10/07/2012

வேதம் என்றால் வடமொழி வேதத்தையே குறிக்கும் என்பது ஏன்?


இனச்சுட்டு - இனம் காட்டும் சுட்டு; இரண்டும் பலவும் இருந்தால் ஒன்றை அடையாளப்படுத்தும் சுட்டு.

ஞாயிறு என உதிப்பது ஒன்றுதான். அது தரும் வெயிலை, ஞாயிற்று வெயில் என்றாலே போதும். திங்கள் என உதிப்பது ஒன்றுதான். அது தரும் நிலவை, திங்கள் நிலவு என்றாலே போதும். ஒன்றே ஒன்றாக இருப்பவற்றிற்கு இனம் காட்டும் சுட்டு, பேச்சு வழக்கில் தேவையில்லை. செய்யுள் வழக்கில் ஒன்றே ஒன்றானவற்றிற்கும் பண்புச் சொல்லை இனம் சுட்டும் வகையில் சொல்லலாம் என்று,

'இனச்சுட்டு இல்லாப் பண்புகொள் பெயர்க்கொடை
வழக்கு ஆறு அல்ல; செய்யுள் ஆறே'


என்ற நூற்பா வாயிலாகத் தொல்காப்பியர் தெரிவித்துள்ளார். இதற்கு உதாரணம் 'செஞ்ஞாயிற்று வெயில் வேண்டினும், வெண் திங்களின் நிலவு வேண்டினும்' என்ற செய்யுள் தொடர். இதில், கரு ஞாயிறு என வேறொரு ஞாயிறோ, கருந்திங்கள் என வேறொரு திங்களோ இல்லையென்றாலும், 'செஞ்ஞாயிறு' என்றும், 'வெண்திங்கள்' என்றும் இனங்காட்டும் பண்படை வருகிறது.


மொழியால் இனஞ்சுட்டுதலும் உண்டு, மொழி, பண்பன்றெனினும் இனம் சுட்டத் தேவைப்படும். தண்டியார் என வடமொழிப் புலவர் ஒருவர்; தண்டியார் எனத் தமிழ்ப் புலவர் ஒருவர். இருவரும் ஒருவரே என்ற ஆய்வும் உண்டு. வடமொழியில் தண்டியார் செய்த நூல் 'காவ்யாதர்கம்' தமிழில் தண்டியார் செய்த நூல், ஆக்கியோன் பெயரால் தண்டியலங்காரம் எனப்படுகிறது. இரண்டும் அணி இலக்கண நூல்கள். தமிழில் உள்ள தண்டியலங்காரப் பாடலை, மேற்கோள் சொல்லும்போது, 'என்றார் தமிழ்த் தண்டியார்' என மொழிப் பெயரை இனம் சுட்டும் சொல்லாகச் சேர்த்துச் சொல்கிறோம்.

தமிழில் நான்மறை, வடமொழியில் நான்மறை என இரண்டு இருக்குமானால், மொழிப் பெயரைச் சேர்த்து இனம் சுட்டாவிட்டால், எந்த மொழியின் நான்மறை எனக் குழப்பம் ஏற்படும். தமிழில் எக்காலத்தும் நான்மறை - வேதம் இன்மையால், வடமொழியில் மட்டுமே நான்மறை - வேதம் உள்ளமையால் நம் முன்னோர் நான்மறை - வேதம் எனப் பொதுவாகவே குறிப்பிட்டனர்.

'அந்தணர் மறை' என்பதில் உள்ள அந்தணர் என்பது அடையாளப்படுத்துகின்ற இனச்சுட்டு ஆகாதா? என ஒரு வினா வரலாம். 'இந்தப் பெரியபுராணம் என்னுடையது' என்று ஒரு நூல் பிரதியைச் சுட்டிக்காட்டும்போது, பயன்பாட்டினால் உள்ள உரிமையை அடையாளப்படுத்துகிறோம். பயணங்களின்போது முன் பதிவு செய்த இடத்தை 'இது என் இடம்' என்கிறோமே அதைப்போல, குலத் தொழில்கள் ஆறனுள் ஒன்றாக வேதம் ஓதுதல், அத்யயனம் செய்தல் உரிமை பற்றிய சிறப்பு அடையே 'அந்தணர் மறை' என்பது. அந்த அடையில் அந்தணர்க்கு மட்டுமே உரிமையுடையது என்ற குறிப்பும் இல்லை. எனவே இது பயன்பாடு தொடர்பான அடைவே அன்றி இனச்சுட்டு ஆகாது.

எனவே, நான்மறை என்பதற்கும் வேதம் என்பதற்கும் மொழி குறித்த இனச்சுட்டு யாண்டும் இன்மையால் தமிழில் நான்மறை இருந்ததில்லை என உணர்க.

வேத காலம் - சைவத்தின் கொள்கை என்ன?

வேத காலம், தொல்காப்பியர் காலத்திற்குச் சில பல நூற்றாண்டுகட்கு முற்பட்டது எனச் சொல்லுவதுகூட, நம் சமய மரபுக்குப் புறகாகும். அநாதி காலத்தில் பெருமான் வேதம் அருளினார். ஒவ்வொரு யுகத் தொடக்கத்திலும் மீண்டும் மீண்டும் அவ்வவ்யுகங்களுக்கும் தருகிறார் என்பதே அனைத்துப் புராணங்களிலும் சூதர் அருளிய செய்தியாகும். திருவிளையாடற் புராணத்தில், வேதத்துக்குப் பொருள் அருளிச்செய்த படலத்தில், பெருமான், ஓரூழியை ஒடுக்கிப் பிறிதோரூழியை மலர்த்திய நிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது. புது ஊழியில் மீண்டும் பெருமான் திருவாக்கிலிருந்து ‘பிரணவம் உதித்து, அதனிடை வேதம் பிறந்தன’ (செ.4) என வருகிறது. இதுவே நம் சமயம் சொல்லும் வேதகாலமாகும். வேதாகமங்கள் என்றும் உள்ளவை. அவற்றின் பூசனைகள், சடங்குகள், கிரியைகள் மூலமான மையக் கோட்பாட்டினின்றும் பிறழ்வதில்லை.

இறைவன் வேதத்திற்குத் துணையாக ஆறு அங்கங்களையும் தோற்றுவித்தார். அனைத்தின் மூலங்களும் பெருமானின் அருளிப்பாடுகளே. வியாசர் நெறிப்படுத்துதலாகிய தொகுப்பு முறை செய்தார். வியாசரைப் பெருமைப்படுத்த - அப்பணி செய்ய - பெருமான் அவருக்கு அருள்பாலித்தார். பெருமான் அருளிய அதி நுட்ப மந்திரங்கள் முதலியவற்றுடன், அவர்தம் அருளாரமுதத்தில் ஊறித் திளைத்த இருடிகள் முதலாயினோரின் படையல்களையும் இணைத்து வகுத்ததில் வேத நுட்பங்கள் சற்றே இளகின. வேதங்களின் உண்மைப் பொருள் இறைவனால் மட்டுமே தரக்கூடியவை என்பதற்கான சான்றுகளை காசிமட நூல்களில் தந்துள்ளார்கள்.


நன்றி : http://www.shaivam.org

உண்மையான சைவர்கள் கடைபிடிக்கவேண்டிய நெறி



நமக்குக் கற்பிக்கப்பெற்றவை

சைவத்தின் தலைமைச் சான்றுகள் இவையிவை என காசிமடம் ‘மெய்யும் பொய்யும்’ நூலுள் அறிவித்துள்ளது. சமய ஊற்றத்துடன் வேதம், திருமுறைகள் படித்தவர்கள் சொல்வதைத்தான் நாம் பரிசீலிக்க முடியும். பரம நாத்திகர்களுள் சிலர், வேதம் படித்தவர்கள். ‘முல்லர், வேதம் படித்தார். வேதம் அவரைப் பிழை செய்ய விடாது’ என்பது வேத சக்தியின்மேல் உள்ள நம்பிக்கையைக் காட்ட உதவுமே தவிர, பக்தியும், சமய ஊற்றமும், நம்பிக்கையும் இல்லாதவர்களுக்கு வேதசக்தி நலம் செய்யாது. அந்தத் துரைமார்கள் அதையும் இதையும் சொல்லி, சாதிகளால், மொழியால் இவையொத்த உணர்ச்சி வசப்பட வைக்கும் பொருண்மைகளால் பிரித்த பிரிப்புகள் மாபெரும் வெற்றியடைந்து இன்னமும் தொடர்ந்து கொண்டுள்ளன. சமயம் என்று வரும்போது கடைசிவரை அவர்கள், அவர்களாகத்தான் இருந்தார்கள். அது ஏன் என்று நாம் சிந்திப்பதே இல்லை. விவிலியத்தின் பழையஏற்பாட்டை, நம்பிக்கையின்றிப் பக்தியின்றிச் சீண்டினால் விளைவு என்னவாகும்? பிரிவுகளுக்காகவும் பிணக்குகளுக்காகவும் மேற்கொள்ளப்படுவன நம்பிக்கைகளிலிருந்து நம்மை நகர்த்திவிடும்.

மொழி பற்றித் தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள்; சமயம் பற்றி, வழிபாடுகள் பற்றி, சடங்குகள் பற்றி, நெறிமுறைகள் பற்றித் திருமுறைகள், சாத்திரங்கள் - அருளாளர்களின் இலக்கியங்கள் ஆகியவற்றுக்கு மேலாக நமக்கு யாரும் எதுவும் சொல்லிக்கொடுக்கத் தேவையில்லை.

எங்களுக்கு எந்த மொழியின் பேரிலும் என்றைக்கும் வெறுப்பில்லை. வடமொழி இனிப்பா? தமிழ்மொழி இனிப்பா? திருமுறை இனிப்பா? வேதம் இனிப்பா? என்ற ஆராய்ச்சிகளும் எங்களுக்கு இல்லை. எதுவொன்றையும் கசப்பு என்று சொல்வது மில்லை. இறைவன் அருளிய மொழிகள், இறைவன் அருளிய வேதாகமங்கள், இறைவன் உள்நின்று உணர்த்த வெளிப்பட்ட தேவார - திருமுறைகள், திருவருட் சம்மதத்துடன் அமைந்த, சாத்திரங்கள், சமய இலக்கியங்கள் இவற்றில் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்.

தேவகாரியங்களுக்காக வகுக்கப்பட்டதால் வடமொழி தேவபாஷை - என்றால் அதனால் தமிழின் சமத்துவ ஏற்றம் குறைவுபடாது. தெய்வபாஷை - தெய்வத்தினால் அருளப்பட்டது எனக் கொண்டால் தமிழும் தெய்வபாஷையே ஆகும்.

“ஆரியமும் தமிழும் உடனே சொல்லிக்
காரிகை யார்க்கும் கருணை செய்தானே” - திருமந்திரம் - 65.

ஆசாரியன் யார்?

நம் தமிழ் நூல்களில் தற்போது கிடைக்கும் முதன்மை நூல் தொல்காப்பியம் ஆகும். அதன் பாயிரம், அதங்கோட்டாசான் என்ற தமிழறிஞரை, ‘நான்மறை முற்றிய அதங்கோட்டாசான்” என்கிறது. உலகப் பொதுமறை எனப் போற்றப்பெறும் திருக்குறள், வேதங்களை, ‘அந்தணர் நூல்’ என்றும், ‘ஓத்து’ என்றும், ‘அறு தொழிலோர் நூல்’ என்றும் சுட்டுகிறது. நம் பன்னிரு திருமுறைகள் சற்றொப்ப 1600 இடங்களில் வேதங்களை, அகமங்களைச் சிறப்பித்து உரைத்து, வேதங்கலை அருளியவர் நம்பெருமான் என்றும், அவர் வேதம் பாடுபவர் என்றும், வேத வடிவினர் என்றும் பலவாறாக விதப்பித்துப் புகழ்கின்றன. அவற்றுள் ‘வேதமோடாகமம் மெய்யாம் இறைவன் நூல்’ என்றும், ‘வேதத்தை விட்ட அறம் இல்லை’ என்றும் திருமந்திரம் முத்தாய்ப்பாக அறிவிக்கும் செய்திகள் பெரிதும் உளங்கொள்ளத் தக்கனவாகும்.

நால்வர் நெறியும், நால்வர் நெறியை உள்ளிட்ட திருமுறைகளின் நெறியும், சந்தானாசாரியர் நெறியும், தொகுமொத்தச் சைவத் தமிழ் நூல்கள் அனைத்தின் நெறியும் வேத நெறியே ஆகும். இவ்வனைத்திற்கும் முரண்பட்டு, முரண்டு பிடித்து, நாம் பின்பற்றுவதற்காகத் திருமுறைகள் சுட்டிக்காட்டும் வேதாகம நெறிக்கு விரோதமாக, அத்திருமுறைகளையே வைத்துப் புதுநெறி என்பதாகப் புறநெறி செய்கிறார்களே, அது நிச்சயமாக வேறொரு சமயமே ஆகும். அது சிவநெறிக்கு விரோதச் சமயமே ஆகும்.

நால்வர் காட்டிய வேதாகம நெறிக்கு நால்வர் பெருமக்களே ஆசாரியர்கள். அதற்கு முரணான நெறிக்கு நால்வர் பெருமக்கள் ஆசாரியர் ஆகார்.

ஆசாரியன் இல்லாமல் ஒரு நெறி உருவாக முடியாது; கூடாது. வேதாகம நெறிக்குப் புறம்பான இந்த முரண் சமயத்திற்கு ஆசாரியன் யார்? ஆசாரியன் இல்லையென்றால் அது தான்தோன்றியா? ஆசாரியன் இல்லாத அநாதையா?

வேதம் கற்க வேண்டுமா?

வேதம் கற்க வேண்டுமென்று நாம் சைவர்கள் யாரையும் வற்புறுத்துவதில்லை. வேதநிந்தனை கூடாது என்று நம் முன்னோர்கள் அறிவித்ததையும், வேத நிந்தனையே சைவ நிந்தனை, சிவ நிந்தனை என்ற சைவக் கோட்பாட்டையுமே தெரிவிக்கிறோம். வேத பாராயணத்துக்கும் எமக்கும் உள்ள தொடர்பு பற்றி நாம் பிறருக்குத் தெரிவிக்க வேண்டியதில்லை.

சதுர்வேதமும் கனாந்தரம் அத்யயனம் செய்தவர்களே தமக்கு வேதம் தெரியும் என்பதைக் கூசித்தான் பேசுவர். வேதம் என்ற சொல் சதுர்வேதத்தையும் உள்ளடக்கியது. வேதம் தெரியும் என்றால் சதுர்வேதமும் அத்யயனம் செய்வதாக அர்த்தப்படும். இந்தியத்தில் நூற்றுக்கும் குறைவானவர்களே சதுர்வேத பண்டிதர்களாக உள்ளனர்.

நாம் வற்புறுத்துவதெல்லாம் நமது சமயாசாரியர்கள் அருளியுள்ளபடி, திருமுறைகளை ஓதுங்கள், படியுங்கள் என்பதையே ஆகும். கோயிலில் வழிபாடுகள், இல்லச் சடங்குகள் வேதாகம முறைப்படியே நடைபெற வேண்டும் என்பதே ஆசாரியப் பெருமக்களின் அருளிப்பாடு. அதுவே சைவத்தின் தொன்றுதொட்ட மரபு. திருக்கோயில்களிலும், இல்லச் சடங்குகளிலும் ஓதுவாமூர்த்திகளைக் கொண்டு பெருமளவுக்குத் திருமுறைகளைப் பண்ணொன்ற ஓதுவித்தும் கேட்டும் பயன்பெறுக! பிழையின்றிப் படிக்கத் தெரிந்தவர்கள் நாளும் திருமுறைப் பாராயணம் செய்து இகபர சௌபாக்யம் அடைவிராகுக!

- திருச்சிற்றம்பலம் -

நன்றி : http://www.shaivam.org

01/07/2012

(அஞ்சலி என்பது இதுதான்)எம்.ஜி.ஆர். அவர்களுக்கு ஈழத்தமிழரின் அஞ்சலி

1987 ஆண்டு அது. அண்ணா தொழிலகம் என்ற உள்ளூர் உற்பத்தி நிறுவனத்தின் பற்பொடி தயாரிக்கும் களஞ்சியத்தின் தூசு பரவிய அறைக்குள் இருநூறு பேருக்கு மேல் அடைந்து கிடைக்கிறோம். அதுதான் எமக்கு அப்போது வாய்த்த தற்காலிக அகதி முகாம். பலர் கோயில்களுக்குச் சென்று அடைக்கலமாகி விட்டாலும், இந்த அண்ணா தொழிலகத்தின் நான்கு அடுக்கு மாடிக்கட்டடத்தின் கீழ் அறையில் ஒளிந்திருந்த எமக்கு இருந்த ஒரே அற்ப நம்பிக்கை தூரத்தில் இருந்து வரும் எம பாணம் எம்மைத் தாக்காது என்பது தான்.

தூரத்தில் இருந்து பாய்ந்து வரும் ஷெல் கணைகள் எங்கோ ஒரு மூலையில் குத்தி வெடிக்கும் ஓசை தொடந்து ஒலிக்கிறது. மாரிகாலம் தொடக்கி வைத்த பெருமழைச் சத்ததுக்கு மேலாக ஷெல் மழை ஓசை எல்லாப் பக்கமும் கேட்கிறது. அது வேறென்றுமில்லை காங்கேசன் துறை வீதிப்பக்கமாக நகர்ந்து வரும் இந்திய அமைதிப்படையினரின் முன்னெடுப்பின் கட்டியம் தான். அவர்கள் காங்கேசன் துறையில் இருந்து ஒரு அணியாகவும், பலாலிப்பக்கம் இருந்து இன்னொரு அணியாகவும் பிரிந்து வந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு முதல் தேவை முன்னே எதிர்ப்படும் எல்லாம் நாசமாகிப் போக வேண்டும். அதற்கு மேலால் தான் செயின் புளாக்குகள் எனப்படும் சுடுகலன்கள் பொருத்திய இராணுவ வண்டிகள் பாய்ந்து வரும். எல்லாப் பக்கமும் தன் கழுத்தைத் திருப்பி அந்த செயின் புளாக்குள் எறிகணைகளை ஏவிக் கொண்டே இன்னும் முன்னே முன்னே நகர்கின்றன.அந்தப் படையணிக்கும் சரி, பாய்ந்து வரும் ஏவுகணைகளுக்கும் சரி கிளியர் ஆக வேண்டிய முன்னால் எதிர்ப்படும் கிராமங்கள் எல்லாமே புலிகள் தான். அதுக்கு ஆறு மாசக் குழந்தையும் சரி அறுபது வயது கிழவனும் சரி எல்லாம் ஒன்று தான்.


"என்ரை பிள்ளையார்க் கிழவா! என்னைக் காப்பாற்று", பக்கத்து வீட்டுக்கார அன்ரி பெரும் குரலெடுத்து அழுகிறா. எனக்கு இரண்டு வயசு மூத்த பாலகுமார் முன்னால் மாட்டியிருக்கும் அம்மனின் படத்தையும், சாயிபாபா படத்தையும் மாறி மாறி நடுங்கிக் கொண்டே தொட்டுத் தொட்டு "தாயே....தாயே" என்று புலம்புகிறான்.


எல்லாரையும் பார்க்கையில் எனக்கு பயம் இன்னும் இரண்டு மடங்கு, மூன்று மடங்காக எகிறுகிறது. அம்மாவின் நைலெக்ஸ் சீலையில் என்னுடைய கண்ணீர்த் துளிகள் தொப்பு தொப்பாக விழ அவரின் கையைப் பிடித்துக் கொள்கிறேன் பயத்தோடு. அம்மாவின் வாயில் எல்லாத் தேவாரங்களும் ஒழுங்கில்லாமல் அவசரகதியில் புலம்பலாக வருகின்றன.ஒன்று இரண்டாக ஆரம்பித்த அழுகுரல்கள் இப்போது ஒட்டுமொத்தமாக அந்தப் பற்பொடி அறையையே ஆக்கிரமிக்கிறது. ஏனென்றால், கிட்ட கிட்ட ஏவுகணை ஒலி கேட்குதே.


தொப்புள் கொடி உறவாக, கண்ணுக்குத் தெரியாத உறவுப்பாலத்தைப் போட்டு வைத்து ஒரு தாய் மக்கள் போல் பழகி அது நாள் வரை இருந்த இந்திய -ஈழ உறவை சிங்கள அரசியல் சாணக்கியம் விழுங்கி ஏப்பம் விட்டதன் அறுவடையின் பலனை அனுபவித்துக் கொண்டிருந்தோம். ஒபரேஷன் பூமாலை மூலம் சாப்பாட்டுப் பொதி போட்டு சில மாதங்களில் வாய்க்கரிசியும் அவர்களாலேயே போடப்படுகிறது.


மெல்ல மெல்ல அந்த ஏவுகணை மழை ஓய ஆரம்பிக்க, இருட்டுக் கட்டுகிறது வானம். அந்த இடைவெளியில் நாங்கள் இருந்த அகதி முகாமின் முற்றத்துக்குப் போய் இரவுக்குத் தேவையான கஞ்சியைத் தயார்படுத்த ஒரு கூட்டம் தயாராகிறது. இன்னொரு கூட்டம் றேடியோவில் பற்றறி போட்டு "ஆகாசவாணி" கேட்கத் தயாராகிறது. வானொலியைச் சுற்றி நின்ற பெரியவர்கள் எல்லோரதும் அப்போதைய ஒரே நம்பிக்கை"எம்.ஜி.ஆர் விடமாட்டார், ஏதாவது செய்வார்".


00000000000000000000000000000000000000000000000000000000


ஈழ விடுதலைப் போராட்டத்தின் தார்ப்பரியத்தை உணர்ந்து அதற்கு ஆதரவளித்த நாள் முதல் தான் இறக்கும் வரை இதய சுத்தியோடு செயற்பட்ட ஒரே தமிழினத் தலைவர் எம்.ஜி.ஆர் தான் என்பதை 22 வருஷங்கள் கழித்தும் இன்றும் நிரூபிக்கக் கூடியதாக இருக்கிறது இன்றைய அரசியல் களமும், தமிழீனத் தலைவர்கள் சொல்லும் காலத்துக்குக் காலம் உதிக்கும் வேதாந்தங்களும்.


தமிழக டி.ஜி.பி ஆக இருந்த கே.மோகன்தாஸ் எழுதிய "எம்.ஜி.ஆர் நிஜமும் நிழலும்" நூலை வெகு காலம் முன்னர் படித்திருந்தேன். அதில் போலீஸ்துறையில் தான் பணியாற்றிய காலத்தில் நடந்த அரசியல் நிகழ்வுகளை வரலாற்றுப் பதிவாக்கியிருந்தார். குறிப்பாக எண்பதுகளில் தமிழகத்தில் நிலை கொண்டிருந்த போராளி இயக்கங்களின் நடவடிக்கைகளும், அதனை எம்.ஜி.ஆர் அரசு நோக்கிய விதத்தையும் பல பக்கங்களில் சொல்லிக் கொண்டே போகிறார். குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், தேசியத்தலைவர் பிரபாகரன் மீது எம்.ஜி.ஆர் கொண்ட நம்பிக்கை என்பனவெல்லாம் குறித்த சம்பவங்களோடு விரிகின்றன.


00000000000000000000000000000000000000000000000000000000


இந்திரா காந்தி இறந்த அந்த நாள் எங்களூரில் அப்பிக் கொண்ட சோகத்தைச் சிறுவனாகப் பார்த்த எனக்கு எம்ஜிஆரின் பிரிவைக் கேட்ட போது துடிதுடித்த எங்களவர் இன்னும் கண்ணுக்குள் நிக்கிறார்கள். இந்திய அமைதிப்படையின் ஒபரேஷன் பவான் என்ற தொடர் அவலம் நடந்து கொண்டிருந்த காலத்தில் தான் எம்.ஜி.ஆரின் உடல் நலம் குன்றி நிரந்தரமாகப் பிரிந்தது எமது இனத்துக்கு இன்னும் சாபக்கேடு ஓயவில்லை என்று சொல்லாமல் சொல்லியது. இன்றும் எம்ஜிஆரைப் பெரு மதிப்போடு நெஞ்சில் வைத்துப் போற்றக் காரணம், அவர் அரசியலைக் கடந்து இதயசுத்தியோடு எமது போராட்டத்தைப் பார்த்தது மட்டும் தான். அதை இன்றைய அரசியல் விபச்சாரிகளிடம்/சந்தர்ப்பவாதிகளிடம் எதிர்பார்ப்பவன் முட்டாள் என்று சொல்லித் தெரிவதில்லை.


எம்ஜிஆர் என்ற தமிழகத் தலைவனோடு ஈழத்தமிழினத்துக்கு இருந்த ஒரே நம்பிக்கையும் தொலைந்து போனாலும் உங்களை மறவோம்.



------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


எம்.ஜி.ஆர் அவர்களுக்கு ஈழத்தமிழர் வழங்கும் இதயப்பூர்வமான அஞ்சலி


"மடத்துவாசல் பிள்ளையாரடி"தளத்தில்ருந்து


இவ்வஞ்சலி இந்தியத்தமிழர்களான நாம் கைகழுவிவிட்ட நமது கடமையையும்,


தமிழின்பெயரால் தமிழனைத்தின்று பிழைப்புநடத்தும் துரோகிகளை தலைவர்களாக போற்றும் நமது மடத்தனத்தையும்,சுயநலப்போக்கையும்,


ஒரு தலைவன் மறைந்தாலும் எப்படி மக்கள்மனதில் வாழ்கிறான் என்பதையும் தெளிவாகக் காட்டுகிறது.

25/05/2012

மனுஸ்மிருதி,திருக்குறள்-ஓர் ஒப்பீடு

 

ஆரியன் என்றால் உயர்ந்தவன், மேன்மையான தர்மநெறியில் வாழ்பவன். வேதம் முதற்கொண்டு திருக்குறள்,திருமந்திரம் என அனைத்து நூல்களும் கூறும் நன்னெறியே உயர்ந்த வாழ்வியல் நெறி. யார் அவற்றைப் பேணி வாழ்கின்றனரோ அவரே ஆரியர் ஆகவே அவ்வறத்தைக் கைக்கொண்டு வாழும் தமிழர் அனைவரும் ஆரியரே!

ஊர் ஒற்றுமையாய் இருக்கவேண்டும் என்று அவ்வூரின் முன்னேற்றத்தை விரும்புவோர் நினைப்பது இயல்பு. கூத்தாடிகளுக்கு ஊர் இரண்டுபட்டால்தானே கொண்டாட்டம். நாமும் அதுபோல தமிழும் ஆரியமும் வேறல்ல ஒன்றுதான் எனும் உண்மையைத் தெளிவுறுத்துகின்றோம், ஆனால் குழப்பவாதிகளின் கருத்துகளுக்கு நமது தமிழன்பர்கள் சிலரும் பலியாகி அவர்களது ஊதுகுழலாகிவிட்டனர் அதுதான் வருத்தமாக இருக்கிறது.

சரி விஷயத்துக்கு வருவோம், இங்கு நாம், (உள்நோக்கத்துடன்) தவறாகப்புரிந்துகொள்ளப்பட்ட மனுசாஸ்திரத்துக்கும் திருக்குறளுக்கும் உள்ள ஒற்றுமைகள் பலவற்றைப் பார்ப்போம்.

வேதத்தைக் கற்பது, வேதத்தைக் கற்பிப்பது; யாகம் செய்வது, யாகங்களைச் செய்விப்பது; தானம் வாங்குவது, தானம் செய்வது – என்ற ஆறு ‘தொழில்கள்’ பிராமணனுக்கு விதிக்கப்பட்டுள்ளன.

இதைக் கூறுகிற மனு ஸ்ம்ருதி வாசகம் இது :

அத்யாபனம் அத்யயனம்
யஜனம் யாஜனம் ததா
தானம் ப்ரதிக்ரஹ ஸ்சைவ
ஷட் கர்மாண்யக்ரஜன்மன:
(75/467)



திருக்குறள்

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.


உரை:
காவலன் காவான் எனின் – காத்தற்குரிய அரசன் உயிர்களைக் காவான் ஆயின்;
ஆபயன் குன்றும் – அறன் இல்லாத அவன் நாட்டுப் பசுக்களும் பால் குன்றும்;
அறுதொழிலோர் நூல் மறப்பர் – அந்தணரும் நூல்களை மறந்துவிடுவர்.
ஆபயன் – ஆவால் கொள்ளும் பயன்,
அறுதொழில்களாவன (வேதம்) ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என இவை.


திருக்குறள்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.


மனுஸ்மிருதி

இத்யேதி: கர்மபிர்வ்யஸ்தா
த்விஜா வர்ணாந்தரம் கத:
தர்மோ யக்ஞ்யக்ரியா தேஷாம்
நித்யம் ந ப்ரதிஷித்யதே


பொருள்

பிராமணர்களே தங்கள் நியமங்களைக் கைவிட்டதால், வெவ்வேறு செயல்முறைகளை மேற்கொண்டு, மற்ற மூன்று வர்ணங்களைச் சார்ந்தவர்கள் ஆனார்கள்.

மனுஸ்மிருதி

சூத்ரோ ப்ராம்மணதாமேதி
ப்ராம்மணஸ்சைதி சூத்ரதாம்
க்ஷத்ரியாஜ்ஜாதமேவம் து
வித்யாத் வைச்யாத் ததைவ ச

பொருள்

சூத்திரன் பிராமணன் ஆகலாம்; பிராமணனும் சூத்திரன் ஆகலாம்; அதேபோல, க்ஷத்ரிய மற்றும் வைச்ய வகைகளைச் சார்ந்தவர்களின் மகன்களும், வேறு வர்ணத்தை அடையலாம்.

மனுஸ்மிருதி

கோரக்ஷகான் வாணிஜிகாம்ஸ்ததா
காருகுசீலவான்
ப்ரேஷ்யான் வார்துஷிகாம்ஸ்சைவ
விப்ரான் சூத்ர வதாசரேத்

ஆடு, மாடுகளை வளர்த்துக்கொண்டும்; வர்த்தகம் செய்தும்; கை வேலை செய்பவர்களாகவும், நடிகர்கள் மற்றும் பாடகர்களாகவும், வட்டிக்குப் பணம் தருகிறவர்களாகவும் வாழ்கிற பிராமணர்கள், சூத்ரர்களாகவே கருதத்தக்கவர்கள்.

திருக்குறள்

மறப்பினும் ஓத்துக் கொளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்


உரை

ஓத்து மறப்பினும் கொளல் ஆகும் – கற்ற வேதத்தினை மறந்தானாயினும் அவ்வருணம் கெடாமையின், பின்னும் அஃது ஓதிக் கொள்ளலாம்; பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக்கெடும் – அந்தணனது உயர்ந்த வருணம் தன் ஒழுக்கம் குன்றக்கெடும்.
திருக்குறள்

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை
 – 57

மனுஸ்மிருதி-9 : 12

பெண்களை வீட்டினுள் நம்பிக்கைக்குரிய காவலர்கள்மூலம் காத்துவைதிருத்தல் மூலம் அவரது ஒழுக்கத்தைக் காத்துவைத்திடமுடியாது. அவர்கள் தாமாகவே உறுதியுடன் தமது ஒழுக்கத்தைக் காத்துக்கொள்வதே சிறந்தது.
நிறைவுரை

வேதப் பொருளை விரகால் விரித்துலகோர்
ஓதத் தமிழால் உரைசெய்தார் – ஆதலால்
உள்ளுநர் உள்ளும் பொருளெல்லாம் உண்டென்ப
வள்ளுவர் வாய்மொழி மாட்டு.
– செயலூர்க் கொடுஞ்செங்கண்ணனார்


கற்கை நன்றே; கற்கை நன்றே;
பிச்சை புகினும் கற்கை நன்றே (35)


நாற்பால் குலத்தின் மேற்பால் ஒருவன்
கற்றிலன் ஆயின் கீழ் இருப்பவனே (37)

எக்குடிப் பிறப்பினும் யாவரே ஆயினும்
அக்குடியில் கற்றோரை ‘மேல்வருக‘ என்பர் (38)

கல்லா ஒருவன் குலநலம் பேசுதல்
நெல்லினுள் பிறந்த பதர் ஆகும்மே (36)

-அதிவீர ராம பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை என்னும் நறுந்தொகை

இவை யாவும் நமது முன்னோர்களான தமிழர்கள் நமது அற நெறி இது என்று சொல்லிவைத்த பாடல்கள். பலருக்கு ஜி.யு.போப் வகையறாக்கள் மட்டுமே தமிழர்களாகத் தெரிகின்றனர் போலும்

19/05/2012

ஆதிசங்கரர்வரலாறு




ஆதிசங்கரர், நமது பாரத புண்ணியபூமியின் தர்மத்தைக்காக்க வந்த சிவபெருமானின் அவதாரமாகக் கருதப்படுகிறார்.

இந்த புண்ணிய பூமியின் சனாதன தர்மமும்,வேத நெறிகளும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு ஆன்மிக, வாழ்வியல் வானில் இருள் சூழ்ந்த வேளையில் ஆதிசங்கரரது அவதாரம் நிகழ்ந்தது.

ஆதிசங்கரரது தவ வலிமையாலும் அறிவுக் கூர்மையினாலும் பாரத தர்மம் புத்துயிர்பெற்றது. வேதநெறியைச் சூழ்ந்திருந்த கருமேகங்கள் விலகின. மக்களின் வாழ்வும் மலர்ந்தது.

ஆதிசங்கரர் கீர்த்திஸ்தம்ப மண்டபம்,காலடி

தோற்றம்

கேரளத்தின் காலடியில், தானமும் தவமும் தம் இரு கண்கள் எனப் போற்றி வாழ்ந்துவந்த அந்தண தம்பதிகளான சிவகுரு,ஆர்யாம்பாள் தம்பதியினருக்கு நீன்டகாலமாக ஒரு குழந்தைச்செல்வம் இல்லையே என்ற மனக்குறை இருந்து வந்தது. அம்மனக்குறை நீங்கவேண்டி அவர்கள் திருச்சூரில் அருள்பாலித்துவரும் வடக்குநாதரிடம் ஒருமண்டலம் விரதமிருந்து குழந்தைவரம் வேண்டினர். அவர்களது மனமார்ந்த வேண்டுதலை ஏற்றுக்கொண்ட சிவன் அவர்தம் மேன்மையை உலகுக்கு உணர்த்தவிரும்பியவராக அவர்களிடம் நீண்ட ஆயுளும் குறைந்த அறிவுமுடைய குழந்தை வேண்டுமா? அல்லது அறிவிற்சிறந்த குறைந்த ஆயுளை உடைய குழந்தை வேண்டுமா? என்று கேட்டார், இறை நம்பிக்கையும் பக்தியும்கொண்ட அவர்கள் இறைவன் திருவுள்ளம் எதுவோ அதன்படியே தமக்கு குழந்தைப்பேறு அளிக்குமாறு வேண்டினர். அவர்தம் பக்தியை உலகுக்கு உணர்த்திய இறைவன் தானே அவர்களுக்கு மகனாக அவதரித்தார்.

பொ.வ 788 ஆம் வருடம் திருவாதிரை நட்சத்திரத்தில் மகான் சங்கரரின் அவதாரம் நிகழ்ந்தது. சங்கரர் பிறந்த சிறிது காலத்திலேயே தமது தந்தையை இழக்க வேண்டியதாயிற்று அதன் காரணமாக அவரது உபனயனம் தாமதமானது. பிறகு அவரது தாயாரால் உபனயனம் நிகழ்த்திவைக்கப் பட்டது. அந்த இளம்வயதிலேயே சங்கரரது அறிவுக்கூர்மை வெளிப்பட்டது. தனது எட்டாம் வயதில் சங்கரர் நான்கு வேதங்களையும் கற்றுத் தேர்ந்தார்.

 

ஒருமுறை பிச்சை எடுக்கச்சென்ற சங்கரர், தனது ஏழ்மைநிலையையும் பொருட்படுத்தாமல் தனக்கு உணவாக வைத்திருந்த ஒரே ஒரு நெல்லிக்கனியையும் தனக்கு பிச்சையாக இட்ட பெண்ணின் செயலை வியந்து கனகதாரா ஸ்தோத்திரம் பாடினார் உடனே அங்கு தங்க நெல்லிக்காய்கள் மழையாகப் பொழிந்தன அப்பெண்ணின் ஏழ்மை மறைந்தது.



சன்னியாசம்

வேதங்களையும் சாஸ்த்திரங்களையும் கற்றுத்தேர்ந்த சங்கரை கிருஹஸ்த்தனாக ஆக்கிப்பார்க்க வேண்டும் என்று அவரது தாயார் விரும்பினார். ஆனால் சங்கரரோ தனது அவதாரநோக்கம் நிறைவேறும் பொருட்டு சன்னியாசி ஆக விரும்பினார்

 

தாயின் ஆசியுடன் சன்னியாசம் பெற விரும்பிய சங்கரர் ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார். அன்று வழக்கம்போல் சங்கரர் பூர்ணா ஆற்றில் நீராடச்சென்றபோது, திடீரென்று ஒருமுதலை அவரது காலைக் கவ்வியது அதைக்கண்ட அவரது தாயார் மனம் பதைத்தார், தன்னைச் சன்னியாசியாக அனுமதித்தால் முதலை விட்டுவிடும் என சங்கரர் கூறியதை ஏற்ற அவரது தாயார் அதற்கு அனுமதியளித்த மறுகணமே முதலை சங்கரரை விட்டுவிட்டு மறைந்தது.

குருவை அடைதல்

தாயின் அனுமதியையும், ஆசிகளையும் பெற்றுக்கொண்டு சங்கரர் ஒரு சத்குருவைத் தேடி வடக்குநோக்கிச் சென்றார்

வடதிசை நோக்கிச்சென்ற சங்கரர் நர்மதை ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஓம்காரேஷ்வர் எனுமிடத்தில் கௌடபாதரின் சிஷ்யரான கோவிந்த பகவத்பாதரை சந்தித்தார். ஆதிசங்கரரின் புலமையைக் கண்டுகொண்ட கோவிந்தபகவத்பாதர் அவரைத் தனது சிஷ்யராக ஏற்றுக்கொண்டார்.

குருவின் விருப்பத்திற்கிணங்கி பிரம்மசூத்திரங்களுக்கு விளக்கவுரை எழுதியதோடல்லாமல் வேதாந்தக் கொள்கையான அத்வைத கொள்கையை நாடெங்கும் பரப்பினார்.

சங்கரர் காசியில் இருந்தபொழுது சோழதேசத்திலிருந்துவந்த சனந்தன் என்பவரைத் தனது முதல் சிஷ்யனாக ஏற்றுக்கொண்டார்.

 

ஒருமுறை சங்கரர் தனது சிஷ்யர்களுடன் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு ஒரு குறுகியபாதைவழியாகச் செல்லும்பொழுது எதிரில் நான்கு நாய்களைப்பிடித்தபடி ஒரு நாகரீகமற்ற மனிதன் வருவதைக் கண்டார், சங்கரரது சிஷ்யர்கள் அம்மனிதனை, சங்கரருக்கு இடைஞ்சல் ஏற்படுத்தாமல் விலகிச்செல்லச் சொன்னபோதுஅந்த ஞானி எதை விலக சொல்லுகிறாய்? என் உடலையா? என் ஆன்மாவையா எனக் கேட்டார். இந்த ஆழ்ந்த ஞான கருத்துக்களைக் கேட்டு சிஷ்யன் நிலைகுலைந்து போனான். தன் குரு கூறும் கருத்துக்களை நாயுடன் உலாவும் இவர் எப்படி கூறுகிறார் என அதிர்ந்தான். ஆதிசங்கரர் அந்த ஞானியைப் போற்றியும் அந்த ஞானியுடன் உறையாடியதையும் மனீஷபஞ்சகம் என்ற நூலாகத் தொகுத்தார். அந்த ஞானி வேறுயாருமல்ல அவர் சாட்சாத் அந்த பரமசிவனேதான், நான்கு வேதங்களே அவரது நாய்களாக வந்தவை.

மண்டனமிஸ்ராவைஆட்கொள்ளுதல்

சங்கரர் அத்வைதத்தை நிலைனிறுத்தும்பொருட்டு மீமாம்ச தத்துவ ஞானியான குமாரிலாபட்டருடன் வாதம்செய்ய விரும்புகிறார், ஆனால் பௌத்த கொள்கைகளை தர்கரீதியாக வெல்ல நினைத்த குமாரிலாபட்டர் தனது அடையாளத்தை மறைத்து ஒரு பௌத்த குருவை அடைந்து அம்மத தத்துவங்களைக் கற்றுக்கொள்கின்றார், இவ்வாறு குருவைத் தான் ஏமாற்றிய பாவத்துக்கு பிரயாசித்தமாக எரியும் உமிக்கு நடுவில் தனது வாழ்க்கையை முடித்துகொள்ளும் நோக்கில் அமர்ந்திருந்தார் ஆகவே அவர் தனது சிஷ்யரான மண்டனமிஸ்ராவிடம் சென்று வாதம் புரியுமாறு சங்கரரைக் கேட்டுக்கொண்டார்

சங்கரரும் மண்டனமிஸ்ராவும் 15 நாட்கள் தர்க்கம் புரிந்தனர். அவர்களுக்கு மண்டனமிஸ்ராவின் மனைவியும் சிறந்த அறிவாளியுமான உபயபாரதி நடுவராக இருந்தார். இறுதியில் மண்டனமிஸ்ரா தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். இந்நிலையில் உபயபாரதி சங்கரரை வாதத்துக்கு அழைத்தார், முழுமையான வெற்றியை நிலைநிறுத்துவதற்காக சங்கரரும் அவருடன் வாதம்செய்ய ஒப்புக்கொண்டார்.

சன்யாசியான சங்கரரிடம் ஆண்,பெண் இடையே நிகழும் தாம்பத்ய உறவைப்பற்றிய கேள்விகளை உபயபாரதி தொடுத்தபொழுது தனது உன்னத ஞான ஆற்றலால் அவற்றிற்கு தக்க பதிலலித்து வாதத்தில் வெண்றார் சங்கரபகவத்பாதர்.

இந்தவெற்றியின் விளைவாக முன்பே ஒப்புக்கொண்டபடி மண்டனமிஸ்ரா துரவறம் பூண்டு சங்கரரின் சிஷ்யரானார். சங்கரர் அவருக்கு சுரேஷ்வராச்சார்யா எனும் பெயரிட்டு தனது சிஷ்யராக்கிக் கொண்டார். 

சங்கரரது திக் விஜயம்

சங்கரர் தனது சீடர்களுடன் தனது தேச யாத்திரையைத் தொடங்கினார். ஸ்ரீசைலம் சென்ற சங்கரர் சிவனைப் போற்றும் சிவானந்தலகரி எனும் பாடலை இயற்றினார்.
ஒருசமயம் கபாலிகன் ஒருவனின் வஞ்சகமான வேண்டுகோளுக்கு இணங்கி சங்கரர் தன்னை பலியாக அர்ப்பணம்செய்ய இருந்த நேரத்தில் இதை தனது ஞான திருஷ்டியால் உணர்ந்த அவரது சிஷ்யர் பத்மபாதர் பகவான் நரசிம்மரை வேண்ட பகவான் நரசிம்மர் சிம்மரூபத்தில் தோன்றி அந்த கபாலிகனை வதம்செய்தருளினார். இங்கு ஆதிசங்கரர் நரசிம்மரைப் போற்றி லக்ஷ்மினரசிம்ம ஸ்தோத்திரத்தை இயற்றினார்.

பிறகு கொல்லுர் சென்ற சங்கரர் அங்கு மூகாம்பிகைகோவிலில் பெற்றோரால் கைவிடப்பட்ட சிறுவனை மேண்மை அடையச்செய்து அவரை ஹஸ்த்தமலாக்கா எனும் பெயரிட்டு தனது சீடராக்கிக்கொண்டார்.தன்னை வந்தடைந்த கிரி எனும் சிறுவனை ஞானமலித்து தோடகாச்சார்யாராக ஆக்கினார்.

அதன்பின் பாரததேசமெங்கும் சுற்றுப்பயனம்செய்து சமணர்களையும், தாந்த்ரீக அறிஞர்களையும் வாதத்தால் வென்றார். காஷ்மீரம் சென்று உயர்ந்த ஞானபீடமான சர்வக்யபீடத்தை அலங்கரித்தார்.
இவ்வாறு பாரதம் முழுவதும் தர்மத்தை நிலைனிருத்திய சங்கரர் அவற்றை பரிபாலனம் செய்யும்பொருட்டு நான்கு மடங்களையு நிறுவினார்.

முதல் மடம் சிருங்கேரியில் நிறுவப்பட்டது.