகளைக் கையாண்டுள்ளார்.
ஆனால் இன்று அவரது சீடர்கள் எனக்கூறிக்கொள்வோர் வடமொழிமீது வெறுப்பை உமிழ்வது புரியாத புதிராக உள்ளது.
தமிழ்மொழி தொன்மையானது, அதிலும் மேன்மையான ஆன்மிக அனுபவங்களைக் கூறக்கூடிய, வாழ்க்கைநெறிகளைக் காட்டக்கூடிய எண்ணற்ற நூல்கள் உள்ளன, அதற்கும்மேலாக அது நமது தாய்மொழி.நமது முன்னோர்களின் அனுபவங்கள் ஒளிவிளக்காக அதில் பொதிந்துள்ளன என்பது அதன் தனிச்சிறப்பு. சமஸ்கிருதாதத்தை உருவாக்கியவர்களும் அவர்கள்தான். மாணிக்கவாசகப்பெருமான் போன்றோர் வடமொழியை வெறுக்கச்சொல்லவில்லை தமிழ்பாக்களை இயற்றி தமிழர்வாழ்வில் ஒளியேற்றிய அம் மகான்கள் வடமொழிப்புலமை பெற்றே இருந்தனர். ஆன்மிக வாழ்வில் முன்னேற விரும்பும் தமிழனுக்கு தமிழும்வேண்டும் சமஸ்கிருதமும் வேண்டும். எதை எங்கு எதற்குப் பயன்படுத்தவேண்டும் என்கின்ற தெளிவும் வேண்டும். இதில் ஒன்றைச் சிறப்பித்து மற்றதை இழிவுபடுத்தமுயல்வோர் பாதை தவறுகின்றனர் என்றுமட்டுமே கூறமுடியும். சரியான பாதையைக் கண்டுகொள்ளுங்கள் வாழ்வில் உயர்வடையுங்கள்.

No comments:

Post a Comment