22/04/2012

சைவமும்சமஸ்கிருதமும்-2



நவீனர்

தமிழகத்தில் தமிழரானவருஞ் சைவசமயத்தினரல்லர். அச்சமயத்துக்குப் பரமதுரோகிகளாயுள்ள தமிழரு மிருந்து வருகின்றனர். அவருங் கணக்கற்றவர். அவரிருப்புந் தொன்று தொட்டது. ஆனால் சைவ சமயத்தினர் அனைவருந் தமிழரே. அவருள் தமிழை வெறுப்பர் யாருமிலர். அதனை விளங்கவைத்த புலவர் பெருமக்கள் பலர். அவரை யெண்ணுக. பெரும் பகுதியனர் சைவரே. அது தெரியவரும். அவர் தமிழை வளர்ப்பார். ஆனால் அத்துரோகத் தமிழரின் துரோகச் செயலும் அவருக்குத் தெரியும். அதற்கு இரையாமாறு தம் சமயத்தை அவர் விட்டுக்கொடார்.

நாத்திகத் தமிழர், சிரத்தையின்றி ஆத்திகம் பேசுந்தமிழர், சம்ஸ்கிருதத்தைப் பழிக்குந் தமிழர், பார்ப்பனரைப் பகைக்குந் தமிழர், எந்த ஆத்திக சமய நூலிலும் சிறிது பயிற்சியுமில்லாத தமிழர், தாழ்த்தப்பட்டவரென்ற வகுப்பாருள் சைவமாதி சமயங்களை யாசரித்தால் உலகில் முன்னேற முடியாதென நம்பிக்கையிழக்குந் தமிழர், எம்மதமுஞ் சம்மதமென்னுந் தமிழர், தமக்கென எதுவுமிலாத தமிழர் எனச் சில தமிழருளர். அவரெல்லாங் கூடினர். அஃதொரு தமிழர் கூட்டம்.

சில காலமாகத் தமிழ்ச் சைவருட் சிலரும் அக்கூட்டத்திலகப்பட்டனர். அவர் நிலையென்ன? அவர் தமிழ்ச் சைவ நூற்களைப் படிப்பர். அவற்றிலுள்ள தமிழைச் சிறிது சுவைப்பர். ஆனால் சைவத்தை அறவே உமிழ்ந்து விடுவர். அவர் திருநீறு பூசிக்கொள்வர், உருத்திராக்கந் தரித்துக்கொள்வர், சமயப் பிரசாரமுஞ் செய்து வருவர். அப்பிரசாரத்திற் சமயமிருக்கும். தமிழ்ச்சமய மிருக்கும், ஆனாற் சைவசமயமாத்திரமிராது.

தமிழ் ஒரு மொழி. சைவம் ஒரு சமயம், ‘மொழி வேறு’, சமயம் வேறு. அவ்வேறு பாட்டை அவர் விடுவர். சைவமென்று சொல்லுதற்கான சந்தர்ப்பங்கள் பல நேரும். அப்போதெல்லாம் தமிழென்றே அவர் சொல்வர். அது சகவாச தோஷமாகும். சைவசமூகம் சைலாயம் சைவாதீனம் முதலிய வெல்லாம் சைவத்தி னுடைமை, சைவத்துக்கே யுரியன. ஆனால் அவை தமிழனுடைமை, தமிழுக் குரியன என்பாரவர். அத்துரோகத் தமிழரின் கை வலுப்பெற அது ஏதுவாகும். மொழிப்பொதுமைபற்றி அவ்வுடைமையையாள, அதிற் பங்குபெற அவர் முற்படுவர். சைவ சமயத்துக்கு அது பெருந்தீங்காகும்.

அச் சைவருக்கு ஒரு குலத்தில் வெறுப்புண்டு. சம்ஸ்கிருதம் அக்குலத்துக்கே யுரியதாம்: அப்படி அவர் மயங்கினர். அதனால் அம்மொழியும் அவருக்குக் கசந்தது. அக்கசப்பே அவரிடம் தமிழ்ப் பற்றாயிற்று. அது நீண்டது. வேதாகம நிந்தையிலும் அவர் இறங்கினார். அந்நூல்கள் சைவ சமயத்துக்குப் பிரமாணவரம்பா யிருந்து வருவன. அவ்வரம்பை யழிக்க அவர் முந்துகிறார்.  கற்புவரம் பழிந்தாள் ஒருத்தி, அவளோடு வாழ்கிறான் அவள் கணவன். அவனால் இல்லறத்தைச் சரியாய் நடத்த முடியுமா? அதன் பயனை அடைய முடியுமா? அப்படியே பிரமாண சாத்திர வரம்பழிந்த சைவம் சைவமாகாது. அதை வைத்துச் சைவ சமூகம் வாழ முடியாது. வாழ்வதாற் பயனுமில்லை. சைவத் துரோகிகளின் செயலே உருப் பெறும். அதற்கு அவ்வரம் பழிப்பே முதற்படி. ஆகையால் அச்சைவரிடம் சைவசமூகம் ஜாக்கிரதையா யிருக்கவேண்டும். இனி அச்சைவர் இந்தக் கட்டுரையில் நவீனர் எனப்படுவர்.

தமிழ் மந்திர மோகம்

ஒவ்வொரு மாகாணத்துக்கும் மாகாண மொழியுண்டு. ஒரு மாகாணத்தில் சமபலமுடைய இரண்டு மூன்று மொழிகளும், மிகச்சிறிய அளவில் வியாபித்த மொழிகளுமிருக்கலாம். பாரத தேசத்தில் மாகாணந்தோறும் சைவாலயங்கள் பல. அவற்றில் பிரதிட்டை, உற்சவம், அர்ச்சனை யாதிய நடைபெறும். அப்போது மந்திரங்கள் ஓதப்படும். அவை சம்ஸ்கிருத வேதாகமங்களி லுள்ளன. வேறெம் மாகாணத்தாரேனும் தம் மாகாண மொழியில் அம்மந்திரங்க ளிருக்கவேண்டுமென விரும்புகின்றனரா? கிளர்ச்சி செய்கின்றனரா? தமிழகத்தில் மாத்திரம் அந் நவீனர் தமிழ் மந்திரங்கள் வேண்டு மென்கின்றனர். தமிழில் மந்திரங்களிருந்தால் அவற்றை எடுத்தாளலாம். இல்லா விட்டால் சிருட்டித்தாளலாம் என்கிறா ரவர். அவரும் இரு வகையினர்.

சம்ஸ்கிருத மந்திரங்களை அறவே நீக்குக என்பர் ஒரு வகையார்.  வழக்கத்திலுள்ள சம்ஸ்கிருத மந்திரங்களு மிருக்கட்டும், அவற்றோடு தமிழ் மந்திரங்களையுஞ் சேர்த்துக் கொள்க என்பர் இன்னொரு வகையார். ஒட்டகம் கூடாரத்தை ஆக்கிரமித்தது. அராபியன் வெளியில் தள்ளுண்டான். அக்கதை பிரசித்தம். இப்பிந்தியார் செயல் அக்கதை போலவே முடியும். ஆகையால் இவர் அம்முந்தியாருக்கு மறைமுகத் துணைவரே. தமிழ் மந்திரப் பற்றென்பது ஒரு மோகம். அது அந் நவீனரைப் பீடித்தது. தமிழவைணவராதி பிறசமயத்தாரு முளர். அவரையும் அது தொட்டதோ என்னவோ?

தமிழ் மக்களுக்குச் சம்ஸ்கிருத மந்திரங்களின் பொருள் விளங்காது. ஆகையால் தமிழகச் சைவாலயங்களில் தமிழ் மந்திரங்களே வேண்டும். அவர்க்கு அவற்றின் பொருள் விளங்கும். அதனால் மனங்கலந்த் பக்திவழிபாடு கூடும். நாத்திகந் தொலையும். இவை அந்நவீனர் கூற்று. அது பற்றிச் சிறிது ஆராயலாம்.

பெயர்ப்பு மந்திரங்கள்

சம்ஸ்கிருத மந்திரங்களைத் தமிழிற் பெயர்த்து அப்பெயர்ப்புக்களைத் தமிழ் மந்திரங்களெனக் கொள்க. இப்படிக் கூறுவாரும் அவருளிருக்கின்றனர். மந்திரமென்ற பதமே சம்ஸ்கிருதம். மனனம், திராணம் என்பவை சேர்ந்தன.  அப்பதந்தோன்றியது. நினைப்பவரைக் கரை சேர்ப்பது என்பது அதன் பொருள். அப்பதத்தின் தமிழ்ப் பெயர்ப்புச் சொல்லே இன்னுங் காணப்படவில்லை. அது கிடக்க. இனி அம்மந்திரங்களைப் பெயர்த்துக் கொள்ளட்டும். அம்மூல மந்திரங்களை என் செய்வது? ஒதுக்கிவிடுவதா? அது நன்றிகெட்ட செயல். மேலும் பெயர்ப்புக்கள் சரியானவையென்று எப்போதும் நம்பப்படல் வேண்டும். அதற்காக அம்மூலங்களைப் போற்றி வைத்தல் அவசியம். இன்றேல் அன்னிய சமயிகள் திரிவு செருகல் நீக்கல் என்பவற்றைச் செய்வர். அம்மூலங்கள் கெடும். அப்பெயர்ப்புக்களும் நம்பிக்கையிழக்கும். இன்னும் அவ்விரு மொழிப் பயிற்சியும் வேண்டும். இன்றேல் பெயர்ப்பும், மூலங்களைப் போற்றிக் கோடலும் இயலா.

ஏகாக்கரம், பஞ்சாக்கரம், ஷடக்கரம், அஷ்டாக்கரம், நவாக்கரம், ‘மிக்கவா கமத்தாற் பூசை விளைந்தெழுந் தொன்றிரன்டு – தக்கநான் கைந்தாறெட்டுத் தாமிரா றிருபத் தெட்டிற் – றொக்கமந் திரங்களாதி பல’, காயத்திரி, ஹம்சம், பஞ்சப்பிரமம், ஷடங்கம், ஹிருதயம், பிராஸாதம், ஸப்தகோடி, கலா, ஸம்ஹிதா.  ஆசமனம், பீஜம், அஷ்டோத்திரசதம், ஸஹஸ்ரம் என மந்திரங்கள் பல. அத்தனையும் சைவானுட்டானத்துக்கவசியம். பிரதிஷ்டை, அஷ்டபந்தன மாதிய ஒரு புறம், தீ¨க்ஷ, உபநயனம், கலியாணம், ஸீமந்தம், பிரேதகாரியம், அந்தியேஷ்டி, சிராத்தமாதிய மற்றொருபுறம், அவையெல்லாம் வேதாகமோக்தமான சைவக்கிரியைகள். அவை அற்ப சொற்பமல்ல. மந்திரங்கிரியை பாவனை யில்லாத சைவம் ஏது? அம்மூன்றனுள் ஒன்றையின்றி யொன்றில்லை. ஒன்று மாறினால் மற்றவையும் மாறும்.  அம்மந்திரங்களை யெல்லாந் தமிழிற் பெயர்க்க வுத்தேசமா?  முடியுமா?

இன்னும் ஏகாக்கரம் பஞ்சாக்கர முதலியன எண்ணடியாகப் பிறந்த பெயர்கள் அவற்றைத் தமிழிற் பெயர்க்க, அப்பெயர்ப்புக்களை விட்டு அப்பெயர்கள் விலகும். அந்நஷ்டம் சிறிதா? பத்தாந் திருமுறையிற் பல சக்கரங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றில் அப்பெயர்ப்பு மந்திரங்களின் எழுத்துக்கள் அடங்குமா? அச்சக்கரங்களையும் மாற்றியமைக்க வேண்டுமோ?

அத்திருமுறையில் ‘இட்ட விதழ்க ளிடையந் தரத்திலே – யட்டஹவ் விட்டதின் மேலே உவ்விட்டுக் – கிட்ட வீதழ்களின் மேலே கிரோம்சிரோ- மிட்டுவ மத்திற் கிரோங்கென்று மேவீடே’ என்று வருகிறது. அன்ன பாடல்கள் பல. அவற்றிலுள்ள மந்திரங்களெல்லாம் சம்ஸ்கிருதமே. அவ்வாசிரியர் அவற்றை யப்படியே தந்தார். அவற்றுள் ஒன்றையாவது தமிழிற் பெயர்க்கவில்லை. ஏன்? அவற்றை அப்படியே ஓத வேண்டும்.  அவர் கட்டளை அது. அதனாற்றான் அத்திருமுறை திருமந்திரமென் றாயிற்று.

அத்துவாக்கள் ஆறு, அவற்றுள் வர்ணம் ஒன்று. பதம் ஒன்று. வர்ணம் – எழுத்து, பதம் – சொல், சம்ஸ்கிருதத்தில் உயிர் பதினாறு, மெய் முப்பத்தைந்து, அவ்வைம்பத்தோரெழுத்துக்களுமே வர்ணாத்துவா. அவ்வெழுத்துக்களால் எண்பத்தொரு பதங்க ளியன்றன. அவை பதாத்துவா. அவ்வெழுத்துக்களைத் தமிழாக்க முடியாது. அப்பதங்களுக்குத் தமிழிற் பொருள் தெரியலாம். ஆனால் அத்தமிழ்ச் சொற்கள் பதாத்துவா ஆகா. ஏன்? அச்சம்ஸ்கிருத வர்ணங்களா லாகிய அச்சம்ஸ்கிருத பதங்களே பதாத்துவா: அப்படி தெளியக் கூறியது சிவாகமம்.& ரம், மமகாரம், அஹங்காரம், ஹ்ரீங்காரம் என்பன சம்ஸ்கிருத வழக்கு. ஓங்காரமும் அன்னதே. திருமுறையும் ‘ஓங்காரத்துட் பொருள்’ எனக் கூறி அவ்வழக்கை ஏற்றது. ஆகையால் அம்மந்திரமும் சம்ஸ்கிருதமே. தமிழ்ச்சொற்களைக் காரச்சாரியை கொடுத்து வழங்கலாமா? அதற்கு விதியென்னை?

சிவ மந்திரம், உமாமந்திரம், விநாயக மந்திரம், ஸ்கந்த மந்திரம், விஷ்ணு மந்திரம், காருடமந்திரம் என்பன தெய்வம் பற்றிய வழங்கற்பாடுகள். சமயம் பற்றியும் மந்திரங்கள் வழங்கப்படும். முன் காட்டப்பட்ட ஏகாக்கர முதலிய வழக்குகளு முள. அத்தனையுந் துவேஷக் கலப்பற்றன. ஆதலின் தம்முள் மோதா. ஆனால் தமிழ்மந்திரமென்ற மாத்திரத்தில் தெலுங்கு முதலிய பிற மொழிகளிலும் மந்திரந் தோன்றுதற்கு இடங்கொடுக்கப்பட்டதாகும். அதனால் தமிழ் மந்திரம், தெலுங்கு மந்திரம், ஹிந்தி மந்திரம், குஜராத்தி மந்திரம் என மொழிபற்றிய வழக்குகளும் முளைக்கும். அது ஆரிய மந்திரம், திராவிட மந்திரம், நீக்ரோ மந்திரம் முதலிய இனம் பற்றிய வழக்குகளையும், சென்னை மந்திரம், சீன மந்திரம், இலங்கை மந்திரம் என நிலம்பற்றிய வழக்குகளையும், பிறவற்றையுந் தோன்றச் செய்யும். அவை பரிகாசத்துக் கிடம். அன்றியும் ஒரு சமயத்தினருக்குள்ளேயே சண்டையை மூட்டும். ஆகையால் துவேஷ ஜன்யமு மாம்.

மந்திர சப்தம் உமாமயம், மந்திர அர்த்தம் சிவமயம். வேதாகமோக்த மந்திரங்களுக்கே அவ்விலக்கண முண்டு. ஆகலின் அச்சப்தமும் அர்த்தமும் ஆற்றலுடையன. அந்நவீனர் விரும்பும் மந்திரங்கள் வேறு. அவற்றுக்கு ஆற்றல் சொல்லிலா? பொருளிலா? இரண்டிலுமேயா? சொல்லிலெனின், தமிழ்ச்சொற்களிற்றான் அ·துண்டெனச் சாதிக்க வேண்டும். அ·தவரால் முடியுமா? தெலுங்கர் முதலியோர் அதனை யேலார். அவர் தம் மொழிகளிலேயே அ·துண்டென்பர். பொருளிலெனின், சம்ஸ்கிருத மந்திரப்பொருள் தமிழுக் கிரவலே, அதற்குத் தமிழுக்குஞ் சம்பந்தமில்லை. இரண்டிலுமேயெனின், அம்மந்திரங்கள் தமிழுக்கே உரியவாதல் வேண்டும். தமிழ் மந்திரங்க ளுளவா?

செய்யுளை வசனமாக மாற்றலாம். அதுவும் பெயர்ப்புத்தான். தேவாராதிகள் செய்யுள். அது பலருக்கு விளங்காது. அதனை வசனத்திற் பெயர்க்க, அவ்வசனத்தை அவர் படிப்பர். ஆனால் அச்செய்யுளைப்போல் அவ்வசனத்தையும் ஓதலாமா? அவ்விரண்டிற்கும் ஓதும் பயன் ஒன்று தானா? ஆமெனின், அச்சம்ஸ்கிருத மந்திரங்களையும் அவற்றின் பெயர்ப்புக்களையும் ஓதுதற்குப் பயன் ஒன்று தான்.

செய்யுள் நடையில் தரவேறுபா டுண்டு. வசன நடையிலும் அப்படியே. மந்திரப் பெயர்ப்புக்கு வேண்டுவது செய்யுளா? வசனமா? எந்நடைதரம்?

சம்பந்தரை வணங்கி முத்திபெற்றார் பலர். அப்படியே மாணிக்கவாசகரையும் வணங்கி முத்தி பெறலாம். அவர் திருவாசகத்தை யருளினார். அதை ஆங்கிலத்திற் பெயர்த்தார் போப் என்பவர். இலண்டனின் ஒரு சிவாலய மிருப்பதாகக் கொள்க. அதில் அப்பெயர்ப்பைத் தானே ஓத வேண்டும், தமிழருக்குத் தமிழ் போன்றது ஆங்கிலருக்கு ஆங்கிலம். ஆகலின் அம்மூலத்துக்கும் பெயர்ப்புக்கும் ஓதற்பயன் ஒன்று: அப்படிக் கூறுவதே அந்நவீனருக்கு நியாயம். இங்கு மாணிக்கவாசகர் திருவுருவம் வணங்கப்படுகிறது. அங்குப் போப்புருவம் வணங்கப்படலாமா? ஆமெனின். அவ்வுருவை இங்கும் வணங்கினா லென்ன? மாணிக்கவாசகரின் பெயர்ப்பே போப். அப்படியுஞ் சொல்லிக்கொள்ளலாம் அந்நவினர்.

வாக்குக்கள் மூன்றுவகை. அவற்றுள் ஒன்று ஞான வாக்கு. அது பரமசிவனாருடையது. வேதாகமங்களே அது. இன்னொன்று அனுபவவாக்கு. அது சம்பந்தராதியருடையது. தேவாராதி திருமுறைகளே அது. பின்னொன்று பிராகிருதவாக்கு. அது சிவானுபவ மில்லாத ருடையது. நான்போன்றா ரெழுதும் நூல்கள் பல. அவையெல்லாம் அது. ஞானவாக்கும் அனுபவ வாக்கும் அருள் நாதவொலி. பிராகிருத வாக்கு மாயா நாதவொலி. அந்த ஞானவாக்கி லுள்ளன சம்ஸ்கிருத மந்திரங்கள். ஆகலின் அவையும் அருள் நாத வொலியே. அவையே சித்தி முத்திகளைப் பயக்கும். அவற்றைப் பெயர்ப்பதென்ப தென்ன? மாயா நாதவொலியாக்குவெதேயாம். அவ்வொலிச் சொற்கள் அப்பயனைத் தரா. தேவராதிகளைப் பெயர்த்த வசனமும் மாயாநாதவொலிதான். ஆகவே எங்குள்ள சைவாலயங்களிலும் அவ்வொலிச் சொற்களை மந்திரங்களாக ஓதக்கூடாது

No comments:

Post a Comment