14/04/2013

ஈழத்தமிழருக்கு நாம் செய்யவேண்டியது என்ன?


  தமிழகத்தில் மாணவர்கள் மகத்தான தன்னெழுச்சியுடன் போராடுகிறார்கள், சரி. இந்தப் போராட்டத்தின் தலையாய கோரிக்கைகள் என்னென்ன?

 1. இலங்கை நடத்திய போர்க்குற்றங்கள் தொடர்பாக அதிபர் ராஜபட்ச தண்டிக்கப்பட வேண்டும். இதற்கான சர்வதேச விசாரணை நடத்த இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்.


2. ஈழத் தமிழ் மக்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். தனித்தமிழீழம் வேண்டும்.


  தமிழகத்துக்குத் தனி வெளியுறவுத் துறை வேண்டும் என்பது உள்பட இன்னும் இன்னும் ஏராளமான கோரிக்கைகள் இருக்கின்றன.




  இவை எல்லாம் யாரை நோக்கி விடுக்கப்படும் கோரிக்கைகள் தெரியுமா? இந்தியவிலிருக்கும் காங்கிரஸ்  அரசை நோக்கி. அதாவது, எந்த அரசு ஈழப் போரைப் பின்னின்று இயக்கியது என்று இவர்களால்  குற்றம்சாட்டப்படுகிறதோ, அந்த அரசை நோக்கி!



 சர்வதேச விசாரணை என்று நாம் யாரை மனதில் வைத்துக் கேட்கிறோம்? அமெரிக்க - ஐரோப்பிய நாடுகளை. அதாவது, எந்த நாடுகள் எல்லாம் ஈழப் படுகொலையின் பின்னணிச் சதியில் பங்கு வகித்தனவோ, அந்த நாடுகள் விசாரணை நடத்தி, நீதி வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். எனில், நம்முடைய கோரிக்கைகள் எந்த அளவுக்குக் கள யதார்த்தத்துடன் பொருந்துபவை?


  இவை எல்லாம் எந்த அளவுக்கு ஈழத்தில் வாழும் தமிழர்களின் இன்றைய பிரச்னைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டவை?


 போரில் உறவுகளையும் வாழ்வாதாரத்தையும் பறிகொடுத்துவிட்ட நிலையில், மறுவாழ்வுக்கென உருப்படியாக எந்த நடவடிக்கையையும் அரசு எடுக்காத சூழலில், வேலைவாய்ப்பின்மையால் சூழும் வறுமைதான் ஈழத் தமிழர்களின் இன்றைய தலையாயப்   பிரச்னை. போருக்குப் பின்னரும் வீதிக்கு வீதி நிற்கும் ராணுவமும், திட்டமிட்டு நடத்தப்படக்கூடிய சிங்களமயமாக்கமும்தான் அவர்கள் இன்றைக்கு எதிர்கொள்ளும் பெரும் அரசியல் நெருக்கடிகள்.


  ஒரு போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்றால், எந்த மக்களுக்காக அந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறதோ, அந்த மக்களின் அன்றாட வாழ்வில் அந்தப் போராட்டத்துக்கான நெருக்கடியும் தேவையும் இருக்க வேண்டும். போராட்டத்தின் தேவை - தீர்வு குறித்த தெளிவு அந்த மக்களிடத்தில் பயிற்றுவிக்கப்பட வேண்டும். முக்கியமாக, சம்பந்தப்பட்ட மக்களின் கையில் அந்தப் போராட்டம் இருக்க வேண்டும்.




  இந்தியாவில் வாழும் தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் ஈழப் போர் ஒரு பெரும் குற்றவுணர்வை உருவாக்கி இருக்கிறது. இயலாமையும் அரசியல் கையாலாகாத்தன்மையும் சேர்த்து உருவாக்கிய குற்றவுணர்வு அது. வெறுமனே ஒழிக கோஷம் போடுவதால் மட்டும் அந்தக் குற்றவுணர்விலிருந்து நாம் வெளிப்பட்டுவிட முடியாது.


 இன்னும் ஒருபடி மேலே போய், தமிழகம் வரும் சிங்களர்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்கள் சூழலை மேலும் நாசப்படுத்தக் கூடியவை.


 இலங்கையில் போர் உச்சகட்டத்திலிருந்த நேரம். நாசகார ஆயுதங்கள் சூழ பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ராணுவத்தின் பிடியில் சிக்கியிருந்த சூழலில், கொழும்பில் தங்களுடைய இறுதி வான் தாக்குதலை நடத்தினர் விடுதலைப் புலிகள்.


  இலங்கை ராணுவம் சுதாரித்துக்கொண்ட நிலையில், புலிகளின் இரு விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட பெரிய சேதம் இன்றி தோல்வியில் முடிந்தது அந்தத் தாக்குதல்.


 ஒருவேளை புலிகள் கணக்குப்படி அந்தத் தாக்குதல் வெற்றி பெற்றிருந்தால், அதிகபட்சம் ஐந்நூறு அறுநூறு சிங்களர்கள் செத்திருக்கலாம். ஆனால், பதிலுக்குத் தமிழர்கள் இன்னும் எத்தனை ஆயிரம் உயிர்களைக் கூடுதலாகக் கொடுக்க வேண்டி இருந்திருக்கும்? புலிகளிடம் அன்று வெளிப்பட்ட அதே தவறான ராஜதந்திரம்தான் இன்றைக்குத் தமிழகம் வரும் சிங்களர்களைக் குறிவைத்துத் தாக்குவோரிடமும் வெளிப்படுகிறது.


 அன்றைக்குப் புலிகளின் மனதை ஆக்கிரமித்தது சாகச மனோபாவம் என்றால், இன்றைக்கு  வன்முறையில் இறங்கும் ஈழ ஆதரவாளர்களை ஆக்கிரமிப்பது கும்பல் மனோபாவம். 


  இனவெறிக்கு எதிராக நாம் களம் இறங்குவதாகச் சொல்கிறோம். ஆனால், அதே இனவெறியைத்தான் நாம் வெளிப்படுத்துகிறோம்.  



தமிழர் வீரம்

இலங்கையில் வாழும் தமிழர்களிடையே பதற்றத்தை உருவாக்குவதோடு மட்டும் இல்லாமல், போருக்குப் பின் மெல்ல இன அடிப்படைவாதப் போட்டியிலிருந்து விலகி, வேறு திசை நோக்கி நகர ஆரம்பித்திருக்கும் இலங்கை அரசியலை மீண்டும் இன அடிப்படைவாதத்தை நோக்கித் தள்ளவும் இது வழிவகுக்கும்.


  இன்னும் இந்தியாவுக்குள்ளேயே நம்முடைய நிலைப்பாட்டை எதிர்க்கும் ஏனைய மாநிலத்தவர்கள் மீது நாம் வெளிப்படுத்தும் ஆத்திரம் ஈழத் தமிழர்களை அன்னியப்படுத்தவே செய்யும்.


 ஈழப் போரின் பின்னணி ஒரு சர்வதேச சதி. இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ரஷியா... எந்த ஓர் நாடும் இனி ஒருபோதும் ஈழ விடுதலைக்கு உதவாது.


 இன்றைக்கு ஈழத் தமிழர்களின் உடனடித் தேவை பொருளாதார மீட்சியும் ராணுவமயமாக்கலிலிருந்து விடுவிப்பும். இலங்கை அரசுக்கும் அரசியல்வாதிகளுக்கும் நாம் உணர்த்த வேண்டிய முதல் உண்மை தமிழர்கள் நலனின்றி இலங்கையில் அமைதி சாத்தியம் இல்லை என்பதை.


 ஈழத் தமிழர்கள் நலன் சார்ந்த நம்முடைய எந்தப் போராட்டமும் இந்தக் கள யதார்த்தச் சூழலைக் கணக்கில் எடுத்துக்கொண்டே தொடங்க வேண்டும். வெளிநாடுவாழ் ஈழத்தமிழர்களின் மன ஆறுதலுக்காகவோ, தமிழக அரசியல் கட்சிகளின் குற்றஉணர்வை மறைப்பதற்காகவோ நாம் போராடுவதால், யாருக்கு என்ன பயன்? ஈழத்தில் வாழும் தமிழர்களின் சுதந்திரமும், நல்வாழ்வும், எதிர்காலமும்தான்  நமது இலக்காக இருக்க வேண்டும்!


இலங்கைத்தமிழருக்காக இவ்வளவு போராட்டம் நடத்தும்  நாம் ,  நமது நாட்டில் இன்னும் அகதிகளாக வாழும் இலங்கைத்தமிழரின் நிலை எப்படி உள்ளது?  அவர்களை  தமிழர் நலனுக்காக கூப்பாடு போடும் கட்சிகளின்  ஆட்சிகளில் எப்படி நடத்தினார்கள், இப்பொழுதுஎப்படி நடத்துகிறார்கள் என்பதையும் சிறிது சிந்தித்து  மனசாட்சியோடு செயல்பட்டால்  இன்னும் 

நன்றாக இருக்கும்.



கொத்தடிமைகளைவிட மோசமாக மிருகக்காட்சிசாலையில் அடைக்கப்பட்ட விலங்குகளைப்போல் நம்மால் நடத்தப்படும் அந்த அகதிகளிடம்  முதலில் நாம் நமது மனிதாபிமானத்தையும்  இனப்பற்றையும் காட்டுவோம், கௌரவமாக அவர்கள் வாழ நம்மால் வழிசெய்யமுடியும், முதலில்  நாம் அதைச்செய்துவிட்டு பிறகு ராஜபட்சாவை என்னசெய்யவேண்டுமோ  அதை செய்யலாம்.

    
  ஈழத் தமிழர்கள் நலனில் நாம் உண்மையாகவே அக்கறை காட்டுகிறோம் என்றால், நாம் பணிகளைத் தொடங்க வேண்டிய இடம் இதுதான்.


  •  முதலாவது, அவர்கள் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள்,  இதில்  தமிழகத்தில் உள்ள தமிழ் அகதிகட்கு  இரட்டைக்குடியுரிமை அளித்தல் மற்றும்  அவர்களுக்கு இங்கு  வாக்குரிமை அளித்தால் ஆகியன அடங்கும்   
  • இரண்டாவது ராணுவமயமாக்கலை உடைப்பதற்கான நடவடிக்கைகள்,
  •  மூன்றாவது சிங்களமயமாக்கலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள்...
  • இந்த வரிசையின் கடைசி கட்டத்தில்தான் தமிழீழத்துக்கான நடவடிக்கைகள் அமையலாமே தவிர, முதலாவதாக அல்ல.
சித்தித்து  இனியாவது  செய்வன  திருந்த செய்வோம் . 


இணைப்பு

இன்னும் ஏன் அகதி முகாம்?

First Published : 08 April 2013 02:22 AM IST
தமிழ்நாட்டிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிச்செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 120 பேர் நடுக்கடலில் மீட்கப்பட்டு, நாகையில் ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியா சென்ற சில மாதங்களிலேயே தங்களுக்குக் குடியுரிமை கிடைத்துவிடும் என்பதால் வாழ்வுதேடித் தப்பிச் செல்ல முற்பட்டதாகவும், இங்கே படித்துப் பட்டம் பெற்றாலும்கூட, இலங்கைத் தமிழர்களுக்கு அரசு வேலையும் கிடைப்பதில்லை, தனியார் அலுவலகங்களிலும் வேலை கிடைப்பதில்லை என்பதாலும் இந்த முடிவுக்கு வந்ததாக அவர்கள் அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள 132 முகாம்களில், தங்க வைக்கப்பட்டுள்ள சுமார் ஒரு லட்சம் அகதிகளின் வாழ்க்கைச் சூழல் மிகவும் மோசமாக இருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இந்த அகதிகளுக்கு, மிகச் சிறிய அளவில் நிதியுதவியும் அரிசி, மண்ணெண்ணெய் ஆகியனவும் வழங்கப்படுகின்றன. அது மட்டுமே வாழ்க்கைக்குப் போதுமா?
தமிழ்நாட்டில் ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு, இலங்கை அகதிகள் முகாம்கள்  முற்றிலும் புறக்கணிக்கப்படுவதும், சந்தேகத்துடன் பார்க்கப்படுவதுமான சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. இலங்கை அகதிகளை, தமிழீழ ஆதரவுப் போராட்டங்களுக்குப் பயன்படுத்திக்கொண்ட தமிழக அரசியல் கட்சிகள், அவர்களது வாழ்வாதாரம் குறித்துப் பெரிதும் பேசியதில்லை என்பதும் நிலைமை மோசமானதற்கு இன்னொரு காரணம்.
மேலும், அகதிகளை வைத்து வருவாய்த்துறை அலுவலர்கள் கொழித்தனர் என்பது மற்றுமொரு கசப்பான உண்மை. இவர்களுக்கான நிதியுதவியில் கையாடல் செய்யப்பட்டது.
 தமிழ்நாட்டில் எத்தனை இலங்கை அகதிகள் இருக்கிறார்கள், முகாமைவிட்டு வெளியேறித் திரும்பாதவர்கள் எத்தனை பேர் என்ற புள்ளிவிவரம்கூட முறையாக இல்லாத நிலையில்தான் வருவாய்த்துறை இருக்கிறது.
ஒவ்வொரு அகதியும் முகாமில் உள்ள பதிவேட்டில் தினமும் கையெழுத்திட வேண்டும். இல்லாவிட்டால் அவர் எங்கே சென்றிருந்தார் என்பதற்குச் சரியான விளக்கம் சொல்ல வேண்டும். இரண்டு நாள்களுக்கு மேலாக முகாமில் இல்லாமல்போனால் அவர் பெயர் நீக்கப்பட வேண்டும், அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். முகாமுக்குத் திரும்பாதவர் இலங்கை சென்றாரா, அல்லது வேறு மாநிலத்துக்குச் சென்றாரா, அல்லது வருவாய்த் துறைக்கு பல பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்து, குடும்ப அட்டை பெற்று இந்தியக் குடிமகன் போலவே மாறிவிட்டாரா என்பதைக் கண்டறிய வேண்டும். ஆனால், வருவாய்த் துறையும் காவல்துறையின் "கியூ' பிராஞ்சும் இதை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாகத் தெரியவில்லை.
ஆஸ்திரேலியா செல்ல முயன்ற இலங்கை அகதிகளை நடுக்கடலில் இருந்து அழைத்து வந்து, இருபத்து நான்கு மணி நேரத்துக்கும் மேலாக, இவர்களை என்ன செய்வது என்று தெரியாமல், நாகையில் ஒரு மண்டபத்திலேயே தங்க வைத்திருக்கும் அரசு அதிகாரிகளின் நோக்கம் என்ன? இவர்களில் பல்வேறு முகாம்களைச் சேர்ந்தவர்கள் 75 பேரை மட்டுமே நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தினர். மற்றவர்களை ஏன் நீதிமன்றத்துக்கு அழைத்துவரவில்லை?
காரணம், இவர்கள் தங்கள் முகாம்களைவிட்டு வெளியேறி பல நாள்களாகியும், இவர்களது பெயர் இன்னும் நீக்கப்படாமல் இருக்கக்கூடும். ஆகவே அதை சரி செய்வதற்காக நடவடிக்கையைத் தாமதப்படுத்துகிறார்கள் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. இவர்களில் பலர் அகதிகள் அல்ல, இந்தியர்கள்தான் என்பதாகக்கூட இருக்கலாம்.
"இலங்கை அகதிகள்' என்ற போர்வையில் ஆஸ்ரேலியாவிலும், கனடாவிலும் தஞ்சம் அடைந்து பிறகு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முற்பட்டவர்களும் சரி, இந்தியாவில் சொந்தங்களும், சொத்துகளும் உள்ளவர்களாய், முகாம்களுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழர்களும் சரி, தொழில்செய்து வசதியாக வாழ்ந்துகொண்டிருக்கும்போது, ஏழை இலங்கை அகதிகள் மட்டும் சிறைக்கைதிகள் போல வாழும் நிலைமை எந்த வகையிலும் நியாயமற்றது.
அவர்களுக்கான நிதியுதவி, கல்வி, தொழில் ஆகியவற்றுக்கு இந்திய அரசு  முன்னுரிமை தந்து, அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை வழங்க வேண்டும். அல்லது முகாம்களைக் கலைத்துவிட்டு, முகாம்களிலும் முகாம்களுக்கு வெளியேயும்  வாழ்ந்துகொண்டிருக்கிற - பதிவு செய்திருக்கும் - இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை தர வேண்டும். அதன்பிறகு மற்ற இந்தியர்களைப் போல தம் உழைப்பாலும் திறமையாலும் அவர்கள் வாழ்க்கை நடத்த நாம் வழிவகுக்க வேண்டும்.
வங்கதேச அகதிகளும், இலங்கை அகதிகளும் தொடர்ந்து இந்தியாவுக்குள் வந்து  கொண்டே இருக்கிறார்கள். வங்கதேச அகதிகளில் பலர் அசாம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாக மாறி, இந்தியர்களிலிருந்து பிரித்தறிய முடியாதபடி கலந்துவிடுகின்றனர். இந்தியாவில் பணம் கொடுத்தால் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவது சிரமம்  அல்ல என்பதால், அந்த வாக்கு வங்கியை அசாம் மாநில அரசியல்வாதிகள் தக்க வைத்துக்கொண்டுள்ளனர்.
அதெல்லாம் போகட்டும், ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் தமிழக அரசியல் கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சி, முகாம்களில் வாழும் இலங்கை அகதிகள் பற்றிக் கவலைப்பட்டதுண்டா? குறைந்தபட்சம் ஏதாவது ஒரு அகதி முகாமுக்கு அந்தக் கட்சிகளின் தலைவர்கள் போனதுண்டா? போக மாட்டார்கள். காரணம், இலங்கை அகதிகள் வங்கதேச அகதிகள்போல இவர்களுக்கு வாக்கு வங்கிகளாகப் பயன்பட மாட்டார்கள். அவர்களால் இவர்களுக்கு அரசியல் ஆதாயமும் கிடையாது.
தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழர்களில் விருப்பமுள்ளவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பிவிட்டு, இங்கேயே வாழ விரும்புகிறவர்களுக்கு, இரட்டைக் குடியுரிமை வழங்க முடியாத நிலையில், இந்தியக் குடியுரிமையேகூட அளித்துவிட நாம் பரிசீலிக்க வேண்டும்.
இனியும் தமிழகத்தில் அகதிகள் முகாம்கள் தேவையில்லை!

No comments:

Post a Comment