10/07/2012

உண்மையான சைவர்கள் கடைபிடிக்கவேண்டிய நெறிநமக்குக் கற்பிக்கப்பெற்றவை

சைவத்தின் தலைமைச் சான்றுகள் இவையிவை என காசிமடம் ‘மெய்யும் பொய்யும்’ நூலுள் அறிவித்துள்ளது. சமய ஊற்றத்துடன் வேதம், திருமுறைகள் படித்தவர்கள் சொல்வதைத்தான் நாம் பரிசீலிக்க முடியும். பரம நாத்திகர்களுள் சிலர், வேதம் படித்தவர்கள். ‘முல்லர், வேதம் படித்தார். வேதம் அவரைப் பிழை செய்ய விடாது’ என்பது வேத சக்தியின்மேல் உள்ள நம்பிக்கையைக் காட்ட உதவுமே தவிர, பக்தியும், சமய ஊற்றமும், நம்பிக்கையும் இல்லாதவர்களுக்கு வேதசக்தி நலம் செய்யாது. அந்தத் துரைமார்கள் அதையும் இதையும் சொல்லி, சாதிகளால், மொழியால் இவையொத்த உணர்ச்சி வசப்பட வைக்கும் பொருண்மைகளால் பிரித்த பிரிப்புகள் மாபெரும் வெற்றியடைந்து இன்னமும் தொடர்ந்து கொண்டுள்ளன. சமயம் என்று வரும்போது கடைசிவரை அவர்கள், அவர்களாகத்தான் இருந்தார்கள். அது ஏன் என்று நாம் சிந்திப்பதே இல்லை. விவிலியத்தின் பழையஏற்பாட்டை, நம்பிக்கையின்றிப் பக்தியின்றிச் சீண்டினால் விளைவு என்னவாகும்? பிரிவுகளுக்காகவும் பிணக்குகளுக்காகவும் மேற்கொள்ளப்படுவன நம்பிக்கைகளிலிருந்து நம்மை நகர்த்திவிடும்.

மொழி பற்றித் தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள்; சமயம் பற்றி, வழிபாடுகள் பற்றி, சடங்குகள் பற்றி, நெறிமுறைகள் பற்றித் திருமுறைகள், சாத்திரங்கள் - அருளாளர்களின் இலக்கியங்கள் ஆகியவற்றுக்கு மேலாக நமக்கு யாரும் எதுவும் சொல்லிக்கொடுக்கத் தேவையில்லை.

எங்களுக்கு எந்த மொழியின் பேரிலும் என்றைக்கும் வெறுப்பில்லை. வடமொழி இனிப்பா? தமிழ்மொழி இனிப்பா? திருமுறை இனிப்பா? வேதம் இனிப்பா? என்ற ஆராய்ச்சிகளும் எங்களுக்கு இல்லை. எதுவொன்றையும் கசப்பு என்று சொல்வது மில்லை. இறைவன் அருளிய மொழிகள், இறைவன் அருளிய வேதாகமங்கள், இறைவன் உள்நின்று உணர்த்த வெளிப்பட்ட தேவார - திருமுறைகள், திருவருட் சம்மதத்துடன் அமைந்த, சாத்திரங்கள், சமய இலக்கியங்கள் இவற்றில் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்.

தேவகாரியங்களுக்காக வகுக்கப்பட்டதால் வடமொழி தேவபாஷை - என்றால் அதனால் தமிழின் சமத்துவ ஏற்றம் குறைவுபடாது. தெய்வபாஷை - தெய்வத்தினால் அருளப்பட்டது எனக் கொண்டால் தமிழும் தெய்வபாஷையே ஆகும்.

“ஆரியமும் தமிழும் உடனே சொல்லிக்
காரிகை யார்க்கும் கருணை செய்தானே” - திருமந்திரம் - 65.

ஆசாரியன் யார்?

நம் தமிழ் நூல்களில் தற்போது கிடைக்கும் முதன்மை நூல் தொல்காப்பியம் ஆகும். அதன் பாயிரம், அதங்கோட்டாசான் என்ற தமிழறிஞரை, ‘நான்மறை முற்றிய அதங்கோட்டாசான்” என்கிறது. உலகப் பொதுமறை எனப் போற்றப்பெறும் திருக்குறள், வேதங்களை, ‘அந்தணர் நூல்’ என்றும், ‘ஓத்து’ என்றும், ‘அறு தொழிலோர் நூல்’ என்றும் சுட்டுகிறது. நம் பன்னிரு திருமுறைகள் சற்றொப்ப 1600 இடங்களில் வேதங்களை, அகமங்களைச் சிறப்பித்து உரைத்து, வேதங்கலை அருளியவர் நம்பெருமான் என்றும், அவர் வேதம் பாடுபவர் என்றும், வேத வடிவினர் என்றும் பலவாறாக விதப்பித்துப் புகழ்கின்றன. அவற்றுள் ‘வேதமோடாகமம் மெய்யாம் இறைவன் நூல்’ என்றும், ‘வேதத்தை விட்ட அறம் இல்லை’ என்றும் திருமந்திரம் முத்தாய்ப்பாக அறிவிக்கும் செய்திகள் பெரிதும் உளங்கொள்ளத் தக்கனவாகும்.

நால்வர் நெறியும், நால்வர் நெறியை உள்ளிட்ட திருமுறைகளின் நெறியும், சந்தானாசாரியர் நெறியும், தொகுமொத்தச் சைவத் தமிழ் நூல்கள் அனைத்தின் நெறியும் வேத நெறியே ஆகும். இவ்வனைத்திற்கும் முரண்பட்டு, முரண்டு பிடித்து, நாம் பின்பற்றுவதற்காகத் திருமுறைகள் சுட்டிக்காட்டும் வேதாகம நெறிக்கு விரோதமாக, அத்திருமுறைகளையே வைத்துப் புதுநெறி என்பதாகப் புறநெறி செய்கிறார்களே, அது நிச்சயமாக வேறொரு சமயமே ஆகும். அது சிவநெறிக்கு விரோதச் சமயமே ஆகும்.

நால்வர் காட்டிய வேதாகம நெறிக்கு நால்வர் பெருமக்களே ஆசாரியர்கள். அதற்கு முரணான நெறிக்கு நால்வர் பெருமக்கள் ஆசாரியர் ஆகார்.

ஆசாரியன் இல்லாமல் ஒரு நெறி உருவாக முடியாது; கூடாது. வேதாகம நெறிக்குப் புறம்பான இந்த முரண் சமயத்திற்கு ஆசாரியன் யார்? ஆசாரியன் இல்லையென்றால் அது தான்தோன்றியா? ஆசாரியன் இல்லாத அநாதையா?

வேதம் கற்க வேண்டுமா?

வேதம் கற்க வேண்டுமென்று நாம் சைவர்கள் யாரையும் வற்புறுத்துவதில்லை. வேதநிந்தனை கூடாது என்று நம் முன்னோர்கள் அறிவித்ததையும், வேத நிந்தனையே சைவ நிந்தனை, சிவ நிந்தனை என்ற சைவக் கோட்பாட்டையுமே தெரிவிக்கிறோம். வேத பாராயணத்துக்கும் எமக்கும் உள்ள தொடர்பு பற்றி நாம் பிறருக்குத் தெரிவிக்க வேண்டியதில்லை.

சதுர்வேதமும் கனாந்தரம் அத்யயனம் செய்தவர்களே தமக்கு வேதம் தெரியும் என்பதைக் கூசித்தான் பேசுவர். வேதம் என்ற சொல் சதுர்வேதத்தையும் உள்ளடக்கியது. வேதம் தெரியும் என்றால் சதுர்வேதமும் அத்யயனம் செய்வதாக அர்த்தப்படும். இந்தியத்தில் நூற்றுக்கும் குறைவானவர்களே சதுர்வேத பண்டிதர்களாக உள்ளனர்.

நாம் வற்புறுத்துவதெல்லாம் நமது சமயாசாரியர்கள் அருளியுள்ளபடி, திருமுறைகளை ஓதுங்கள், படியுங்கள் என்பதையே ஆகும். கோயிலில் வழிபாடுகள், இல்லச் சடங்குகள் வேதாகம முறைப்படியே நடைபெற வேண்டும் என்பதே ஆசாரியப் பெருமக்களின் அருளிப்பாடு. அதுவே சைவத்தின் தொன்றுதொட்ட மரபு. திருக்கோயில்களிலும், இல்லச் சடங்குகளிலும் ஓதுவாமூர்த்திகளைக் கொண்டு பெருமளவுக்குத் திருமுறைகளைப் பண்ணொன்ற ஓதுவித்தும் கேட்டும் பயன்பெறுக! பிழையின்றிப் படிக்கத் தெரிந்தவர்கள் நாளும் திருமுறைப் பாராயணம் செய்து இகபர சௌபாக்யம் அடைவிராகுக!

- திருச்சிற்றம்பலம் -

நன்றி : http://www.shaivam.org

No comments:

Post a Comment