22/04/2012

சைவமும்சமஸ்கிருதமும்-4


சம்ஸ்கிருதமும் நாத்திகமும்

சம்ஸ்கிருத மந்திரத்தால் நாத்திகம் பரவுகிறதாம். அந்நவீனர் சொல்கிறார். தமிழில் மந்திரமுமில்லை. அது சைவாலயங்களில் எக்காலத்திலும் ஓதப்பட்டதுங் கிடையாது. அவ்வாலயங்கள் தோன்றியது என்று அன்று முதல் இன்று வரை அங்குச் சம்ஸ்கிருத மந்திரமே ஓதப்பட்டு வருகிறது. சைவரான தமிழர் என்றிலிருந்து சைவராயினர் அன்றிலிருந்து இன்று வரை அவர் வீடுகளில் கலியாண முதலிய பலவேறு சைவக்கிரியைகள் நடந்து வருகின்றன. அவற்றில் ஓதப்படுவதும் அம்மந்திரமே. ஆகலின் நாத்திகம் அன்று முதலே பரவியிருக்க வேண்டும். அ·தில்லை. அது பரவத் தலைப்பட்டது சமீபகாலத்திற்றான். மற்ற மாகாணங்களிலும் அம்மந்திரமே ஆட்சி புரிகின்றது. நாத்திகம் அங்குப் பரவவில்லை ஏன்? அங்கும் பரவியிருக்கிற தென்னலாமவர். அதற்கு மாற்றாக மாகாணமொழி மந்திரக் கிளர்ச்சி அங்கும் நடைபெற வேண்டும். அ·தில்லை. அன்றியும் நாத்திகம் பரவியிருப்பது பாமரரிடமா? படித்தவரிடமா? படித்த சிலர் தான் அப்பிரசாரஞ் செய்கின்றனர். அவர் புத்திதான் திருந்த வேண்டும். அதற் கென் செய்வது? தமிழில் ஆத்திக நூல்கள் பல. அவற்றை அவர் படிக்கலாம். அதனால் அவர் புத்தி தெளியும். இன்றேல் அது தமிழ் மந்திரந்தாலுந் தெளியாது. ஆகவே நாத்திகம் பரவுதற்குச் சம்ஸ்கிருத மந்திரங்காரண மன்று.


தமிழ்ச் சைவருக்குந் தமிழும், சம்ஸ்கிருதமும், இரண்டு கண். தெய்வீக சைவ நூல்கள் அவ்விரண்டிலுமுள. ஆகலின் சைவம் அக்கண்ணொளி 'ஆரியத்தொடு செந்தமிழ் பயன்' என்றது திருமுறை. அப்பயனாவது சைவ சமயமே. அச்சைவருக்குச் சம்ஸ்கிருத துவேஷத்தை ஊட்டுக: அம்மொழியிலுள்ள சைவ நூல்கள் தெரியாமற்போம். அவர் அவற்றைத் தெரிந்தாலும் மதியார், தொடார், அம்மொழிமேற்கொண்ட பகைமையாற் பழிக்கவுஞ் செய்வர். அவருடைய கண்ணொன்றை அப்படிப் பொட்டையாக்குவர் அந்நவீனர். அச்சைவருக்குத் தமிழ் வெறியை ஊட்டுக: அம்மொழிச் சைவநூல்களிலுள்ள தமிழே இனிக்கும், சைவத்திற் சுவை தட்டாது. அப்படி அவருடைய மற்றொரு கண்ணையும் அந்நவீனர் பொட்டை யாக்குவர். அவ்விரு வகையாலும் அச்சைவரின் கண்ணொளி முழுக்க மறையும். அவர் 'ஆரியத்தோடு செந்தமிழ்ப் பயனறிகிலா அந்தக' ராவார். அவர் நாத்திக ராதல் எளிது. ஆகவே நாத்திகம் பரவுதற்கு காரணம் யாது? அது தான் அந்நவீனரின் அத்துவேஷ வெறிப் பிரச்சாரங்கள்.

கருப்புச்சட்டைக் கூட்டமே அதற்குச் சான்று. அந்நவீனராலேயே அக்கூட்டம் தலையெடுத்து ஆடிவருகிறது. சம்ஸ்கிருத மந்திரத்தால் நாத்திகம் பரவவில்லை. தமிழ்ச்சைவர் இரு மொழிச் சைவ நூல்களையும் பயிலட்டும். அவரால் நாத்திகம் இருந்துவிடந் தடந்தெரியாமற் போம்.

அந்நவீனர் போல் நாத்திகரும் தமிழர்ச்சனை வேண்டுமென்கிறார். அந்நவீனரின் உள்ளம் பூரிக்கிறது. ஆனால் அவ்வர்ச்சனையால் மனங்கலந்த பத்திவழிபாடு உண்டாகும், நாத்திகந் தொலையும், ஆத்திகம் வளரும் என்பது அந்நவீனர் கருத்து. அ·துண்மையா? ஆயின் அவ்வர்ச்சனை நாத்திக வளர்ச்சிக்குத் தடையே. அதை நாத்திகர் எதிர்க்க வேண்டும்; ஆனால் ஆதரிக்கிறார். ஏன்? அது அகில பாரத சைவ சமூகத்திலிருந்து தமிழ்ச் சைவரைத் துண்டித்துவிடும். எருதுகள் தனித்தையாமாறு பிரிக்கப்பட்டன, புலிதன் காரியத்தைப் பார்த்துக்கொண்டது. அக்கதை பிரசித்தம். அப்படியே நாத்திகப்புலிக்குத் துண்டிக்கப்பட்ட அத் தமிழ்ச் சைவ எருதுகள் இரைதான். அந்நவீனர் அதையறியார். அவ்வர்ச்சனை வந்துவிட்டால் அந்நாத்திகரும் ஆத்திகராய்விடுவராம்: அப்படிச் சொல்கிறா ரவர். அது சைவ மக்களை ஏய்க்கவேயாம். அவ்வர்ச்சனைக் கொள்கை முழுநாத்திகம். ஆத்திக வாசனை தானும் அதிலில்லை. ஒரு சமயக் கொள்கையை இன்னொரு சமயி ஆதரித்தால் ஆதரிக்கிற சமயி தான் அக்கொள்கையையுடைய சமயத்திற் போய் வீழ்கிறான். அக்கொள்கையை யுடைய சமயத்தைச் சேர்ந்தவன், ஆதரிக்கற வனுடைய சமயத்திற் போய விழவில்லை. அதனை யறிக, அம்முறையில் அந்நவீனரே அவ்வர்ச்சனைக் கொள்கையை யாதரித்து நாத்திகச்சேற்றைப் பூசிக் கொள்கிறார். அதனால் நாத்திகத்துக்கு இரை அதிகங்கிடைக்கும். நாத்திகர் மகிழ்வர். ஆனால் ஆத்திக ராகார். இன்னும் தமிழர்ச்சனை யென்பதில் நாத்திகர் விரும்புவது தமிழே. அர்ச்சனை யன்று. அந்நவீனரும் அப்படியே. ஆகலின் அவர் அந்தரங்க நாத்திகரே.

பாமரத்தமிழர் சிறுபகுதியினரா? அவருக்குத் தமிழாவது எழுதப்படிக்கச் சரியாய்த் தெரியுமா? அவர் சம்ஸ்கிருதம் படிப்பதெங்கே? அவர் தம் கொச்சைத் தமிழிற்றானே இறைவனை வேண்டுவர்? அவன் அதனைக் கேளானா? அவருக்கருளானா? அவருக்குச் சம்ஸ்கிருத மந்திரத்தை ஏன் விடான்? இப்படி வாதிப்பர் அந்நவீனர். பாமரர் பண்டதர் எல்லோருமே தம் குறைகளைக் கொச்சைத் தமிழிற்றான் முறையிடுவர். அது இன்றும் நடைபெற்றே வருகிறது. இறைவன் அதற்கிரங்கானென யாருஞ் சொல்லவில்லை. ஊமைகளுக்குக் கொச்சைத் தமிழும் வராது. அவரும் முறையிடுகின்றனர். அவனருள்வதுமுண்டு. அதனைக் காட்டிக் கொச்சைத் தமிழ் மந்திரமும் வேண்டாமென்றால் அந்நவீனர் என்ன செய்வர்? 

பாமரத்தமிழருக்குத் திருமுறைகளுந்தான் ஏன்? அம்மந்திரங்களும் வேண்டாம். அவர் கொச்சைத் தமிழே அவருக்குப் போதும். மனங்கலந்த பத்தி வழிபாடு நிச்சயம். ஆனால் திருமுறை மந்திரங்களால் அர்ச்சிக்க வேண்டுமாம்: அந்நவீனர் சொல்கிறார். அதனால் அப்பாமரத் தமிழரை அவரும் புறக்கணித்தவராகிறார்.

மேலும் சம்ஸ்கிருத மந்திரத்தை வெறுப்பவர் பாமரா? அல்லர். அந்நவீனரே. அவர் பாமரத் தமிழருக்குப் பரிவு காட்டுவதுபோல் நடிக்கின்றனர். அவ்வழிபாட்டிற்கு அம்மந்திரம் தடை: அப்படி அப்பாமரரைக் கொண்டும் சொல்விக்க வேண்டும். தம்கொள்கை வலுக்கும், அவர் நம்பிக்கை அது. அதற்கே அந்நடிப்பு உதவுகிறது. ஆனால் குரான் முதலில் அரபு மொழியில் தோன்றியது. இப்போது அதற்குப் பல பெயர்ப்புகளுள, உலகத்து இசுலாமியரும் பல பாஷையினர். அவருள்ளும் பாமரரே பலர். ஆயினுமென்? அத்தனை கோடிப்பேரும் பயபக்தியுடன் ஓதியும் மதித்தும் வருவது அரபுமொழிக் குரானே. உலகெங்கு முள்ள கத்தோலிக்கரும் பல மொழிகளுக்குரியர் தான். அவருள்ளும் பாமரர் வெகுபேர். இலத்தீன் அச்சமயத்துப் பாஷை. அவரெல்லாம் தம் சமய விஷயத்தில் அம்மொழி வாக்கியங்களையே போற்றுகின்றனர். குரானை வெறுக்கிற பாமர இசுலாமிய ருளரா? இலத்தீனை வெறுக்கிற கத்தோலிக்கப் பாமர ருளரா? அப்படியே சம்ஸ்கிருத வேத மந்திரங்களை வெறுக்குந் தமிழ்ச்சைவப் பாமரரும் இலர். அவர் அவற்றை மதிக்கவே செய்வர். 'அவன் சொல்வது வேத வாக்கா? வேத விதியா? நான் ஏற்றுக் கொள்ள ' என்பது உலக வசனம். அதுவே இன்றும் சான்று. அவ்வேதாகமங்களும் அவரைப் புறக்கணிக்க வில்லை. அவர் பால் வைத்த கருணையாலேயே அவை தோன்றின. அவற்றைக் கற்க. அவ்வுண்மை புலனாம். 

மேலும் அவற்றுக் காசிரியர் பரமசிவனார். அவரொருவரே பரமாப்தர். அவரைக் காட்டிலுமா அந்நவீனர் கருணையுடையார்? ஆனால் பரமசிவனார் கற்றவர் விழுங்குங்கற்பகக்கனி, கல்லார் நெஞ்சில் நில்லார். அவ்வுண்மையை மறுக்க முடியாது. ஆயினும் அவர் பாமரரைப் படிப்படியாயேற்றிப் பண்டித ராக்கியே அவருள்ளத்தில் விளங்குவார்.

உலகத்தில் இரண்டு சமயங்களைக் கலக்க முடியுமா? அவற்றை ஒரே சமய மாக்க முடியுமா? அவை எவனாலும் முடியா. அவ்விரண்டு சமயங்களையும் அக்கலவையழிக்கும். இன்றேல் அக்கலவை மூன்றாஞ் சமயமாகும். அப்படியிருக்க எல்லாச் சமயங்களையுமே கலக்க வேண்டுமாம்: அந்நவீனர் சொல்கிறார். அ·தாவதென்ன? அவற்றையெல்லாம் அழிக்க வேண்டுமென்பதே யாம். அல்லது சமயங்களின் எண்ணைப் பெருக்க வேண்டு மென்பதாம். அல்லது அக்கலவையில் ஏதேனுமொரு சமயத்தைக் கரவாகப் புகுத்த வேண்டுமென்பதாம். அதில் மற்றொரு குறையுமுண்டு. என்னை? எல்லாச் சமயங்களுக்கும் அடிப்படையொன்றே, ஆகலின் எவரும் எச்சமயத்தையும் ஆசரிக்கலாம்: அவர் சொல்வது தது. அது தான் அவருடைய சமரசப் பிரசங்கம். அச்சமரசம் அவருக்கு வெகுப்பிரியமானது. அச்சமரசமாவது யாது? அது தான் விபசாரம். சமய விபசாரமே சமய சமரசம். வரம்பழியாத சைவாசாரமுடையார் பலர். அவரெல்லாம் சைவசமய வெறியராம்: அவர் பிதற்றலது.


கற்பு வரம்புள் நிற்பாள் ஒருத்தி. அதனால் அவள் ஒரே கணவன் பால் ஆசை கொண்டவள். அவளை அக்கணவன்பால் வெறி கொண்டவள் என எண்ணலாமா? அப்படிச் சொல்லிப் பரிகசிக்கிறாள் இன்னொருத்தி. அவள் எப்படிப்பட்டவளா யிருப்பாள்? அப்பரிகாசம் போன்றதே அப்பிதற்றலும். அதனால் சூழ்நிலை கீழ்நோக்கியது. அதற்கிரையானார் அச்சைவருட் சிலர். அவர் அச்சமரசபதத்தைக் கேட்டனர். அது கெளரவார்த்தமுடையது போல் அவருக்குப் பட்டது. அன்றியும் சைவப் பிரமாண சாத்திரங்களை அவரால் அறிந்து கொள்ளமுடியவில்லை. ஏன்? அந்நவீனருக் கேற்ற சுவடிகள் பல. அவற்றை யெல்லாம் அவர் பிரமாணங்களெனக் காட்டினர். அதனால் சைவசமய வரம்பு கலகலத்தது. மேலும் சாத்திர வரம்புள் நின்றே சைவத்தை யாசரிக்க வேண்டும். அதுதான் சைவக்கற்பு. அக்கற்பைக் காத்தலும் அச்சைவருக்குக் கஷ்டமா யிருந்தது. சூழ்நிலையும் அக்கஷ்டத்துக் கேற்புடைய தாயிற்று. ஆகையால் அச்சைவரும் அவ்விபசாரத்தி லிறங்கினர். 'அழிந்த பிறகு அண்ணனோடு போனா லென்ன? தம்பியோடு போனா லென்ன?' அது பழமொழி. அவர் அதைப் புதுக்கினர். அவருட் சிதறலுண்டாயிற்று. சமய மாற்றத்துக்குக் காரணம் பலவாகலாம். ஆனால் சைவருள் வேறு சமயங்களிற் புகுவார்க்கு அவ்வரம்பின் கலகலப்பே காரணம். அச்சிதறியவர் வேறு சமயங்களிற் புகுந்தனர். ஒரு சிலர் நாத்திகருமாயினர்.அதிலென்ன விநோதம்? மேலும் அவரெல்லாம் சைவத்தை விடு வெளியேறியவர். விபசார பிரதி பத மாகிய அச்சமரசம் அம்மட்டில் ஓயவில்லை. சைவசமயமாகிய கிருகத்தில் இருந்து கொண்டே சமயவிபசாரஞ் செய்வாருமுளர். அச்சோரரும் எண்ணற்றபேர். அவரையும் அது சிருட்டித்துவிட்டது. அநியாயம்! இப்படியிருந்தால் நாத்திகம் ஏன் பரவாது?

மனங்கலந்த சிவபத்தி வழிபாடு எங்கிருந்து வரும்? அத்தனை கேட்டுக்குங் காரணம் எது? அந்நவீனரின் அச்சமரசக் கொள்கையே. ஆனால் அக்கேடு சம்ஸ்கிருத மந்திரங்களால் வந்ததாம். அவர் சொல்கிறார். அது பொய்.

சைவ சமயந் தோன்றியது என்று அன்றே அதன் அநுட்டானத்துக் குரிய விதிநியமங்களுந் தோன்றியிருக்க வேண்டும். அது முந்தியும் அவை பிந்தியுந் தோன்றா. அதையாக்கிய பரமசிவனாரே அவற்றையும் ஆக்கினார். அவற்றைவிட்ட மாந்தர் அதனையும் விட்டவரே. தமிழ் மந்திரக் கொள்கைக்கு மூலவசனமே யில்லை. சமீப காலத்துத் தமிழ் வெறியின் விளைவே அக்கொள்கை. அதனால் சம்ஸ்கிருத மந்திரங்களைப் பெயர்த்துக் கோடல், திருமுறைப்பகுதிகளை மந்திரங்களெனக் கோடல், புதுத் தமிழ் மந்திரங்களைச் சிருட்டித்துக் கோடல் ஆகிய குழப்பங்கள் தலை தூக்கின. அக்கோடல்கள் பொருந்துவனவே யாகுக. அவற்றைச் செய்து கொடுப்பதற்கு அதிகாரிகள் வேண்டும். அவராவார் யார்? தனி மனிதரா? குழுவினரா? அவ்வதிகாரத்துக்கு வேண்டப்படும் தகுதி யாது? அ·தவரிடமுண்டா? அவ்வதிகாரம் அவருக்கு எங்கிருந்து கிடைத்தது? மக்களிடமிருந்தா? ஆமெனின், இப்போது சம்ஸ்கிருத மந்திரங்கள் வழக்கத்தி லிருந்து வருகின்றனவே; அவையும் அக்காலை அப்படித்தான் வந்தனவா? எதிர்காலத்திலும் சைவமக்கள் தோன்றுவர். அவரும் தமக்கிஷ்டமான அதிகாரிகளை நியமிக்கலாம். முந்தையோர் கொடுத்த மந்திரங்களை அப்பிந்தையோர் மாற்றுவர். அம்மாறுதல் அடிக்கடி நேரக்கூடும். மந்திரங்களே வேண்டா மென்கிற கட்சியும் உருவாகலாம். அதுவும் பெரும் பகுதி வாக்குச் சீட்டு பெறமுடியும். அதனால் மந்திரங்ளென்பதே மறையும். அவை வல்லாரும் இல்லாற் போவர். சைவாசாரத்திக்குப் பிரமாண சாத்திர சம்மதந் தானே வேண்டும். வெகுஜன சம்மதமும் ஏன்? சாஸ்திரம் ஸ்திரமா? ஜனம் ஸ்திரமா? அவற்றுள் பிரதானமாவதும் எது? அவ்வதிகாரிகள் செய்தனவற்றை மந்திரங்களென எலாதாருமிருப்பர். அவரை யார் என் செய்வர்? அவரவர் தத்தமக் கிஷ்டமான மந்திரங்களை யாக்கிக் கொண்டா லென்னை? இன்னும் அவ்வதிகாரங் கொடுத்தவர் பாமரரும் பண்டிதருமா? பண்டிதர் மாத்திரமேயா? பண்டிதரே யெனின், அவர் தமிழ்ப் பண்டிதரா? சைவ பண்டிதரா?

No comments:

Post a Comment