22/04/2012

ஆரியன்- ஒரு பொய்வரலாறு


சிந்து சமவெளி நாகரிகம் பொது யுகத்துக்கு முன் மூன்றாம் ஆயிரமாண்டில் ஆரம்பித்தது. 2600-1900 வரையிலான காலகட்டத்தில் நகரமயமாகி உச்சத்தை எட்டியது. அதன் பிறகு வீழ்ந்தது. பொ.யு.மு. முதல் ஆயிரமாண்டில் கங்கைச் சமவெளியில் ஒரு புதிய நாகரிகம் உருவெடுக்கிறது. மூன்றாம் ஆயிரமாண்டுக்கும் முதலாம் ஆயிரமாண்டுக்கும் இடையிலான காலகட்டம் வேத இருண்ட காலம் என்று அழைக்கப்படுகிறது. அப்போது நடந்தது என்ன? அரசியலின் பெருவெளியில் உண்மையின் வேடம் பூண்டபடி முடிவற்று அலைகின்றன அபாயகரமான யூகங்கள். அந்த இரண்டாம் ஆயிரமாண்டு என்பது ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்த காலகட்டமாகச் சொல்லப்படுகிறது. குதிரைகளில் ஏறி வந்த ஆரியர்கள் பூர்வகுடிகளான திராவிடர்களைக் கொன்று அவர்களுடைய நகரங்களை நிர்மூலமாக்கினர். வேத கலாசாரத்தை இந்தியாவில் புகுத்தினர். வேதகால நாகரிகம் எனப்படும் அந்த கங்கைச் சமவெளி நாகரிகத்துக்கும் சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் இடையில் எந்தத் தொடர்பும் கிடையாது என்பதுதான் பொதுவாக நம் பள்ளிப் புத்தகங்களில் இன்றும் சொல்லித் தரப்படும் வரலாறு.

இதுதான் மத நம்பிக்கையைவிட படு மூர்க்கமாகப் பரப்பப்பட்டு வந்திருக்கும் கோட்பாடு. சமீபகாலமாகக் கிடைத்துவரும் ஆதாரங்களின் அடிப்படையில் முற்றிலும் நிராகரிக்கப்பட்ட நிலையிலும் ஆரியர் என்பவர் அந்நியர் என்பதே இன்றும், குறிப்பாகத் தமிழகத்தில், பதிந்துகிடக்கிறது.  The Lost River  என்ற நூலில் ஆசிரியர் மிஷல் தனினோ இந்தக் கோட்பாட்டின் அஸ்திவாரத்தை நிதானமாகத் தகர்த்திருக்கிறார்.

ஆரியர் படையெடுப்பு என்ற கற்பிதக் கோட்பாட்டை முன்வைப்பவர்கள் சரஸ்வதி நதி இந்தியாவில் பாய்ந்த நதியே அல்ல என்று சொல்கிறார்கள். இன்னும் சிலர் அப்படி ஒரு நதி இருந்திருக்கவே இல்லை. அது வேத கால ரிஷிகளின் கற்பனையில் உதித்த நதி மட்டுமே என்று சொல்கிறார்கள். ஏனென்றால், சிந்து சமவெளி நாகரிக குடியிருப்புகளில் பெரும்பாலானவை சரஸ்வதி நதிக்கரையில்தான் அமைந்திருக்கின்றன. ஒருவகையில் அந்த கலாசாரம் சிந்து -சரஸ்வதி கலாசாரம் என்றுதான் அழைக்கப்பட்டவேண்டும் என்று சொல்லும் அளவுக்கு சரஸ்வதி நதியால் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. அந்த நதி வறண்டதைத் தொடர்ந்து அந்த மக்கள் கிழக்கு நோக்கி அதாவது கங்கைச் சமவெளி நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். இதை ஒப்புக்கொண்டால், ஆரியர்களால் அழிக்கப்பட்ட சிந்து சமவெளி நாகரிகம் என்ற கோட்பாடு வலுவிழந்துவிடும் என்பதால், சரஸ்வதி நதி என்று ஒன்று இருந்திருக்கவே இல்லை என்கிறார்கள்.

இந்தக் காரணங்களால் மிஷல் தனினோ முதலில் சரஸ்வதி நதியின் முழு வரலாற்றை தனது நூலில் விரிவாகத் தொகுத்திருக்கிறார். சரஸ்வதி நதி தோன்றிய இடம், பாய்ந்து சென்ற வழித்தடங்கள், அது வறண்டவிதம், அதற்கான காரணங்கள், அது ஏற்படுத்திய தாக்கங்கள் என அனைத்தையும் பழங்கால சமஸ்கிருத இலங்கியங்களில் ஆரம்பித்து சமகால விஞ்ஞானபூர்வ ஆய்வுகள் வரை கிடைத்திருக்கும் அனைத்து ஆவணங்களின் அடிப்படையில் தொகுத்திருக்கிறார். அடுத்ததாக, அகழ்வாராய்ச்சி, கார்பன் டேட்டிங் உட்பட பல்வேறு துறை ஆராய்ச்சிகளின் அடிப்படையில் சிந்து சமவெளி நாகரிகத்தின் பிரமாண்டமான, முழுமையான சித்திரத்தை நம் முன் வைக்கிறார்.

சிந்து சமவெளி நாகரிகத்தின் நகரமயமாக்க காலகட்டம் பொ.யு.மு. 1900 வாக்கில் மறைந்தது என்பது இன்று அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று. சரஸ்வதியின் பிரதான நீரோட்டம் வறண்டு போனதும் அதே காலகட்டத்தில் என்பதை தட்ப வெப்பவியலில் ஆரம்பித்து ஆரம்பித்து கிணற்று நீரில் ஹைட்ரஜன்-ஆக்ஸிஜன் ஐசோடோப்பு சோதனை வரையான ஆய்வுகள் மூலம் நிரூபித்திருக்கிறார். மிக நேர்மையாக, கடந்த காலம் பற்றிய ஓர் அவதூறுக்கான விடையை நாமாகவே புரிந்துகொள்ளவைக்கிறார்.

ரிக்வேதத்தில் மிகவும் உயர்வாகப் புகழப்பட்டிருக்கும் சரஸ்வதி நதியானது இன்றைய கக்கர்-ஹக்ரா நதிதான் என்பதை லூயி தெ செயிண்ட் மார்த்தான், சி.எஃப்.ஒல்தாம் என்ற சர்ஜன் மேஜர், அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் (இந்திய அகழ்வாராய்ச்சித் துறைத் தலைவர்), லூயி ரெனேயு என பலரும் தங்கள் ஆய்வுகளின் அடிப்படையில் உறுதிப்படுத்தியிருக்கின்றனர். இந்த நதி இமய மலையில் ஷிவாலிக் தொடரில் கட்ச் ராண் பகுதியில் சென்று கலக்கிறது (ரிக் வேதத்தில் சரஸ்வதி நதி மலையில் ஆரம்பித்துக் கடலில் கலப்பதாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது). லூயி ரெனே சரஸ்வதி மறைந்ததாகச் சொல்லப்படும் விநாசனம் என்ற இடத்தையும் அடையாளப்படுத்தியிருக்கிறார். அந்தப் பகுதியில் இருந்த மக்கள் அங்கு ஒரு நதி ஓடியதாகவும் அது வறண்டதால் அந்தப் பகுதியில் மக்கள் தொகை குறைந்தது என்றும் சொல்லும் செவி வழிக் கதைகளையும் இந்த ஆய்வாளர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

20-ம் நூற்றாண்டில் செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் சரஸ்வதி நதியின் படுகை மிகத் தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டது. இன்று முழுவதும் வறண்டு கிடக்கும் அந்தப் பாலை நிலத்தில் நதி ஓடிய தடத்தில் மட்டும் ஈரப்பதம் மிகுதியாக இருப்பது புகைப்படங்களில் தெரியவந்தது. அந்த வழித்தடத்தில் கிணறுகள் தோண்டப்பட்டபோது மிகவும் நல்ல தண்ணீர் கிடைத்திருக்கிறது. அதுவும் இந்தியாவின் பிற பகுதிகளில் 100-200 அடி தோண்டியும் நீர் கிடைப்பது அரிதாக இருக்கும் நிலையில் கக்கர் ஹக்ரா நதி ஓடிய படுகையில் 20-30 மீட்டர் ஆழத்திலேயே நீர் கிடைக்கிறது. இவையெல்லாம் முன்னொரு காலத்தில் மிக பிரமாண்டமான நதி இங்கு பாய்ந்திருக்கிறது என்பதையே உணர்த்துகின்றன. சட்லெஜ் நதியை கக்கர் நதியுடன் இணைத்த ஏராளமான குறு நதிகளின் வலைப்பின்னலும் அந்த புகைப்படத்தில் தெரியவந்தது.

இதற்கு அடுத்ததாக மிஷல் தனினோ சரஸ்வதி நதியின் மறைவுக்கான காரணங்களைப் பட்டியலிடுகிறார். ஹரப்பா-மொஹஞ்ஜோதாரோ பகுதியில் ஏற்பட்ட வறட்சி ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார். பொ.யு.மு. இரண்டாம் ஆயிரமாண்டு வாக்கில் உலகில் எகிப்து, துருக்கி, மெசபடோமியா (அக்காடிய சாம்ராஜ்ஜியத்தின் முடிவைக் கொண்டுவந்தது), ஆஃப்ரிக்காவில் பல இடங்கள், சீனா, வட அமெரிக்கா போன்ற பல இடங்களும் இந்த வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, இந்த வறட்சிதான் சிந்து சமவெளி நாகரிகத்தின் அழிவுக்குக்காரணம் என்று சொல்வது ‘எளியதொரு’ பதிலாக இருக்கலாம். ஆனால், அதை முழுவதாகப் புறக்கணிப்பது தவறாகவே இருக்கும் என்கிறார்.

அடுத்ததாக, வட மேற்கு இந்தியாவில் நடக்கும் பூகம்பங்களின் வரலாற்றைக் குறிப்பிட்டுவிட்டு சரஸ்வதி நதி வறண்டதற்கு பூகம்பத்தின் பின் விளைவுகள் காரணமாக இருக்கலாம் என்றொரு காரணத்தை முன்வைக்கிறார். சிந்து சமவெளி முழுவதும் கிட்டத்தட்ட சமதளமானது. சிறிய அளவுக்கு மேடு அல்லது பள்ளம் ஏற்பட்டாலும் நதியின் திசையானது முற்றிலும் மாறிவிடும். ஆரம்பத்தில் கக்கர் ஹக்ரா நதிக்கு அதாவது சரஸ்வதி நதிக்கு சட்லெஜ் மற்றும் யமுனை நதியில் இருந்து நீர் கிடைத்துவந்திருக்கிறது. பூகம்பத்தினால் யமுனையில் இருந்து வந்த நீர் திசை மாற்றப்பட்டுவிட்டது. இதனால் கக்கர்-ஹக்ரா நதியின் நீர் வரத்து குறைந்துவிட்டது.

அடுத்ததாக, சிந்து சமவெளி மக்களில் நகரங்கள், கோட்டைகள், தெருக்கள், இன்னபிற கட்டுமானங்களைப் பார்க்கும்போது அவர்கள் சுட்ட செங்கல்களை மிக அதிகமாகப் பயன்படுத்தியிருப்பது தெரியவந்திருக்கிறது. இதற்கான சூளைகளுக்குத் தேவைப்பட்டிருக்கும் மரங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுபார்க்கும்போது அந்தப் பகுதியின் மழை குறைவுக்கு அதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கும்.

இப்படியான காரணங்களினால் கக்கர் ஹக்ரா நதி மெள்ள வறண்டு போய்விட்டிருக்கலாம் என்று ஆசிரியர் தெரிவித்திருக்கிறார்.

அடுத்ததாக, சிந்து சமவெளி நாகரிகம் அடியோடு மறைந்துபோய்விட்டது என்பதுதான் ஆரிய ஆக்கிரமிப்பு கோட்பாட்டாளர்களின் முக்கியமான வாதம். கங்கைச் சமவெளியில் முதல் ஆயிரமாண்டில் ஆரம்பித்த நாகரிகத்தில் அதன் தடயங்கள் இருப்பதை சுட்டிக்காட்டியதன் மூலம் சிந்து சமவெளி நாகரிகத்தின் தொடர்ச்சியே கங்கைச் சமவெளி நாகரிகம் என்பதை நிரூபித்திருக்கிறார். அதாவது சரஸ்வதியின் மறு அவதாரம் கங்கை. சிந்து சமவெளி நாகரிகத்தின் மறு அவதாரம் கங்கைச் சமவெளி வேத நாகரிகம்.

சிந்து சமவெளியில் கிடைத்திருக்கும் மண் பாண்டங்களில் காளை உருவம் பிரதானமாக பொறிக்கப்பட்டிருக்கிறது. வேதங்களில் அக்னி தேவனில் ஆரம்பித்து சூரியன் வரை அனைத்து கடவுள்களும் காளையுடனே ஒப்பிடப்பட்டிருக்கிறார்கள். அந்தவகையில் ஆரியர்கள் மத்தியில் மிகுந்த மதிப்புக்குரிய விலங்காக காளையே இருந்திருப்பது தெரியவருகிறது, குதிரை அல்ல.

அதுபோல் கட்டடங்களின் கட்டுமானத்திலும் இரண்டுக்கும் இடையில் மிகப் பெரிய ஒற்றுமை காணப்படுகிறது. இரண்டு கலாசாரங்களிலும் 5:4 என்ற விகிதம் பிரதானமாக இருக்கிறது. 1.9 மீட்டர் என்ற அலகின் மடங்கிலான கட்டுமானங்கள் காணப்படுகின்றன. ‘குந்துமணி’ என்ற ஒரு மிகச் சிறிய விதையை அடிப்படையாக வைத்துக்கொண்டுதான் அர்த்த சாஸ்திரக் காலத்தில் மற்ற எடைகளின் மதிப்பு நிர்ணயிக்கப்பட்டது. இதே மதிப்புகள் ஹரப்பா காலத்தில் பின்பற்றப்பட்ட எடைகளோடு வெகுவாகப் பொருந்துகின்றன என்று அளவியல் நிபுணர் (Metrologist) வி.பி.மெய்ன்கர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

மக்கள் தினமும் உபயோகிக்கும் பொருட்களும் பெரிதும் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து வந்திருப்பதாக பி.பி.லால் சுட்டிக்காட்டியுள்ளார். குளியல் பொருட்கள், எண்ணெய் விளக்கு, கமண்டலம், மர விளிம்புகொண்ட சிலேட்டுகள் ஆகியவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். விளையாட்டுப் பொருட்களிலும் ஹரப்பா குழந்தைகள் உபயோகித்த கிலுகிலுப்பை, ஊதல், பம்பரம், தட்டையான மண் தட்டுகள் ஆகியவற்றை வைத்துத்தான் இன்றைய (அல்லது மிக சமீப காலம் வரையிலும்) வட இந்திய குழந்தைகளும் விளையாடுகின்றனர். ஹரப்பாவாசிகளால் தங்கள் குழந்தைகளை மகிழ்விக்க செய்து தரப்பட்ட பொம்மை வண்டிகள் கங்கை சமவெளிப்பிரதேசத்தில் பல இடங்களில் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதிலும் பெண்கள் அணியும் வளையல்கள், நடு வகிட்டில் இட்டுக் கொள்ளும் குங்குமம் என பல விஷயங்களுக்கான வேர்கள் சிந்து சமவெளி நாகரிகத்தில் காணப்படுகின்றன. ஸ்வஸ்திக் சின்னம், முடிவில்லா முடிச்சு (ஸ்ரீகிருஷ்ணரின் பாதம் போன்ற வடிவம்), ஆதி சிவனை (பசுபதி) நினைவுபடுத்துவது போன்ற உருவம், யோக நிலையில் இருக்கும் உருவம் என சிந்து சமவெளி நாகரிகத்தில் காணப்படும் பல விஷயங்கள் வேத கலாசாரத்திலும் தொடர்ந்து காணப்படுகின்றன.

சுருக்கமாகச் சொல்வதானால், சிந்து நதி நாகரிகத்துக்கும் பிந்தைய சரித்திரக் கால நாகரிகங்களுக்கும் இடையே நிறையத் தொடர்புகள் இருக்கின்றன. பழைய விவசாய முறைகள், மேய்ச்சல் வழிமுறைகள் தொடர்கின்றன; மண்பாண்டத் தயாரிப்பு முறைகள் பெரிய அளவுக்கு மாறவில்லை. நகைகள், வேறு விலையுயர்ந்த பொருட்கள் ஆகியவற்றைத் தயாரிப்பதில் ஒரே மாதிரியான செயல்முறைகளும் வடிவமைப்புகளும்தான் பின்பற்றப்படுகின்றன… (ஆகவே) சரித்திரத்துக்கு முந்தைய காலத்தையும் சரித்திரக் காலத்தையும் பிரிக்கும் ‘இருண்ட காலம்’ என்று ஒன்று உண்மையில் இல்லை என்று அகழ்வாராய்ச்சியாளரும் மானுடவியலாளருமான ஜே.எம். கெனோயர் தெரிவித்திருக்கிறார்.

இந்தப் புத்தகத்தில் மிஷல் தனினோ முன்வைத்திருக்கும் ஆய்வுமுடிவுகளை இப்படித் தொகுக்கலாம்: இன்று வறண்டு கிடக்கும் கக்கர்-ஹக்ராதான் வேத கால சரஸ்வதி நதி; அந்த சரஸ்வதி நதிக்கரையில்தான் சிந்து சமவெளி நாகரிகத்தின் 60%க்கு மேற்பட்ட இடங்கள் இருந்திருக்கின்றன; பொ.யு.மு. 1900 வாக்கில் சரஸ்வதி நதி வறண்டுவிட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து சிந்து சமவெளி நகரமயமாக்க காலகட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. பிற்கால ஹரப்பாவினர் கிராமப் பகுதிகளுக்குத் திரும்பியிருக்கிறார்கள். மெள்ள தங்களை ஒன்று சேர்த்துக் கொண்டு கங்கைச் சமவெளியில் புதியதொரு வாழ்க்கையை வாழ ஆரம்பித்திருக்கிறார்கள். கலாசாரத்தில் ஆரம்பித்து லவுகீக அம்சங்கள் வரை அனைத்திலும் இரு சமவெளி நாகரிகங்களுக்கும் இடையில் தெளிவான ஒற்றுமைகள் இருக்கின்றன. தங்களை வாழ வைத்த சரஸ்வதியின் நினைவைப் போற்றும் வகையில் அதை கங்கை, யமுனை, நதிகளோடு சூட்சும வடிவில் கலந்ததாகச் சொல்லி திரிவேணி சங்கமம் என்ற ஒன்றை உருவாக்கி வழிபட்டு வந்திருக்கிறார்கள். சரஸ்வதி நதியின் அனைத்து பெருமைகளையும் கங்கைக்கு கைமாற்றித் தந்திருக்கிறார்கள்.

மிஷல் தனினோ மேலே சொல்லப்பட்டிருக்கும் தீர்மானங்களை மிக விரிவாகத் தெளிவான ஆதாரங்களுடன் நிரூபித்திருக்கிறார். சிந்து சமவெளி மக்கள் தொடர்பாக அகழ்வாராய்ச்சி சான்றுகள் கிடைத்திருக்கின்றன. வேத கால கங்கைச் சமவெளி நாகரிகம் பற்றிய எழுத்து வடிவ சான்றுகள் கிடைத்திருக்கின்றன. ஒன்றின் உடல் கிடைத்திருக்கிறது. இன்னொன்றின் தலை கிடைத்திருக்கிறது. அது ஒரே நபரின் உருவமே என்பதை ஒருவர் ஏற்றுக் கொள்ள மிகவும் அடிப்படையாகத் தேவைப்படும் ஒரு விஷயம் எளிய பகுத்தறிவு மட்டும்தான். நீங்கள் பகுத்தறிவு உள்ளவரா… அல்லாதவரா..? மிஷல் தனினோ மிக எளிதாக ஒரு கேள்வியை அமைதியாக முன்வைத்திருக்கிறார்.


மத்திய ஆசியாவில் இருந்து இந்தியா நோக்கி வந்ததாகச் சொல்லப்படும் அந்த ஆரியர்கள் அகழ்வாராய்ச்சியின் எந்தவொரு வரையறைக்கும் சிக்காதவர்களாகவே இருக்கிறார்கள். ஆரியர்கள் இந்த வழியாக வந்தனர்; இது ஆரியர்கள் உபயோகித்த வாள் அல்லது கோப்பை என்று சொல்லுமளவுக்கு எந்தவொரு மண்பாண்டமோ வேறு பொருளோ இதுவரை கிடைக்கவில்லை. - Jean Casal
ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்ததாகச் சொல்லப்படுவது பொ.யு.மு. 1500-1000 காலகட்டத்தில்தான். சிந்து சமவெளி நாகரிகம் சிதைவுற்றதோ பொ.யு.மு. 1900 வாக்கில். அதாவது ஆரியர்கள் வருவதற்கு சுமார் 400 வருடங்களுக்கு முன்பாகவே நடந்த ஒரு நிகழ்வுக்கு அவர்கள்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது!
ஆரியப் படையெடுப்பு எனும் கொலை வெறி கொண்ட காளை வரலாற்றின் குறுக்குச் சட்டத்துக்கு அப்பால் உறுமியபடி அலை பாய்ந்துகொண்டிருக்கிறது. பிரிவினையின் போதை ஏற்றப்பட்ட அதன் கோரமான விழிகள் பேரழிவின் கிலியை நமக்குள் விதைக்கின்றன. குறுகிய அரசியலின் வாடி வாசல் மெள்ளத் திறக்கப்படும்போது,அந்த வெறுப்பின் காளை மூர்க்கத்தனமாகப் பாய்ந்து வருகிறது. உண்மையின் நிலத்தில் காலூன்றியபடி நேருக்கு நேராக நின்று ஒருவர், அதன் ஒற்றைச் சார்பு தகவல்களின் கொம்புகளைப் பிடித்து மடக்கி, ஆதாரபூர்வமான தரவுகளின் காலால் போலி வாதங்களின் கழுத்தில் ஓங்கி மிதித்து அடக்குகிறார். கழுத்து மடங்கிய காளை தோல்வியின் நுரை தள்ளியபடி கண்கள் மலங்கக் கீழே விழுகிறது.
போட்டி முடிவுக்கு வந்துவிட்டது. வெற்றி ஊர்ஜிதமாகிவிட்டது. தோல்வியை நேர்மையாக ஒப்புக் கொள்வதும் அடங்கா காளையை வளர்த்தவனுக்கு அழகுதான்.

B.R. மகாதேவன்
(மிஷல் தனினோ ஆங்கிலத்தில் எழுதி பெங்குவின் வெளியீடாக வந்திருந்த Saraswati: The Lost River என்ற புத்தகத்தின் தமிழாக்கத்தை கிழக்கு பதிப்பகம் வெளியிடுகிறது. மொழிபெயர்த்திருப்பவர், வை. கிருஷ்ணமூர்த்தி

இந்துக்கள் மற்றும் இந்திய இஸ்லாமியர்

B.R.அம்பேத்கர் அவர்களின் கருத்துக்களின் ஒரு பகுதி

சமூக சீர்திருத்தங்களை முஸ்லீம்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என்ற கேள்விக்கு  ,இஸ்லாமின் போதனைகளுக்கு முரண்படுகின்ற பகுத்தறிவு பூர்வமான அனைத்துச் சிந்தனைகளையும் அது அடக்கி ஒடுக்குகிறது எனும் பதில் தெளிவானதாக இருந்தாலும் முழுவதும் உண்மையானதாக இருக்க முடியாது.




இது உண்மையான பதிலாக இருக்குமானால், இந்தியாவுக்கு வெளியே உள்ள அனைத்து முஸ்லீம் நாடுகளிலும் எழுச்சியும் கிளர்ச்சியும், கொந்தளிப்பும் குமுறலும் ஏற்படட்டிருக்கிறதே இதற்கு எப்படிச் சமாதனம் கூறமுடியும்?
அங்கெல்லாம் வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் ஆராயும் உணர்வு, மாற்றம் காணவேண்டுமென்ற உணர்வு, சீர்த்திருத்தம் செய்ய வேண்டுமென்ற  உணர்வு, சீர்த்திருத்தம் செய்ய வேண்டுமென்ற ஆர்வம் தோன்றியிருக்கிறதே இதற்கு எப்படி விளக்கம் தரமுடியும்?

உண்மையில், துருக்கியில் மேற்கொள்ளப் பட்டுள்ள சமூகச்  சீர்திருத்தங்கள் மிகவும் புரட்சிகரமானவை; இந்த நாடுகளைச் சேர்ந்த முஸ்லீம்களின் பாதையில் இஸ்லாம் குறுக்கிடவில்லை என்றால், இந்திய முஸ்லீம்களின் பாதையில் மட்டும் அது ஏன் குறுக்கிடவேண்டும்?

இந்தியாவிலுள்ள முஸ்லீம் சமுதாயத்தின் சமூக, அரசியல் தேக்கநிலைக்கு ஏதேனும் விசேடக் காரணம் இருக்க வேண்டும். அந்த விசேடக் காரணம் என்னவாக இருக்கமுடியும்?

இந்திய முசல்மானிடம் மாறுதல் காணும் உணர்வு இல்லாமலிருப்பதற்கு இந்தியாவில் அவன் வகிக்கும் பிரத்தியேக நிலைமையே காரணமாக இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது.

இந்துக்கள் மிகப்பெரும்பான்மையினாராக இருக்கும் ஒரு சமூகச் சூழலில் வசித்து வருகிறான். அந்த இந்துச் சூழல் எப்போதும் ஓசைப்படாமல், ஆனால் உறுதியாக அவன் மீது ஆக்கிரமிப்பு நடத்தி வருகிறது. அது தன்னை முசல்மானல்லாதவனாக்குவதாக அவன் எண்ணுகிறான்.

இவ்வாறு இந்துக்கள் தன்னைப் படிப்படியாகத் தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு அவன் தீவிரமாக முனைகிறான், இஸ்லாம் சம்பந்தப் பட்ட அனைத்தையும் பேணிப்பாதுகாக்கும் உணர்வை இது அவனுக்கு ஏற்படுத்துகிறது. இது தனது சமுதாயத்துக்கு நலன் பயக்குமா, அல்லது தீங்கு விளைவிக்குமா என்பதை அவன் சற்றும் எண்ணிப்பார்ப்பதில்லை.




.


இரண்டாவதாக, அரசியல் ரீதியிலும் இந்துக்களே மேலாதிக்கம் செலுத்தும் ஒரு சூழ்நிலையில் இந்திய முஸ்லீம்கள் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் தான் ஒடுக்கப்படுவோம் என்று இந்திய முஸ்லீம் உணர்கிறான். அந்த அரசியல் ஒடுக்குமுறை இந்திய முஸ்லீம்களை தாழ்த்தப்பட்ட வகுப்பினராக ஆக்கக்கூடும் என்று அவன் அஞ்சுகிறான்.

சமூக ரீதியிலும் அரசியல் ரீதியிலும் இந்துக்களால் மூழ்கடிக்கப்படக்கூடிய நிலையிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டுமென்ற அவனது இந்த உணர்வே, வெளி நாடுகளிலுள்ள தங்களது தோழர்களுடன் ஒப்பிடும்போது சமூக சீர்திருத்தம் விஷயத்தில் இந்திய முஸ்லீம்கள் பின்தங்கியிருப்பதற்குப் பிரதான காரணமாக இருக்கும் என்று என் மனத்துக்குப் படுகிறது.

சட்டமன்ற, ஸ்தல ஸ்தாபன இடங்களுக்காவும் அரசுப்பணிகளுக்காவும் இந்துக்களுக்கு எதிரான இடையறாத போராட்டத்தில் தங்கள் சக்தியையும் ஆற்றலையும் சர்வசதாவும் ஈடுபடுத்த வேண்டியுள்ள நிலைமையில் சமூகசீர்திருத்தங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதற்கான எண்ணமோ, அவகாசமோ, சந்தர்ப்பமோ அவர்களுக்குக் கிட்டுவதில்லை.

அப்படியே காட்டினாலும், வகுப்புப் பதற்றம் உச்சநிலையை அடையும்போது தங்களது சமூக-சமய ஒற்றுமையை எவ்வகையிலேனும் பாதுகாப்பதன் மூலம் இந்துக்களதும் இந்து மதத்தினதும் அபாயத்துக்கு எதிராக தங்கள் அணிகளை ஒன்றுதிரட்டி, ஓர் ஒன்றுபட்ட முன்னணியை உருவாக்க வேண்டும் என்ற ஆர்வம், வேட்கை மேலோங்கி இவற்றை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிடுகிறது.

இதே விளக்கம் இந்தியாவிலுள்ள முஸ்லீம் சமுதாயத்தின் அரசியல் தேக்கநிலைக்கும் பொருந்தும். முஸ்லீம் அரசியல் வாதிகள் மதச்சார்பற்ற வாழ்க்கை அம்சங்களை தங்கள் அரசியலுக்கு ஆதாரமாகக் கொள்வதில்லை. ஏனென்றால், இந்துக்களுக்கு எதிரான போராட்டத்தில் இது தங்கள் சமூகத்தைப் பலவீனப்படுத்தும் என்பது அவர்களது கருத்து.

இஸ்லாமியரின் தீயசெயல்களை இஸ்லாமியர் எதிர்ப்பதில்லை
செல்வந்தர்களிடமிருந்து நியாயம் பெறுவதற்காக ஏழை முஸ்லீம்கள் ஏழை இந்துக்களுடன் சேரமாட்டார்கள். நிலப்பிரபுவின் கொடுங்கோன்மையைத் தடுத்து நிறுத்துவதற்கு முஸ்லீம் குத்தகைக்காரர்கள் இந்து குத்தகைக்காரர்களுடன் சேரமாட்டார்கள்.

உழைப்புக்கும் மூலதனத்துக்கும் நடைபெறும் போரட்டத்தில் முஸ்லீம் தொழிலாளர்கள் இந்து தொழிலாளர்களுடன் சேர மாட்டார்கள். இது ஏன்?
இக்கேள்விக்கு மிக எளிதாகப் பதில் சொல்லி விடலாம். பணக்காரர்களுக்கு எதிராக ஏழைகள் நடத்தும் போராட்டத்தில் சேர்ந்தால் ஒரு முஸ்லீம் செல்வந்தரை எதிர்த்துத்தான் போராட வேண்டியிருக்கும் என்பதை ஓர் ஏழை முஸ்லீம் உணர்கிறான்.

நிலப்பிரபுவுக்கு எதிரான இயக்கத்தில் சேர்ந்தால் ஒரு முஸ்லீம் நிலப்பிரபுவை எதிர்த்துத் தான் போராடவேண்டும் என்று முஸ்லீம் குத்தகைக்காரன் பார்க்கிறான்.

முதலாளித்துவத்துக்கு எதிராக தொழிலாளி வர்க்கம் நடத்தும் தாக்குதலில்,  தான் ஈடுபட்டால் ஒரு முஸ்லீம் மில் உரிமையாளருக்கு ஊறுசெய்ய நேரிடும் என்று முஸ்லீம் தொழிலாளி நினைக்கிறான். ஒரு பணக்கார முஸ்லீமுக்கு, ஒரு முஸ்லீம் நிலப்பிரபுவுக்கு ஒரு முஸ்லீம் மில் முதலாளிக்கு எவ்வகையிலும் தீங்கு இழைப்பது முஸ்லீம் சமூகம் முழுவதுக்குமே செய்யப்படும் தீங்காக ஒரு முஸ்லீம் கருகிறான்.
இந்து சமூகத்திற்கு எதிரான போராட்டத்தில் இது முஸ்லீம்களைப் பலவீனப்படுத்தும் என்று கருதுகிறான்


எப்போது ஜனநாயகம், எப்போது எதேச்சதிகாரம் ?





முஸ்லீம் அரசியல் எவ்விதம் நெறிபிறழ்ந்து ஏறுமாறானப் போக்கில் செல்லுகிறது என்பதை சமஸ்தானங்களில் மேற்கொள்ளப்படும் அரசியல் சீர்திருத்தங்கள் சம்பந்தமாக முஸ்லீம் தலைவர்கள் நடந்துகொள்ளும் முறையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

இந்து சமஸ்தானமான காஷ்மீரில் பிரதிநிதித்துவ ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று கோரி முஸ்லீம்களும் அவர்களுடைய தலைவர்களும் பெரும் கிளர்ச்சி நடத்தினர்.

இதே முஸ்லீம்களும் அவர்களுடைய தலைவர்களும் இதர முஸ்லீம் சமஸ்தானங்களில் பிரதிநிதித்துவ அரசாங்கம் அமைக்கப்படுவதைக் கடுமையாக எதிர்த்தனர். இந்த விந்தையான, விபரீதமான போக்குக்கான காரணத்தைப் புரிந்து கொள்வது மிகவும் சுலபம்.

இவை யாவற்றிலும் முஸ்லீம்களைப் பொறுத்தவரையில் தீர்மானமான அம்சம் இந்துக்களுடன் ஒப்பிடும் போது இது எந்த அளவுக்கு முஸ்லீம்களைப் பாதிக்கும் என்பது தான். பிரதிநிதித்துவ அரசாங்கம் அமைப்பது முஸ்லீம்களுக்கு அனுகூலமானது என்றால் அதை அவர்கள் கோருவார்கள், அதற்காகப் போராடுவார்கள்.

காஷ்மீர் சமஸ்தானத்தில் மன்னர் இந்து, ஆனால் பெரும்பான்மையான குடிமக்கள் முஸ்லீம்கள். காஷ்மீரில் பிரதிநிதித்துவ அரசாங்கம் அமையவேண்டும் என்று முஸ்லீம்கள் போராடுவார்கள் என்றால் அதற்கு காரணம் இருக்கிறது. அதாவது காஷ்மீர் பிரதிநிதித்துவ அரசாங்கம் என்பது ஆட்சி அதிகாரம் இந்து மன்னரிடமிருந்து முஸ்லீம் மக்களுக்கு மாறுவதைக் குறிக்கும். இதனாலேயே இங்கு அவர்கள் பிரதிநிதித்துவ அரசாங்கத்தைக் கோரினார்கள்.


இதர முஸ்லீம் சமஸ்தானங்களில் மன்னர் முஸ்லீம்; ஆனால் அவருடைய பெரும்பான்மையான குடிமக்கள் இந்துக்கள். இத்தகைய சமஸ்தானங்களில் பிரதிநிதித்துவ அரசாங்கத்தை நிறுவுவது என்பதற்கு முஸ்லீம் மன்னரிடமிருந்து இந்து மக்களுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்றுவது என்றே பொருள்படும். இதனால்தான் முஸ்லீம்கள் இரட்டை வேடம் போட்டார்கள்.
ஓரிடத்தில் பிரதிநிதித்துவ அரசாங்கம் அமைக்கப்படுவதை ஆதரித்தார்கள், இன்னோரிடத்தில் அதை எதிர்த்தார்கள். இதில் முஸ்லீம்களின் தலையாய நோக்கம் ஜனநாயகமல்ல.

பெரும்பான்மையினரின் கட்சியுடன் கூடிய ஜனநாயகம் இந்துக்களுக்கு எதிரான போரட்டத்தில் முஸ்லீம்களை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பது தான் அவர்களது பிரதான அக்கறை. இது அவர்களை வலுப்படுத்துமா அல்லது பலவீனப்படுத்துமா?

ஜனநாயகம் அவர்களைப் பலவீனம் படுத்துமானால் ஜனநாயகம் அவர்களுக்கு வேண்டியதில்லை, அதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். இந்துக் குடிமக்கள் மீது முஸ்லீம் மன்னருக்குள்ள பிடிதளர்வதைவிட முஸ்லீம் சமஸ்தானங்களில் சீரழிந்து போன ஊழல் ஆட்சி நீடிப்பதையே அவர்கள் விரும்புவார்கள்.

இந்துக்களும், இஸ்லாமியரும் ஏன் சண்டை போடுகிறார்கள்?

முஸ்லீம் சமூகத்தின் அரசியல், சமூகத் தேக்கநிலைக்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்கமுடியும். அந்தக் காரணம் இதுதான். இந்துக்களும் முஸ்லீம்களும் என்றைக்கும் போராடிக் கொண்டிருக்க வேண்டும் என்று முஸ்லீம்கள் நினைக்கிறார்கள்.

இந்துக்கள், முஸ்லீம்கள் மீது தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிடவும், முஸ்லீம்கள் ஆளும் சமூகமென்ற தங்களது கடந்தகால வரலாற்று நிலையை உறுதிப்படுத்தவும் போராடுகிறார்கள் – இந்தப் போராட்டத்தில் வலிமைதான் வெற்றிபெறும்.

இந்த வலிமையைப் பெறுவதற்கு அவர்கள் தங்கள்  அணிகளில் பிளவு ஏற்படுத்தக்கூடிய சகலவற்றையும் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் அல்லது மூட்டை கட்டி வைக்க வேண்டும்.

ஏனைய நாடுகளிலுள்ள முஸ்லீம்கள் தங்கள் சமுதாயத்தைச் சீர்திருத்தம் செய்யும் பணியை மேற்கொண்டிருக்கும்போது, இந்தியாவிலுள்ள முஸ்லீம்கள் அவ்வாறு செய்ய மறுக்கிறார்கள்; ஏனென்றால், முன்னர் குறிப்பிட்டவர்கள் தங்கள் போட்டி சமூகங்களுடன் வகுப்புவாத மற்றும் அரசியல் சச்சரவுகளில் ஈடுபடும் நிலையிலிருந்து விடுபட்டிருப்பதும், பின்னர் குறிப்பிட்டவர்கள் அத்தகைய நிலையில் இல்லாதிருப்பதுமே இதற்குக் காரணம்.’
என்று கூறுகிறார் அம்பேத்கர்.

இஸ்லாம் மற்றும் முஸ்லீம்கள் பற்றிய அம்பேத்கரின் இந்த எண்ணங்கள் ‘பாகிஸ்தான் அல்லது இந்தியப்பிரிவினை’ என்ற நூலில் தெளிவாக கூறப்பட்டிருக்கின்றன.

இந்த எண்ணங்களே அவரை ஆட்கொண்டிருந்தன. தான் எதற்கு மதம் மாறுகிறோம் என்பதைத் தெளிவாக அறிந்திருந்த அம்பேத்கர், தம் எண்ணங்களுக்கு, கொள்கைகளுக்கு எதிராக இருந்த இஸ்லாமில் மதம் மாறவில்லை.


ஆரிய,திராவிட இனவாதம்



நமது நாட்டில் பிரிவினையைத் தூண்டி அரசியல் செய்து ஆட்சியில் அமர்வதும்,பின் நெறிகெட்ட வகையில் சொத்து சேர்ப்பதும் வாடிக்கையாகிவிட்டது.அந்த வகையில் ஐரோப்பியரால் தொடங்கப்பட்டு சுயநலவாதிகளால் இன்றும் பரப்பப்பட்டு வருவது ஆரிய,திராவிட இனவாதம்.
பொய்களாலும்,திரித்தல்களாலும் புனையப்பட்ட இந்த பிரிவினைக் கோட்பாட்டின் முரண்பாடுகளைக் காணலாம்
அவை

1.   ஆரியர்கள் வெண்நிற தோலும்,திராவிடர்கள் கருப்புநிற தோலும் உடையவர்கள்
2.   இராமாயணம்,மஹாபாரதம் போன்றவை ஆரியர்கள் திராவிடர்களைத் துன்புறுத்திய வரலாறு
3.   ஆரியர்கள்,இந்தியாவுக்கு வெளியிலிருந்து வந்தவர்கள்

ஆனால்,ஆரியர்களின் காப்பியங்களில் ஒன்று எனப்படும் மஹாபாரதத்தின் நாயகன் கிருஷ்ணன், கருப்புதோலுடைய யாதவகுலத்தைச் சேர்ந்தவன்.

மற்றொரு ஆரியனான அயோத்தி ராமனின் நிறமும் கருப்பு

தமிழர்களின் (திராவிடர்களின்) தனி கடவுள் முருகனோ சிகப்புநிறம், நாம் நல்ல வெள்ளை நிறமுடையோரை “நல்ல சிகப்பு” என்றுதானே அழைக்கிறோம். அப்பன் முருகபெருமானும் ஆரிய இனமோ?

நாத்திகர்களுக்கு அதைப்பற்றிக் கவலை இல்லை,அவர்களுக்கு, குழப்பத்தை ஏற்படுத்த ஏதாவது வேண்டுமென்றால் கடவுள், புராணம், அதில் உள்ள கடவுளின் நிறம் எல்லாம் உண்மை, மக்கள் நல்லவர்களாக வாழ ஆன்மிகத்தை நாடினால் கடவுள் பொய், புராணம் கட்டுக்கதை.

மாற்றுக்கட்சியில் செல்வாக்கான நபர் பிராமணராக இருந்தால் அவர் ஆரியன், ஆகாதவன், இராவணகாவியம் பாடவேண்டும் என்றால் பிராமணரான இராவணன் திராவிடனாக மாறுகிறார், இது எப்படி என்று புரியவில்லை.

இந்திய வேதங்களையும், பாரசிக “அவெஸ்தா” வையும் தவிர உலகில் வேறெந்த பழைமையான மொழியிலும் “ஆரிய” அல்லது “ஆரியன்” எனும் வார்த்தை இல்லை. அவற்றிலும்கூட அவ்வார்த்தை எந்த ஒரு இனத்தையோ, குலத்தையோ, ஜாதியையோ குறிப்பிடவில்லை. மாறாக அது அரசர்,குரு அல்லது கடவுளை உயர்த்திச்சொல்லப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

19ஆம் நூற்றாண்டுவாக்கில், மாக்ஸ்முல்லரின் ஆரியப்படையெடுப்புக் கோட்பாட்டின் தாக்கத்தால் இவ்வார்த்தைக்கு புது அர்த்தம் கிடைத்தது. ஆரியர்கள் ஐரோப்பாவிலிருந்து வந்தனர் எனும் இந்தப் புரளியின் நோக்கம் வெள்ளையர்களுக்கு பொய்யானதொரு பெருமித உணர்வைத்தருவதும் பிறரது சுயமரியாதையைக் குலைப்பதுமாகும்.

ஒரு தேசத்தை அழிப்பதற்கு முதல்படி அதன் வரலாற்றை, பெருமையை அம்மக்களின் நினைவுகளிலிருது அழிப்பது, பின் அதன் இலக்கியம்,கலை,பண்பாடு அகியவற்றை அழித்து யாரோ ஒருவரைக் கொண்டு புதிய வரலாறு படைப்பது, (இன்றைய தமிழ் எழுத்துமுறை ஒரு கிருத்துவ பாதிரியாரால் புதுப்பிக்கப்பட்டது-விளைவு, நமது முன்னோர்களை நம்மால் படிக்கமுடியவில்லை அதற்கு ஒரு நிபுணர் வேண்டும்),அவர்களது முன்னோர்களுடன் அவர்களுக்குள்ள தொடர்பைத் துண்டிப்பது.

ஆரிய,திராவிட இனவாதம் இதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு. “ஆரிய” என்றால் உயர்ந்த என்பது மட்டுமே பொருள்.


“நமது வேதங்களிலோ, புராணங்களிலோ ஆரியர்கள் இந்தியாவிற்கு வெளியிலிருந்து வந்தனர் என்பதற்கு ஆதாரமாக ஒரு வர்த்தைகூட இல்லை.”
இது சுவாமி விவேகானந்தரின் கூற்று

“தமிழ்” எனும் பிராகிருத வார்த்தை “திராவிட” என சமஸ்கிருதமொழியில் சொல்லப்பட்டுள்ளது

ஆகவே ஆரியன் திரவிடன் என்பது இருவேறு இனங்களல்ல, ஒரே இனம்தான்.

ஜாதி மற்றும் வர்ணாசிரமம்



இந்தியாவையும்,இதன் தொன் மதத்தையும் குறைசொல்ல நீதிநூல்களில் காணப்படும் வர்ணாசிரமம் பற்றியகுறிப்புகளும்,சமுதாயத்தில் காணப்படும் ஜாதி முறையும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.ஆகவே அதைப்பற்றி இங்கு சற்று ஆராயலாம்

முதலவதாக,இந்த ஜாதி பிரிவுகள் எப்படி ஏற்பட்டன எனப்பார்ப்போம்

“ஜாதி” என்பது என்ன?

“ஜாதி” எனும் பதம் எங்கிருந்து வந்தது?

எப்பொழுது முதன்முறையாக “ஜாதி” அடிப்படையில் பாரத சமுதாயம் பிரிக்கப்பட்டது?

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆளத்துவங்கிய 1700 களில் ,அவர்களது நிர்வாக வசதிக்காக இம் மண்ணின் மதங்க்களான,வைஷ்ணவம்,சைவம், சாக்த்தம்,காணபத்யம்,கௌமாரம் மற்றும் சௌரம் ஆகிய மதங்களை (ஷண்மதம்) ஒரே பிரிவாகக் குறித்து “ஹிந்து” மதம் எனப்பெயரிட்டனர்.

இந்நிலையில் 1857 ஆம் ஆண்டு நிகழ்ந்த முதல் இந்திய விடுதலைப் போரும், அதற்கும் முன்பிருந்தே மக்கள் ஒன்றினைந்து ஆங்கிலேயருக்கு எதிராகப் பொராடத் தொடங்கி இருந்ததும்,இந்தியாவை அடக்க பல்வறு வழிகளைத்தேட ஆங்கிலேயரைத் தூண்டின.அதன் விளைவு “பிரித்தாளும் கொள்கை”.

இந்திய மக்களைப் பிரித்துவைக்க பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் 1871 ஆம் ஆண்டு முதல் ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தொடங்கி சமுதாயத்தில் குழப்பத்தையும் சச்சரவுகளையும் ஏற்படுத்தி வைத்தனர்.

இந்திய சமுதாயம் 4 வித ஜாதி பிரிவுகளின் அடிப்படையில் அமைந்துள்ளபோது நாம் ஆங்கிலேயரை குறைகூறுவது உங்களுக்கு வியப்பைத் தரலாம்.

இந்திய சமுதாயம் பல்லாயிரம் வருடங்களாக பன்முகத்தன்மை கொண்ட ஜாதி-வர்ண சமூக முறையைப் பின்பற்றி வருகிறது.

“ஜாதி” எனும் வார்த்தையை ஆராய்ந்து பர்த்தால் அதன் பொருள் பிறப்பை குறிக்கும் “ஜனனம்” என்பதைச் சுட்டும்.அதாவது “ஜாதி” என்பது ஒருவர் பிறந்த குடும்பத்தைக் குறிக்கும்,வம்சாவழியைக் குறிக்கும் சொல்லாகும்.

இப்பொழுது மாறுபாட்டுக்கு உரியதாகக் காணப்படும் வர்ணம் எனும் பதத்திற்கு வருவோம், வர்ணங்களில் 4 பிரிவுகள் உள்ளன. அவை, பிராமண,ஷத்ரிய,வைசிய மற்றும் சூத்ர.

“வர்ண” என்றால் பொதுவாக அது நிறங்களைக் குறிக்கும் வார்த்தை ஆகும். ஆகவே இது தோலின் நிறங்களின் அடிப்படையில் அமைந்த பாகுபாடு என புத்திசாலி வெள்ளைக்கார அறிஞர்கள் தவறாகப் புரிந்துகொண்டு (அல்லது வேண்டுமென்றே),அவ்வாறே அக்கருத்தைப் பரப்பிவிட்டனர்.

“வர்ண”  என்பதன் முதன்மைப் பொருள் “தேர்வு” என்பதாகும்,எடுத்துக்காட்டாக பெரியவர்கள் பார்த்து நடத்திவைக்கும் திருமணங்களில் பொருத்தமான பெண் அல்லது பிள்ளையை தேடும்பொழுது விருப்பத்தேர்வுநிலையில் உள்ள பெண் அல்லது பிள்ளையைக் குறிக்கப் பயன்படுவது “வர” எனும் வார்த்தையாகும். ஆகவே ”வர”  மற்றும் ”வர்ண”  ஆகிய்வற்றின் பொருள் விருப்பத்தேர்வு என்பதாகும்.இதிலிருந்து ”வர்ண”  என்பது ஒரு தனிமனிதனின் விருப்பத்தேர்வுக்கு உட்பட்டது என்பது புலனாகும்.

எந்த ஒரு தனிமனிதனும் தனது விருப்பத்தின்படி மேற்குறிப்பிட்ட 4 வர்ணங்களில் ஏதேனும்ஒன்றைத் தெரிவுசெய்து கொள்ளலாம் எனும் நிலையே பண்டைய இந்தியாவில் இருந்தது.





ஜாதி-வர்ண அமைப்பில், ஜாதி ஒருவருடைய குடும்பத்தை, பிறப்பை, வம்சத்தைக் குறிக்கக்கூடியது.ஆகவே ஒருவரது வாழ்க்கை முழுவதும் மாறாதது. வர்ணம் ஒருவர், தனது விருப்பத்தைப் பொருத்து தேர்வு செய்யக் கூடியது. இவ்வாறுதான் இந்த சமுதாயம் அமைக்கப்பட்டு கடந்த 5000 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்துள்ளது.

ஒரு குறிப்பிட்ட ஜாதியில் பிறந்த ஒருவர் தனது பெற்றோர் கடைபிடித்த வர்ணத்தை,தனது ஜாதியைச் சார்ந்த பலர் மேற்கொண்ட வர்ணத்தைக் கடைபிடிப்பது இயல்பு, அதனால் ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சார்ந்தபலர் ஒரு குறிப்பிட்ட வர்ணத்தைக் கடைபிடித்தனர் இதனாலும் ஜாதி-வர்ண அமைப்பு பற்றி குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஒருவர் எந்த ஜாதியில் பிறந்து எந்த வர்ணத்தை மேற்கொண்டாலும் அதிலிருந்து விருப்பப்பட்ட வர்ணத்திற்கு மாறிக்கொள்ளலாம் எனும் நிலை நமது சமுதாயத்தில் இருந்து வந்துள்ளது.


மேலும் வர்ணப்பிரிவு என்பது செய்யும் தொழிலின் அடிப்படையில் அமைந்த ஒன்றாகும். மேற்கண்ட நடைமுறை மூலம் சமுதாயத்திற்கு வேண்டிய தொழில் அறிவு இடையறாது பேணப்பட்டு வந்தது.


நமது வரலாற்றில் ஒரு வர்ணத்திலிருந்து வேறு வர்ணத்திற்கு மாறிய மாமனிதர்கள் பலர் உள்ளனர்- மாமன்னர்கள்,ரிஷிகள்,பெரும் வியாபாரிகள் பலர் இவ்வாறு வந்தவர்கள்தான்.இதையே தமிழ் புலவர் வள்ளுவரும

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ; சிறப்பு ஒவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் 

எனக் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு நெகிழ்வுதன்மை மற்றும் புரிந்துணர்வோடு கூடியதாக இருந்த சமுதாயத்தில் சாதி உணர்வை புகுத்தி குழப்பத்தை ஏற்படுத்தியது ஆங்கிலேயரின் “பிரித்தாளும்” சூழ்ச்சிதான் அதே முறையைப் பயன்படுத்தி தற்போது அரசியல்வா(வியா)திகள் மக்களுக்குள் பிரிவினையைத் தூண்டி வருகின்றனர்.இதனால் எந்த ஜாதிக்காரரும் பலனடைவது இல்லை,பலனடைவது என்னவோ பணம் குவிக்கும் ஊழல் அரசியல்வாதிதான்.

ஆகவே பொதுமக்களாகிய நாம்தான் இந்த சூழ்ச்சி வலைகளில் சிக்காமல் இருக்கவேண்டும்.

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்
பட்டாங்கில் உள்ள படி. _ நல்வழி,ஔவையார்


எனும் ஔவையாரின் வாக்கின்படியும்,திருக்குறள் காட்டிய நெறிபடியும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பது பிறப்பால் வருவதல்ல அது நாம் வாழும் வாழ்க்கைமுறையால் வருவது என்பதை உணர்ந்து நல்வாழ்வு வாழ்வோமாக.

மனுதர்மம்-2


முந்தைய பாகத்தில் மனு ஸ்மிருதி என்பது என்ன என்பதைப் பற்றியும், அதிலிருந்து சில விளக்கங்களையும் பார்த்தோம். இப்பாகத்தில் மனு ஸ்மிருதி பற்றி மேலும் அலசுவோம்.
பின்வரும் ஸ்லோகங்கள் மனுஸ்மிருதியில் இடம் பெற்றுள்ளன.
‘சூத்ரோ ப்ராமணதாமேதி ப்ராமணஸ்சைதி சூத்ரதாம்
க்ஷத்ரியாஜ்ஜாதவேதம் து வித்யாத்வைச்யாத்ததைவ ச’
அதாவது – ‘சூத்திரன் பிராமணனாகி விடலாம்; பிராமணனும் சூத்திரனாகலாம்; அதே போல், க்ஷத்ரிய மற்றும் வைசிய வர்ணங்களைச் சார்ந்தவர்களின் மகன்களும், மகள்களும் வேறு வர்ணத்தை அடையலாம்’. ஆக, சூத்திரர்கள் வேதம் கற்கக் கூடாது என்று சொல்லும் அதே மனு தர்மம்தான் அவர்கள் வேதம் ஓதும் பிராமணர்கள் ஆகலாம் என்று சொல்கிறது. இதை மற்றோர் விதமாய் சொல்ல வேண்டுமானால், வேதம் ஓத விருப்பம் தெரிவிப்பவன் பிராமணனாக மாறியே அவ்வாறு செய்ய இயலுமேயன்றி சூத்திரனாகவே இருந்து செய்ய இயலாது.  இதில் யாரும் எந்த வகையிலும் தடுக்கப்படவோ ஒடுக்கப்படவோ இல்லை.
அப்ராம்ணாத் அத்யயனம் ஆபத்காலே விதியதே
அனுவ்ரஜா ச சுச்ரூஷா யாவத் அத்யயனம் குரோ:
அதாவது, தவிர்க்க முடியாத காலங்களில் ஒரு பிராமண மாணவன் பிராமணன் அல்லாத குருவிடமிருந்து கல்வி கற்கலாம். அவ்வாறு செய்கையில் அம்மாணவன் அக்குருவிற்கு பணிவிடை செய்ய வேண்டும்.
பிற்போக்கு கண்ணோட்டத்துடன் மனுஸ்ம்ருதியை  அணுகும் முற்போக்குவாதிகளின் கண்களில் முன்னுக்குப்பின் முரணாக தென்படும் இந்த தர்மங்களுக்கு பின்னால் ஆதவனென பிரகாசிக்கும் உண்மை – மனுஸ்ம்ருதி ஜாதி அடிப்படையில் அமைக்கப்பட்டது அல்ல என்பதே.  ஒரு சமூகத்தின் அனைத்து அங்கங்களும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்பட்டால் மட்டுமே சமூக நலன் காக்க முடியும் என்ற கருத்தே இந்த தர்ம நூலின் அடிப்படை. அனைவருமே வேதம் கற்க வந்தாலோ அனைவருமே விவசாயம் செய்யத்தொடங்கினாலோ சமூகத்தில் சீரமைப்பு இருக்க வழியில்லை. வழி வழியாக ஒரு தொழிலை ஒரு குடும்பத்தினர் செய்கையில் அவர்கள் ரத்தத்தில் அது ஊறி விடுமென்று மனுஸ்ம்ருதி கூறுவது முட்டாள்த்தனம். ஆனால் ‘ஜீன்’ எனப்படும் மரபணுக்கள் நம் முன்னோர்களிடம் இருந்து வருகிறது. அதன் மூலமாகவே பல குணங்களை நாம் பெறுகிறோம் என்று ஆங்கிலேயன் கூறினால் அது விஞ்ஞானம்!
எந்த ஒரு தர்ம சாத்திரத்தையும் அதன் உண்மையன பொருளுணரமல் வார்த்தைக்கு வார்த்தை அமல்படுத்துவது நடைமுறைக்கு ஒவ்வாத ஒரு விஷயம்!  அது மனு தர்மத்திற்கும் முற்றிலும் பொருந்தும். மனுவின் நீதிகள் அனைத்தையும் ஒரு அரசன் அமல்படுத்த வேண்டியதில்லை. அந்த ராஜ்ஜியத்திற்கு, மக்களின் வாழ்க்கை முறைக்கு எது தேவையோ அவற்றை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். அவ்வாறே மனுவின் நீதிகளும் கூட வகுக்கப்பட்டுள்ளன.]
நான் முந்தைய பதிவில் சொன்னதுபோல் மனு பிராமணர்களுக்கு சில சலுகைகளை வழங்கினாலும், மிகக் கடுமையான விதிகளை விதிக்கிறான். வேதம் ஓதி, சாஸ்திர முறைப்படி வாழாத பிராமணனை மனு தர்மம் மிகக் கடுமையாக அணுகுகிறது.
‘மற்றவர் பொருளில் விருப்பம் வைத்து, பொய்யைப் பரப்பி, கர்வம் கொண்டு, பொறாமை உடைய பிராமணன் பூனையின் குணம் கொண்டவன். இப்படிப்பட்ட குணமுடைய பிராமணன் நரகத்தில் வீழ்கிறான். பூனை குணம் கொண்ட பிராமணனுக்கோ, விரதமுடையவன் போன்ற வேடம் போடுகிற பிராமணனுக்கோ, வேதங்களை முறையாகப் பயிலாத பிராமணனுக்கோ, நன்னடத்தை கொண்ட எவனோருவனும் ஒரு சிறிய தானத்தைக் கூட செய்து விடுதல் கூடாது. அவ்வாறு செய்தால் தானம் வாங்கியவனோடு சேர்ந்து தானம் கொடுத்தவனும் துன்பத்தையே அனுபவிப்பான்.’
அனைத்திற்கும் மேல் நான்கு வர்ணங்களைத் தவிர ஐந்தாவது பிரிவு என்றொன்று கிடையாது என்பதை மனு தர்மம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது.
அஜ்யேஷ்டாஸோ அகனிஷ்டாஸ ஏதே
ஸம் ப்ராதரோ வாவ்ருது: ஸௌபகாய
(ரிக்)
பொருள்:  உங்க‌ளில் உய‌ர்ந்த‌வ‌ர் தாழ்ந்தவ‌ர் என்று யாரும் கிடையாது. நீங்க‌ள் அனைவ‌ரும் ச‌கோத‌ர‌ர்க‌ளே! என‌வே ஒன்றுப‌ட்டு வாழ்வீர்க‌ளாக‌, மேன்மைய‌டைவீர்க‌ளாக‌!
நன்றி:நேர் கொண்டபார்வையிலிருந்து எடுத்து திருத்தி வெளியிட்டது