25/05/2012

மனுஸ்மிருதி,திருக்குறள்-ஓர் ஒப்பீடு

 

ஆரியன் என்றால் உயர்ந்தவன், மேன்மையான தர்மநெறியில் வாழ்பவன். வேதம் முதற்கொண்டு திருக்குறள்,திருமந்திரம் என அனைத்து நூல்களும் கூறும் நன்னெறியே உயர்ந்த வாழ்வியல் நெறி. யார் அவற்றைப் பேணி வாழ்கின்றனரோ அவரே ஆரியர் ஆகவே அவ்வறத்தைக் கைக்கொண்டு வாழும் தமிழர் அனைவரும் ஆரியரே!

ஊர் ஒற்றுமையாய் இருக்கவேண்டும் என்று அவ்வூரின் முன்னேற்றத்தை விரும்புவோர் நினைப்பது இயல்பு. கூத்தாடிகளுக்கு ஊர் இரண்டுபட்டால்தானே கொண்டாட்டம். நாமும் அதுபோல தமிழும் ஆரியமும் வேறல்ல ஒன்றுதான் எனும் உண்மையைத் தெளிவுறுத்துகின்றோம், ஆனால் குழப்பவாதிகளின் கருத்துகளுக்கு நமது தமிழன்பர்கள் சிலரும் பலியாகி அவர்களது ஊதுகுழலாகிவிட்டனர் அதுதான் வருத்தமாக இருக்கிறது.

சரி விஷயத்துக்கு வருவோம், இங்கு நாம், (உள்நோக்கத்துடன்) தவறாகப்புரிந்துகொள்ளப்பட்ட மனுசாஸ்திரத்துக்கும் திருக்குறளுக்கும் உள்ள ஒற்றுமைகள் பலவற்றைப் பார்ப்போம்.

வேதத்தைக் கற்பது, வேதத்தைக் கற்பிப்பது; யாகம் செய்வது, யாகங்களைச் செய்விப்பது; தானம் வாங்குவது, தானம் செய்வது – என்ற ஆறு ‘தொழில்கள்’ பிராமணனுக்கு விதிக்கப்பட்டுள்ளன.

இதைக் கூறுகிற மனு ஸ்ம்ருதி வாசகம் இது :

அத்யாபனம் அத்யயனம்
யஜனம் யாஜனம் ததா
தானம் ப்ரதிக்ரஹ ஸ்சைவ
ஷட் கர்மாண்யக்ரஜன்மன:
(75/467)திருக்குறள்

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.


உரை:
காவலன் காவான் எனின் – காத்தற்குரிய அரசன் உயிர்களைக் காவான் ஆயின்;
ஆபயன் குன்றும் – அறன் இல்லாத அவன் நாட்டுப் பசுக்களும் பால் குன்றும்;
அறுதொழிலோர் நூல் மறப்பர் – அந்தணரும் நூல்களை மறந்துவிடுவர்.
ஆபயன் – ஆவால் கொள்ளும் பயன்,
அறுதொழில்களாவன (வேதம்) ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என இவை.


திருக்குறள்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.


மனுஸ்மிருதி

இத்யேதி: கர்மபிர்வ்யஸ்தா
த்விஜா வர்ணாந்தரம் கத:
தர்மோ யக்ஞ்யக்ரியா தேஷாம்
நித்யம் ந ப்ரதிஷித்யதே


பொருள்

பிராமணர்களே தங்கள் நியமங்களைக் கைவிட்டதால், வெவ்வேறு செயல்முறைகளை மேற்கொண்டு, மற்ற மூன்று வர்ணங்களைச் சார்ந்தவர்கள் ஆனார்கள்.

மனுஸ்மிருதி

சூத்ரோ ப்ராம்மணதாமேதி
ப்ராம்மணஸ்சைதி சூத்ரதாம்
க்ஷத்ரியாஜ்ஜாதமேவம் து
வித்யாத் வைச்யாத் ததைவ ச

பொருள்

சூத்திரன் பிராமணன் ஆகலாம்; பிராமணனும் சூத்திரன் ஆகலாம்; அதேபோல, க்ஷத்ரிய மற்றும் வைச்ய வகைகளைச் சார்ந்தவர்களின் மகன்களும், வேறு வர்ணத்தை அடையலாம்.

மனுஸ்மிருதி

கோரக்ஷகான் வாணிஜிகாம்ஸ்ததா
காருகுசீலவான்
ப்ரேஷ்யான் வார்துஷிகாம்ஸ்சைவ
விப்ரான் சூத்ர வதாசரேத்

ஆடு, மாடுகளை வளர்த்துக்கொண்டும்; வர்த்தகம் செய்தும்; கை வேலை செய்பவர்களாகவும், நடிகர்கள் மற்றும் பாடகர்களாகவும், வட்டிக்குப் பணம் தருகிறவர்களாகவும் வாழ்கிற பிராமணர்கள், சூத்ரர்களாகவே கருதத்தக்கவர்கள்.

திருக்குறள்

மறப்பினும் ஓத்துக் கொளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்


உரை

ஓத்து மறப்பினும் கொளல் ஆகும் – கற்ற வேதத்தினை மறந்தானாயினும் அவ்வருணம் கெடாமையின், பின்னும் அஃது ஓதிக் கொள்ளலாம்; பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக்கெடும் – அந்தணனது உயர்ந்த வருணம் தன் ஒழுக்கம் குன்றக்கெடும்.
திருக்குறள்

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை
 – 57

மனுஸ்மிருதி-9 : 12

பெண்களை வீட்டினுள் நம்பிக்கைக்குரிய காவலர்கள்மூலம் காத்துவைதிருத்தல் மூலம் அவரது ஒழுக்கத்தைக் காத்துவைத்திடமுடியாது. அவர்கள் தாமாகவே உறுதியுடன் தமது ஒழுக்கத்தைக் காத்துக்கொள்வதே சிறந்தது.
நிறைவுரை

வேதப் பொருளை விரகால் விரித்துலகோர்
ஓதத் தமிழால் உரைசெய்தார் – ஆதலால்
உள்ளுநர் உள்ளும் பொருளெல்லாம் உண்டென்ப
வள்ளுவர் வாய்மொழி மாட்டு.
– செயலூர்க் கொடுஞ்செங்கண்ணனார்


கற்கை நன்றே; கற்கை நன்றே;
பிச்சை புகினும் கற்கை நன்றே (35)


நாற்பால் குலத்தின் மேற்பால் ஒருவன்
கற்றிலன் ஆயின் கீழ் இருப்பவனே (37)

எக்குடிப் பிறப்பினும் யாவரே ஆயினும்
அக்குடியில் கற்றோரை ‘மேல்வருக‘ என்பர் (38)

கல்லா ஒருவன் குலநலம் பேசுதல்
நெல்லினுள் பிறந்த பதர் ஆகும்மே (36)

-அதிவீர ராம பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை என்னும் நறுந்தொகை

இவை யாவும் நமது முன்னோர்களான தமிழர்கள் நமது அற நெறி இது என்று சொல்லிவைத்த பாடல்கள். பலருக்கு ஜி.யு.போப் வகையறாக்கள் மட்டுமே தமிழர்களாகத் தெரிகின்றனர் போலும்

No comments:

Post a Comment